Published : 15 Mar 2014 11:22 AM
Last Updated : 15 Mar 2014 11:22 AM
இப்போ எனக்கு படம் பண்ணவே பிடிக்கல. அதான் உண்மை. வேறு ஏதாவது பண்ணலாம்னு தோணிகிட்டு இருக்கு என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
புதுயுகம் சேனலில் 'நட்சத்திர ஜன்னல்' என்ற நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்ட நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் சிம்பு பேசியதில் சில துளிகள், "சினிமாவில் எல்லா நிலைகளிலும் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கிறேன். தானாவே எனக்கு அமைஞ்சுடுச்சு. ஒரு சில படப்பிடிப்புகளில் இருக்கும் போது, நமக்கு சினிமாவே தெரிஞ்சுருக்க கூடாதோனு தோணும்.
சினிமா பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும் அப்படிங்கிறதுனால, அங்கு நடக்குற காமெடி, தப்புகள் எல்லாமே முன்கூட்டியே தெரியும். சரி என்ன பண்றது, அப்படியே பழகிடுச்சு.
இப்போ எனக்கு படம் பண்ணவே பிடிக்கல. அதான் உண்மை. வேறு ஏதாவது பண்ணலாம்னு தோணிகிட்டு இருக்கு. சின்ன வயசுல ரஜினி சார் மாதிரி வரணும் அப்படினு எல்லாம் எண்ணம் இருக்கும் இல்ல. நிறைய படங்கள் பண்ணனும் அப்படினு தோணுச்சு. 29க்கு அப்புறம் எல்லாம் வாழ்க்கையே வேறமாதிரி இருக்கு. எல்லாமே பாத்ததுக்கு அப்புறம் சினிமாவைத் தாண்டி ஏதாவது பண்ணனும்னு தோணுது.
சினிமா அப்படிங்குற வட்டத்துக்குல என்னை நான் போட்டு வச்சுருக்கேன். எனக்கு அது பிடிக்கல. நான் வெளியே வர நினைக்கிறேன். உலகத்துக்கு சினிமாவைத் தாண்டி ஏதாவது பண்ணனும்னு நினைக்கிறேன். எனக்கு பணமே பிடிக்க மாட்டேங்குது. பணத்தினால் மனிதாபிமானமே போயிடுச்சுனு நினைக்கிறேன். காசு வேணும்ங்கிறதுனால நல்லவங்க கூட கெட்டவங்களா மாறிட்டு வர்றாங்க. சமூகம் சீர்கெட்டு கொண்டிருக்கிறது. உண்மைத்தன்மை போய்விட்டது. பொறாமை அதிகமாகிவிட்டது. இதுக்கு எல்லாமே காரணம் காசு தான். உலகத்துல பணமே இருக்கக்கூடாதுனு நினைக்கிறேன்.
'வாலு' முக்கிய காட்சிகள் முடிஞ்சுடுச்சு. பாடல்கள் பாக்கியிருக்கு. அப்புறம் பாண்டிராஜ் சார் படம், வேட்டை மன்னன் ரெடியா இருக்கு, கெளதம் மேனன் சார் படம், செல்வராகவன் படம் இப்படி வரிசையா இருக்கு.
இப்போ என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் அனிருத் தான். ஏன்னா நான் என்ன சொன்னாலும் கேட்டுட்டு இருப்பான். பிரேம்ஜியும் கேட்பான் புரியாம கேட்பான். ஏதாவது டிஸ்கஸ் பண்ணனும்ன்னா த்ரிஷாவுக்கு போன் பண்ணி பேசுவேன். இப்போ எனக்கு தனிமையா இருக்குது கஷ்டமாக தான் இருக்கு.
இப்போ என்கிட்ட சூப்பரா ஸ்டாரா ஆகணுமானு கேட்டாங்கன்னா. எனக்கு அந்த ஆசையே இல்ல. எனக்கு இன்னும் நிறைய படங்கள் பண்ணனும், பெரிய ஸ்டாரா ஆகணும் அப்படிங்குற எண்ணம் எல்லாம் போயிடுச்சு. நமக்குனு சில கடமைகள் இருக்கும்ல, அதே மாதிரி தான் படம் பண்ணிட்டு இருக்கேன். போட்டி, பொறாமை, கோபம் இப்படி எதுவுமே இல்லை. படம் ஹிட்டானாலும், ப்ளாப் ஆனாலும் இனிமேல் என்னை பாதிக்கவே செய்யாது.
இப்போ ஏன் தனுஷோட ப்ரெண்ட்டாக இருக்க முடியுதுன்னா, போட்டி, பொறாமை, கோபம் எதுவுமே இல்லை அப்படிங்குறதுனால நான் அவரை போட்டியா பார்க்கவே இல்லை. இப்போ நான் தனுஷை, சினிமா துறையில தன்னோட வேலையை நல்லபடியா பண்ணிட்டு இருக்குற ஒருத்தரா தான் பாக்குறேன்.
நான் சூப்பரா ஸ்டாரா ஆகணும், ரஜினியா ஆகணும், கலைஞரா ஆகணும், மைக்கேல் ஜாக்சனா ஆகணும்னு சொல்லிட்டு இருக்காங்க இல்லயா.. அதே மாதிரி ஒரு கட்டத்தில் நான் சிம்புவா ஆகணும்னு சொல்லணும். அது தான் என்னோட ஆசை. என்னோட வாழ்க்கைல அது ஒண்ணு தான் ஆசை. அதை நோக்கி தான், இப்போ போயிட்டு இருக்கேன்.
நான் இந்த மாதிரி ஒரு குடும்பத்துல பிறந்திருப்பது மிகப்பெரிய பரிசா நினைக்கிறேன். வேறொரு குடும்பத்துல பிறந்து இருந்தேன்னா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன். என்னோட வாழ்க்கைல என்ன நடந்தாலும் புரிஞ்சுக்கிட்டு என்கூடவே நிப்பாங்க.
எனக்கு கல்யாணம் நடக்குமா இல்லையா என்பது எனக்கே தெரியல. நிறைய விஷயங்களில் சரியான முடிவு தான் எடுப்பேன். எல்லா விஷயத்திலும் சரியான முடிவு எடுத்துட்டா கடவுள் ஆச்சே. காதலைத் தவிர மற்ற விஷயங்களில் சரியான முடிவு எடுத்துவிடுவேன். ஏன்னா, காதலில் மூளை வேலை செய்யாதே, இதயம் மட்டும் தானே வேலை செய்யும்.
என்னைப் பார்த்த தப்பா தான் தெரியும். அதுக்காக நான் எதுவுமே பண்ணாம உட்காந்து இருக்க முடியாது. என்னை யாராலும் கன்ட்ரோல் பண்ண முடியாது. கடவுளைத் தவிர வேறு யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். என்னை வைத்து டீல் பண்ணத் தெரிஞ்சா ரொம்ப ஈஸி. என்கிட்ட அன்பா இருந்தாங்கன்னா, அவங்க என்ன சொன்னாலும் கேட்பேன்.
நிறைய தடவை தனிமையா இருந்திருக்கேன். 30 வயது ஆயிடுச்சு இதுவரை நாம தனிமையா இருக்கோம், கல்யாணம் ஆகலையேனு நினைச்சதே கிடையாது. ஏன்னா, எனக்கு என் தங்கச்சி வீட்டில இருந்தாங்க. மனைவியா ஒரு பொண்ணு எனக்கு வீட்டுல தேவைபட்டது இல்ல. இலக்கியா கல்யாணம் ஆகி, காரில் ஹைதராபாத்திற்கு கிளம்பின உடனே அன்றைக்கு முழுநாளும் அழுதுகிட்டே இருந்தேன். அழுது, அழுது மூஞ்சு எல்லாம் வீங்கி அன்றைக்கு ஷூட்டிங் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.
எனக்கு வர்ற போற பொண்ணு, பொண்ணு மாதிரி இருந்தா போதும். இப்பெல்லாம் பொண்ணுங்க, பசங்க மாதிரி ஆயிட்டாங்க. எனக்கு பொண்ணு அந்த மாதிரி இருக்கணும், இந்த மாதிரி இருக்கணும் அப்படிங்கிறது எல்லாம் கிடையாது. நான் தான் வேணும் அப்படினு சொல்ற பொண்ணு தான் எனக்கு வேணும். என்ன நடந்தாலும் சரி, நான் தான் அப்படினு நின்னா எனக்கு போதும்.
நிறைய விஷயங்கள்ல என்னைப் பத்தி தப்பு தப்பா நிறைய எழுதிட்டாங்க. அதான் நான் ஓப்பனா சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. என்னால, கூட இருக்குறவங்களுக்கும் பாதிக்கப்படுறாங்க. ஆண்டரியா கூட ஒரே ஒரு நாள் நடிச்சேன். உடனே நான் ஆண்ட்ரியா கூட போயிட்டேன்னு எழுதிட்டாங்க.
திருப்பியும் நயன்தாரா கூட நடிக்கிற அப்போ எனக்கு ஒண்ணுமே தோணல. ஏன்னா, சம்பந்தமே இல்லாம நிறைய எழுதுவாங்களேனு பயந்தேன். திருப்பியும் ரெண்டு பேர் நடிக்கிற அப்போ எப்படி எடுத்துகுவாங்க. என்ன நினைப்பாங்க. ப்ளஸ்ஸா, மைனஸா அப்படினு யோசிச்சேன். இயக்குநர் வேணும்னு கேட்டார், நான் ஒ.கே சொன்னேன், அவங்களும் ஒ.கே சொன்னாங்க. நடிச்சிட்டு இருக்கோம். யாராவது ஒருத்தர் குறை சொல்லிகிட்டே இருக்காங்க. ட்விட்டர திறந்தா யாரையாவது குறை சொல்லிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் வேற வேலையே கிடையாதானு எனக்கு தெரியல.
எனக்கும் சரி, தனுஷிற்கும் சரி, எங்களை அங்கீகரிக்க தெரிஞ்சது. அதனால தான் இந்த இடத்திற்கு வந்திருக்கோம். இப்போ உள்ள நடிகர்களுக்கு அது தெரியல. அவங்களை வேற ஏதோ நினைச்சுகிறாங்க. எதனால மக்கள் அவங்கள பாக்குறாங்க அப்படிங்குறதை அவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. இப்போ இருக்குறவங்கள்ல எனக்கு விஜய் சேதுபதி ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப SENSIBLEஆ இருக்காரு. தலை கால் புரியாம எல்லாம் இல்ல. அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்குனு நினைக்கிறேன்.
என்னை பிடிக்காதவங்க தேவையில்லாம பேசி பேசி நேரத்தை வீணடிக்காதீங்க. அதை எல்லாம் விட்டுட்டு வேறு ஏதாவது வேலை இருந்தா பண்ணுங்க. என்னோட அப்பா, அம்மா தவிர என்னோட மிகப்பெரிய சொத்து என்னோட ரசிகர்கள் தான். கிட்டதட்ட 2 வருஷமா என்னோட படங்கள் எதுவுமே வரல அப்படின்னாலும், என்னை பிடிச்சுகிட்டே இருக்காங்க. அவங்களையும் நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன். அதுவும் கூடிய சீக்கிரத்தில் சரி பண்ணிடுவேன். " என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT