Published : 03 Mar 2017 06:04 PM
Last Updated : 03 Mar 2017 06:04 PM
மருத்துவ உலகில் நடக்கும் வியாபார விபரீதங்கள், அதற்குப் பிந்தைய சம்பவங்களே 'குற்றம் 23'.
ஒரு சர்ச்சில் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண் காணாமல் போகிறார். பாவ மன்னிப்பு வழங்கிய பாதிரியார் கொலை செய்யப்படுகிறார். பாதிரியார் மரணம், பெண் காணாமல் போனது குறித்து விசாரிக்கும் பொறுப்பு காவல்துறை உதவி ஆணையர் அருண் விஜய்யிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதற்குப் பிறகும் இரு கர்ப்பிணிகள் மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர். ஏன் அந்த இறப்பு நிகழ்கிறது, அதனால் அருண் விஜய்க்கு ஏற்படும் இழப்புகள் என்ன என்பது மீதிக் கதை.
நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கதையை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் மூலம் அறிவழகன் மீண்டும் ஒரு முறை கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
தோற்றம், உடல் மொழி, பார்வை, கம்பீரம், நிதானம், தெளிவு என அத்தனையிலும் அருண் விஜய் கச்சிதம். குற்றப் பின்னணி உள்ள வழக்கை விசாரிக்கும் விதமும், எதிரிகளை எதிர்கொள்ளும் விதமும் தேர்ந்த நடிகனுக்கான அடையாளம். கமர்ஷியல் படம் என்றாலும் அதில் வரும் இயல்பான, எளிமையான அறிமுகம் நம்பத்தகுந்த வகையில் உள்ளது. காதல் காட்சிகளில் கண்ணியம் காட்டும் அருண் விஜய் சண்டைக் காட்சிகளில் நிமிர வைக்கிறார்.
டூயட் பாடும் கதாநாயகியாக இல்லாமல், கதையை நகர்த்துவதற்கான நாயகியாக மஹிமா இருக்கிறார். குழந்தைகளுடனான பிரியம், பிரச்சினையைக் கண்டு ஒதுங்குவது, பிறகு உண்மையை சொல்வது என கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். 'போலீஸ் கிட்ட உண்மையை சொல்லாம மறைக்கலாம். ஆனா, பிடிச்சவங்க கிட்ட உண்மையை சொல்லணும்' என்று சொல்லும் மஹிமாவின் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை.
குழந்தை குறித்த ஏக்கத்தோடும், அதற்குப் பிறகான சோகத்தை சொல்ல முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் அபிநயா நிறைவாக நடித்திருக்கிறார்.
தம்பி ராமையாவின் காட்சிகள் ஆரம்பத்தில் கொஞ்சம் இழுவையாக இருந்தன. மைண்ட் வாய்ஸ் பாணியிலான வசனங்கள் ரசிக்கும்படி இல்லை. ஆனால், சீரியல் நடிகையிடம் அருண் விஜய் பேசும்முன் தம்பி ராமையாவின் கமென்ட், குறிப்பாக உணர்வெழுச்சியில் அருண் விஜய்யின் செயல்களுக்குப் பிறகு தம்பி ராமையா அதை சரிசெய்வதற்காக செய்யும் சமாளிப்புகளுக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது.
அருண் விஜய் அண்ணனாக நடித்திருக்கும் அமித் பார்கவ் இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். விஜயகுமார், அர்விந்த் ஆகாஷ், வம்சி கிருஷ்ணா, கல்யாணி நடராஜன், சுஜா வாருணி ஆகியோர் பொருத்தமான தேர்வு.
பாஸ்கரனின் ஒளிப்பதிவு போலீஸ் விசாரணை, மருத்துவக் குற்றம் குறித்த அதிர்ச்சி வளையத்துக்குள் நம்மையும் இழுத்துச் செல்கிறது. இடைவேளையின் போது வரும் அந்த ஒற்றை ஷாட் அமேசிங். விஷால் சந்திரசேகர் பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம். தொடுவானம் பாடலில் மனதைக் கரைக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் குழந்தை பிறப்பு குறித்த கிராபிக்ஸ் காட்சிகளுக்கு கைதட்டல்கள் அதிகம் விழுந்தன. முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்த அறிவழகனின் நேர்த்தி அருமை. உயிரணுக்கள், கருத்தரிப்பு குறித்த விளக்கங்கள் நம்பும்படியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், குற்றப் பின்னணிக்கான காரணம் தெரிந்த பிறகும் பிளாஷ்பேக் நீள்வது அயர்ச்சியை வரவழைக்கிறது. அதற்குப் பிறகான வம்சி கிருஷ்ணாவின் பிளாஷ்பேக்கும் தொடர்வது சோர்வு. வம்சி கிருஷ்ணாவின் மிரட்டல், எமோஷன் இரண்டையும் தெளிவாகச் சொல்லவில்லை.
இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் 'குற்றம் 23' போலீஸ் சினிமாவில் தனித்துவம் பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT