Published : 10 Jan 2014 06:13 PM
Last Updated : 10 Jan 2014 06:13 PM
அஜித்தின் லுக், மாஸ் வசனங்கள், சந்தானத்தின் காமெடி, கலர் ஃபுல் பாடல்கள் என அனைத்தையும் சேர்த்து பொங்கல் ட்ரீட்டாக இருக்கிறது 'வீரம்'
கல்யாணம் செய்து கொண்டால், மனைவி தனது தம்பிகளை தன்னிடம் இருந்து பிரித்துவிடுவார் என்று கல்யாணமே செய்து கொள்ளாமல் இருக்கிறார் அஜித். 4 தம்பிகள், சந்தானம் இணைந்து தமன்னாவை காதலிக்க வைக்கிறார்கள். ஊரில் தனது எதிரிகளை பந்தாடும் அஜித், தமன்னா ஊருக்கு ரயிலில் செல்லும் போது மேலும் சிலரை துவைத்தெடுக்கிறார்.
அஜித்தின் உண்மையான முகம் தமன்னாவிற்கு தெரியவருகிறது. தமன்னாவின் அப்பா நாசருக்கு அடிதடி என்றால் பிடிக்காது என்பதால் அடிதடியை விட்டுவிட்டு தமன்னா வீட்டில் தம்பிகளுடன் தங்குகிறார். ரயிலில் வந்த எதிரிகள் தன்னை கொல்ல வரவில்லை, தமன்னாவை கொல்ல வந்திருக்கிறார்கள் என்றும், எதிரிகளால் நாசர் குடும்பத்திற்கு ஆபத்து என்று தெரியவர, அஜித்தும் அவரது தம்பிகளும் சேர்ந்து அந்த குடும்பத்தினரை காப்பாற்றினார்களா, அஜித் தமன்னாவை திருமணம் செய்து கொண்டாரா என்பது தான் கதை.
படத்தில் முதல் ஸ்பெஷல் அஜித். விநாயகமாக படம் முழுவதும் வேட்டி சட்டையில் களம் இறங்கி இருக்கிறார். தம்பிகளோடு எதிரிகளை பந்தாடும்போதும், கோப்பெருந்தேவி என்ற பெயரைக் கேட்டு விட்டு தமன்னாவை பார்க்கப் போகும்போதும், ரயிலில் சண்டைக் காட்சி ரிஸ்க் எடுத்து நடித்திருக்கும் காட்சிகள் என ஒன்மேன் ஷோ காட்டியிருக்கிறார். அஜித்தைத் தொடர்ந்து இப்படத்திற்கு பெரிய பலம் என்றால் சந்தானம். அஜித்தை காதலிக்க வைக்க இவர் கொடுக்கும் ஐடியாக்களால் மட்டுமன்றி, அவர் வரும் காட்சிகளில் தனது ஒருவரி வசனங்களால் சிரிப்பு சரவெடியாக தன்னை நிரூபித்து இருக்கிறார்.
தமிழில் மீண்டும் தம்ன்னா. அஜித்தை காதலிக்கும்போதும், உண்மையான முகம் தெரிந்தவுடன் அவரை நினைத்து ஏங்குவதும் வெல்கம் பேக் தமன்னா. வித்தார்த், சுகைல், பாலா, பிரதீப், தம்பி ராமையா, அதுல் குல்கர்னி, அப்புக்குட்டி உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படம் பார்க்க வரும் அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து இருக்கிறார் சிவா.
சிவாவின் பரபர திரைக்கதைக்கு பரதனின் வசனம் மிகப்பெரிய பலம். வில்லன்களிடம் அஜித் சவால் விடும் காட்சிகள், தமன்னாவின் காதல் காட்சிகள், காமெடி காட்சிகள் என வசனங்களால் வசீகரிக்கிறார். மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் சில்வா. அதுமட்டுமன்றி, இடைவேளையில் வரும் ரயில் சண்டைக்காட்சியை பிரமாதமாக அமைத்திருக்கிறார். அதில் அஜித்தின் ரிஸ்க், வெற்றியின் ஒளிப்பதிவு என கூட்டணி அமைத்து, விறுவிறுப்பை ஏற்றியிருக்கிறார்கள்.
தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் மட்டுமன்றி, பின்னணி இசையும் காட்சிக்கு மிகாமல் இருக்கிறது. காசி விஸ்வநாத்தின் எடிட்டிங் இன்னும் வெட்டி இருக்கலாம் என தோன்ற வைக்கிறது.
படத்தில் நிறைய ப்ளஸ்கள் இருந்தாலும், பெரிய மைனஸ் என்றால் படத்தின் நீளம். இடைவேளை வரை இரண்டே இரண்டு பாடல்கள் தான். அதிலும் முதல் பாடல் முடிந்து ஒரு மணி நேரம் கழித்து தான் அடுத்த பாடல் வருகிறது. இடைவேளைக்கு பின்பு வரும் செண்டிமெண்ட் காட்சிகளை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.
அஜித் என்ற ஸ்டாரை மனதில் வைத்துக் கொண்டு அவருக்காக படம் பண்ணியிருக்கிறார்கள். அதிலும் அஜித்தை வித்தியாசமாக காட்ட வேண்டும் என்று வேஷ்டி - சட்டை லுக், மாஸ் வசனங்கள் என எல்லாமே இருக்கிறது. மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் திரைக்கதை அமைத்து, அஜித்திற்காகவே உருவாக்கி இருப்பது தான் இந்த 'வீரம்'.
- ஸ்கிரீனன், சினிமா ஆர்வலர், தொடர்புக்கு: screenen@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT