Published : 12 Apr 2017 10:32 AM
Last Updated : 12 Apr 2017 10:32 AM
‘மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் நடிக்கும் போதே, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ‘நான் படம் இயக்குவேன். அப்போது உனக்கு முக்கிய கதாபாத்திரம் தருகிறேன்’ என்றார். அதை மறக்காமல் இப்போது ஜி.வி. பிரகாஷை வைத்து அவர் இயக்கும் படத்தில் வாய்ப்பு தந்துள்ளார். இதுபோன்ற நண்பர்கள் என்னால் முடியும் என்று நம்பி வாய்ப்பு கொடுக்கும்போது, இன்னும் நாம் போகவேண் டிய தூரம் நிறைய இருக்கிறது என்பது மட்டும் தோன்றுகிறது’’ - படப்பிடிப்புக்கு நடுவே கொளுத்தும் வெயிலில் நம்பிக்கையோடு பேசத் தொடங்கினார் யோகிபாபு.
தற்போது வெளியாகும் அனைத்து படங் களிலும் இருக்கிறீர்களே, எப்படி?
அனைத்து நடிகர்களுடனும் நடிக்க ஆசையாக இருக்கிறது. வாய்ப்பும் வருவதால், தேதிகளை சரிசெய்து அனைவருடனும் நடித்துவிடுகிறேன். நினைத்தவுடன் இந்த இடத்துக்கு நான் வந்துவிடவில்லை. பிஸியான நடிகராக வேண்டும் என்று அதிகம் போராடி யுள்ளேன். இதற்குப் பின்னால் 14 ஆண்டு உழைப்பு இருக்கிறது.
உங்களுக்கான வசனத்தை நீங்களே எழுதுகிறீர்களா?
அனைத்துப் படங்களிலுமே இயக்குநர்கள் சொன்ன வசனத்தைத்தான் பேசியுள்ளேன். படப்பிடிப்புக்கு நடுவே எனக்குத் தெரிந்த சிறுசிறு விஷயங்களைச் சொல்வேன். காட்சிக் குப் பொருத்தமாக இருந்தால் இயக்குநர்கள் சேர்த்துக்கொள்வார்கள்.
‘அதுமாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்’ என்பதுபோல ஆசை உண்டா?
‘மான் கராத்தே’வில் வவ்வால், ‘யாமிருக்கப் பயமே’வில் பன்னிமூஞ்சி வாயன், ‘காக்கி சட்டை’யில் பிச்சைக்காரன், ‘ஆண்டவன் கட்டளை’யில் குணச்சித்திரக் கதாபாத்திரம் என்று நடித்ததுபோல புதுப்புது கதாபாத்திரங் களில் நடிக்க ஆசை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ‘ஒண்ணா இருக்க கத்துக் கணும்’ படத்தில் கவுண்டமணி செய்ததுபோன்ற கதாபாத்திரம். அது ரொம்ப பிடித்ததால், அந்த படத்தை 4 முறை பார்த்தேன்.
‘யாமிருக்க பயமே’ படத்தில் உங்கள் கதா பாத்திரத்துக்கு ‘பன்னிமூஞ்சி வாயன்’ என்று பெயர் வைத்ததில் சங்கடம் இல்லையா?
ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் வாய்ப்பு இல்லாமல் சுற்றியபோது, ‘இதெல்லாம் ஒரு மூஞ்சி. இதை வைத்துக்கொண்டு சினிமா வாய்ப்பு தேடுகிறான்’ என்று கேலி செய்தவர் கள் இருக்கிறார்கள். நிறைய அலுவலகங்களில் என்னைப் பார்த்ததும் ஏ.சி.யை ஆன் செய்து ரூம் ஸ்ப்ரே அடித்து அவமானப்படுத்தியவர்கள் இருக்கிறார்கள்.
வருத்தங்கள் நிறைந்த அந்த வாழ்க்கை முடிந்துவிட்டது. ‘பன்னிமூஞ்சி வாயன்’ என்ற பெயர் மூலமாக என் முகம் தமிழகம் முழுக்கத் தெரிகிறது என்றால் சந்தோஷம்தானே!
‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் உங்கள் நடிப்புக்கு பெரிய அளவில் பாராட்டு கிடைத்தது. உங்களால் மறக்க முடியாத பாராட்டு எது?
மகன் சினிமா துறைக்குப் போகிறான் என் றால் எந்த பெற்றோருக்கும் பயம் இருக்கும். எங்கம்மாவுக்கும் இருந்தது. ஆனால், ‘ஆண்ட வன் கட்டளை’ பார்த்துவிட்டு அவர் ரொம்ப சந்தோஷப்பட்டுப் பேசியதை மறக்க முடியாது.
உங்கள் நட்பு வட்டாரம் பற்றி..
ஏழெட்டு ஆண்டுகளாக சூரி எனக்கு நல்ல நண்பர். நல்ல மனிதர். ஆரம்பத்தில் இருந்ததுபோலவே இப்போதும் பழகுகிறோம். ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்ளும் அளவுக்கு ராஜேந்திரன் அண்ணாவும் நல்ல நண்பர். அனைத்து காமெடி நடிகர்களுடனும் நடிக்கத் தயாராகவுள்ளேன்.
உங்கள் குரு யார்?
ராம்பாலா சார்தான் என் குருநாதர். அவ ரிடம் வசனங்கள் எழுதுவதற்கே 6 மாதங்கள் போராடினேன். வசனங்களை எப்படி உள் வாங்கிப் பேச வேண்டும் என்பதை அவர்தான் சொல்லிக் கொடுத்தார். சுந்தர்.சி. சாரும் நிறைய சொல்வார். எப்படி வசனம் உச்சரிக்க வேண்டும், எப்படி நடிக்க வேண்டும், ஒரு காமெடி நடிகர் எதெல்லாம் செய்யக் கூடாது என்று கூறுவார். நான் நடித்த படத்தைக் குறிப்பிட்டு, ‘ஏன் அந்தக் காட்சியில் டல்லாக நடித்துள்ளாய். எனர்ஜியாக நடிக்க வேண்டும்’ என்பார்.
நாயகன் வரிசையில் இணையப் போகிறீர்களாமே..
நாயகனாக நடிக்க தகுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள். திடீரென ஒரு கோமாளி, ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்தால் அவன் பொழப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் பொழப்பும் வீணாகிவிடும். ஒரு தயாரிப்பாள ரின் வாழ்க்கையைக் கெடுக்க விரும்ப வில்லை. காலம் முழுவதும் காமெடி கதா பாத்திரங்களிலேயே பயணிக்கலாம் என்று இருக்கிறேன்.
14 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு இந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள். வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?
கிடைத்துள்ள நல்ல வாழ்க்கையில் சரியா கப் பயணிக்க வேண்டும் என்ற பயம் உள்ளது. ‘அலுவலகத்துக்கு வந்து பாருங்கள்’ என்று இதுவரை எந்த தயா ரிப்பாளர், இயக்குநரிடமும் சொன்னதில்லை. நேரமில்லாதபோது மட்டும் அலுவலகம் வாருங்கள் என்பேன். மற்ற நேரங்களில், நான் தான் தயாரிப்பாளர் அலுவலகம் போவேன். வாய்ப்பு தேடி இப்போதும் நிறைய கம்பெனி களுக்கு போகிறேன். ஆரம்பத்தில் எனக்கு சிறு சிறு வாய்ப்புகள் கொடுத்த இயக்குநர்களிடம் இப்போதும் பேசி வருகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT