Last Updated : 25 Oct, 2013 12:40 PM

 

Published : 25 Oct 2013 12:40 PM
Last Updated : 25 Oct 2013 12:40 PM

எல்லோரும் ஒரே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் : மூடர் கூடம் இயக்குநர் நவீன்

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்து, பார்வையாளர்களிடம் வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் ஒருசேரப் பெற்ற படம் மூடர் கூடம். இது கமர்ஷியல் படமாக இருந்தாலும்கூட, வேறு பாணியிலான கதைசொல்லல் மூலம் தமிழ் சினிமாவுக்கு இன்னுமொரு நம்பிக்கையான இளம் இயக்குனர் கிடைத்திருக்கிறார். பாடலாசிரியர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் நவீனுடன் மேற்கொண்ட உரையாடலிலிருந்து...

உங்களின் ஆரம்ப கால வாழ்க்கை எப்படி?

என் அப்பா கரூர் அருகே இருக்கும் டி.என்.பி.எல்.இல் வேலைபார்த்தார். அதனால் அங்கிருக்கும் பள்ளியில் படித்தேன். நான் 6வது படிக்கும்போதே அவர் இறந்துவிட்டார். அதனால் அம்மாவின் ஊரான கோபி பக்கத்தில் இருக்கும் கவுந்தபாடியில் ஒரு வருடம் படித்தேன். பிறகு மீண்டும். டி.என்.பி.எல். பள்ளியிலேயே படித்தேன். படிக்கும்போதே சினிமாதான் என்று முடிவு செய்துவிட்டேன்.

அதனால் என்ஜினீயரிங் படிக்காமல் டிப்ளமோ படித்தேன். இருந்தாலும் படித்தவுடனே சினிமாவுக்கு வர முடியாது என்பதால் புதுக்கோட்டையில் இருக்கும் இ.ஐ.டி. பாரி நிறுவனத்தில் வேலை செய்தேன். அங்குதான் என்னுடைய இசையமைப்பாளர் நடராஜை சந்தித்தேன். அந்த நட்பு இன்னமும் தொடர்கிறது.

அங்கிருந்து நாங்கள் இருவரும் தில்லியில் இருக்கும் ஹார்லிக்ஸ் (கிளாக்ஸ்கோ) நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தோம். அங்கு மூன்று வருடங்கள் வேலை பார்த்தேன். இனியும் தாமதிக்கக் கூடாது என்று சென்னைக்கு வந்துவிட்டேன்.

நல்ல கம்பெனியில் இருக்கும் ஒரு வேலையை எப்படி விட முடிந்தது?

2004ஆம் ஆண்டு, ஹார்லிக்ஸில் இருந்து வெளியே வரும்போது எனக்கு சுமார் 25,000 ரூபாய் சம்பளம். நான் வேலையை விட்டுவிட்டு வரவில்லை. சென்னையில் ஒரு வேலை, பெங்களூருவில் ஒரு வேலை என இரண்டு வேலைக்கான கடிதத்துடன்தான் வந்தேன். ஆனால் பெங்களூருவில் ஒரு கால் சென்டர் வேலைக்குச் சேர்ந்தேன். வாரம் இரண்டு நாள் விடுமுறையில் இங்கு வந்து உதவி இயக்குனர் வாய்ப்பு தேடினேன். ஒரு மாதத்துக்குப் பிறகு இது உதவாது என்று நினைத்து வேலையை விட்டுவிட்டேன்.

ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை ஆரம்பித்தேன். பணம் திரட்டினேன். ஆனால் அந்தப் படத்தை எடுப்பதற்குள் இயக்குனர் பாலாஜி சக்திவேலின் உதவியாளர் தாயுமானவன் மூலம், இயக்குனர் சிம்புதேவனின் முதல் படமான இம்சை அரசனில் வேலை பார்த்தேன். சிம்புதேவனின் அஸோஸியேட் பாண்டிராஜ் அண்ணன் இயக்கிய முதல் படமான ‘பசங்க’ படத்தில் வேலை பார்த்தேன். சிம்புதேவனிடம் வேலைசெய்தது நல்ல அனுபவம்.

மூடர் கூடத்துகான வேலைகளை எப்போது ஆரம்பித்தீர்கள்?

இந்தக் கதையைப் பத்து முறை எழுதினேன். மொத்தக் கதையையும், 2010ஆம் ஆண்டு ஜனவரியிலேயே முடித்துவிட்டேன். நான் இந்தக் கதையை எழுதும்போது ஆக்ஷன் படங்கள்தான் டிரெண்ட் ஆக இருந்தது.

நீங்களே தயாரிப்பாளர் ஆனது கட்டாயத்தினாலா?

இந்தக் கதையைப் பல தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். எல்லாரும் கதாநாயகன் யார், எப்போது கல்யாணம் என்பது போல ஒரே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். என் கதை அதுபோன்ற வழக்கமான கதை அல்ல என்பதைப் புரிய வைக்க முடியவில்லை. ஆனால் இந்தக் கதையை எழுதும்போது, இதுபோல சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது என்று யோசித்தேன். தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றால் என்னால் தயாரிக்க முடிகிற கதையாகத் தேர்வு செய்தேன்.

நீங்கள் ஒரு உதவி இயக்குனர் மட்டுமே. எப்படிப் பணம் திரட்டினீர்கள்? உங்கள் மீது மற்றவர்களுக்கு எப்படி நம்பிக்கை வந்தது?

ஆற்று வெள்ளத்தில் சிக்கிவிட்டோம். பிடித்துக்கொள்ள திடீரென ஒரு பாறை கிடைக்கிறது. சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால் எவ்வளவு நேரம் அந்த பாறையிலே இருக்க முடியும். மீண்டும் ஆற்றுக்குள் குதித்தால்தான் கரைக்கு வர முடியும். அதுபோலதான் தயாரிப்பாளர் என்பது பாறைபோல. இந்த ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் படம் வந்திருக்காது.

அதே சமயத்தில் என் மீது நம்பிக்கை வைத்த என் அக்கா, மச்சான், அம்மா, நண்பர்கள் தான் காரணம். அவர்கள் இல்லாவிட்டால் இது சாத்தியமாகி இருக்காது. இந்த படத்துக்காக 60 சதவிகித முதலீட்டை என் அக்காவும் மச்சானும்தான் செய்தார்கள். இன்னும் பல நண்பர்கள் அவர்களால் முடிந்த தொகையை கொடுத்தார்கள். இந்தப் படத்துகாக மட்டுமல்ல. நான் உதவி இயக்குனராக இருந்துபோது ராஜேஷ், சுதாகர் என நண்பர்களால் மட்டுமே இது சாத்தியமானது. அவர்களின் ஏ.டி.எம். அட்டையைக்கூட என்னிடத்தில் கொடுத்துவிட்டுப் போவார்கள்.

பட்ஜெட் எவ்வளவு?

நிச்சயம் சொல்ல மாட்டேன். உங்களிடம் ஒரு கடலை மிட்டாயும் 50 ரூபாய் சாக்லேட்டும் கொடுக்கும் பட்சத்தில் 50 ரூபாய் சாக்லெட் சூப்பராக இருக்கும் என்று சொல்லும் மனநிலைதான் பலருக்கு இருக்கிறது.

பொருளாதார ரீதியாக இந்தப் படம் வெற்றியா?

வெற்றிதான். சாட்டிலைட் உரிமம் மட்டும் 2 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.

இயக்குனர்களுக்கு பிஸினஸ் தெரிந்திருக்க வேண்டுமா?

நிச்சயமாக. கிரியேட்டிவிட்டி, டெக்னாலஜி, பணம். இது மூன்றும் ஒரு படத்துக்குத் தேவை. இன்று யாரை ஷூட் செய்யப்போகிறோம், எத்தனை கேரவன், எத்தனை லைட் எனத் துல்லியமாக இருப்பது நல்லது. மேலும், தயாரிப்புச் செலவைக் குறைத்தால் மார்கெட்டிங்குக்கு இன்னும் கொஞ்சம் செலவு செய்யலாம். விளம்பரத்துக்கான செலவை உங்களால் குறைக்க முடியாது. ஆனால் தயாரிப்புச் செலவை முடிந்தவரை குறைக்கலாம்.

என் படத்தில் பல இடங்களில் லைட் பயன்படுத்தவில்லை. சில இடங்களில் குறைவான லைட் பயன்படுத்தி இருக்கிறேன். அதே சமயத்தில் ஒரு பாடலுக்காக 25 லொக்கேஷனும் சென்றிருக்கிறேன். ஏற்கெனவே சொன்னதுபோல இது மூன்றும் தேவை.

படம் நீளம் என்று சொல்பவர்களுக்கு?

பிளாஷ்பேக் காட்சி நீளம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதுதான் நன்றாக இருக்கிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். மேலும் ஒரே அறையில் நடக்கும் கதையில் இன்னும் 10 நிமிடம் குறைத்திருந்தாலும் கூட, படம் நீளம் என்றுதான் சொல்லி இருப்பார்கள். இந்த குறை வரக் கூடாது என்பதற்காகத்தான், படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் புதுப்புதுக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திக் கதையை பிரெஷ்ஷாக இருக்க வைத்தேன்.

இந்த படத்துக்கு ஓவியா தேவையா?

நாலு முட்டாள்கள், ஒரு சிகப்பு கலர் சோஃபா, ஒரு நாய். இந்த போஸ்டரை பார்த்தால் யார் படத்துக்கு வருவார்கள்? அதே சமயத்தில் ஓவியாவுக்கான கதாபாத்திரத்தில் எந்த விதமான காம்பிரமைஸும் செய்யவில்லை. முகம் தெரிந்த கதாநாயகி தேவை. ஓவியாவை எனக்கு மெரினா படத்தில் இருந்து தெரியும் என்பதால் அவரிடம் ஓ.கே. வாங்கினேன். மற்ற கதாநாயகிகள் இந்த கதைக்கு ஓ.கே. சொல்லி இருப்பார்களா என்று தெரியவில்லை.

அடுத்த படம்?

என் அடுத்த படமும் கமர்ஷியல் படம்தான். 100 சதவிகித பார்வையாளர்களைத் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் என் அளவில் ஒரு திருப்தியான படத்தை கொடுக்க முயற்சி செய்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x