Last Updated : 05 Oct, 2013 10:28 AM

 

Published : 05 Oct 2013 10:28 AM
Last Updated : 05 Oct 2013 10:28 AM

உயிர் மூச்சை உணர்த்தும் இசை

கானக இருளில் கரடியும் புலிகளும் துரத்த ஒளிய இடமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் உயிர்ப் பயணம். திரைக்கதையின் திருப்பங்களினூடே ஆங்காங்கே மறைந்து நிற்கும் வெளிச்ச விதைகள். சமீபத்தில் வெளியானவற்றில் இத்தனை நேர்த்தியான மர்மப் பின்னலுடன் அமைந்த திரைப்படம் இதுதான் என்று சொல்லலாம். படத்தின் திரைக்கதைக்கு நிகரான வெளியில், வேறொரு தளத்தில் உயிர்ப்பூட்டும் இசை தந்திருக்கிறார் இளையராஜா.

ஒரு இசையமைப்பாளர் தந்த பாடல்களை அடிப்படையாக வைத்தே அவரைப் பற்றிய மதிப்பீடு உருவாகிவந்த இந்தியத் திரையுலகில், படத்தின் பின்னணி இசையைக் கதையோட்டத்துடன் பிணைத்து இசைக்கத் தெரிந்த முதல் இசையமைப்பாளர் நிச்சயமாக இளையராஜாதான். முள்ளும் மலரும் படத்தின் இறுதிக் காட்சியில் சூழல் காரணமாக விரிசல் கண்டு நிற்கும் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையிலான பந்தத்தை, பின்னணியில் ஒலிக்கும் ஒரு தாள இசை இசை மூலம் சேர்த்து வைக்கும் ஆற்றல் வாய்ந்த இசையைத் தந்தவர். நெஞ்சத்தைக் கிள்ளாதே, மவுனராகம், ஜானி, தளபதி, பாரதி என்று ராஜாவின் பின்னணி இசை உச்சம் தொட்ட திரைப்படங்கள் எண்ணிக்கையில் ஐநூறுக்குக் குறையாது. திரை ரசிகர்களுக்கு இது புதிதான செய்தியும் அல்ல.

சில வருட இடைவெளிக்குப் பின்னர், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தரும் ஒரு முக்கியமான படமாக ராஜாவுக்கு அமைந்திருக்கிறது ஓநாயும் ஆட்டுக்குட்டியும். சாலையில் கவனிப்பாரின்றி விழுந்து கிடக்கும் காயம்பட்ட மனிதனைக் காட்டும்போது பரிவுடன் வருடும் வயலின், இரக்கமுள்ள இளைஞன் அம்மனிதனை பைக்கில் ஏற்றி, அந்த இருள் சாலையில் விரையும்போது தீவிரமாக இசைக்கிறது. படத்தின் பல காட்சிகளில் ராஜாவின் முதன்மை இசைக்கருவிகளான வயலினும், செல்லோவும் உருகி உருகி இசைக்கின்றன.

கதையின் முடிச்சு என்ன, ஓநாய் மீது ஏன் பார்வையாளன் பரிவுகாட்ட வேண்டும் என்பது கடைசியில்தான் தெரியவருகிறது. அதுவரை, உறக்கம் கலையாத கண்களுடன் வீட்டுக்கு வெளியே நிகழ்ந்த விபத்தைப் பார்வையிடும் சிறுவன் போலவே, மங்கலான பார்வையுடன் பார்வையாளர் கவனித்துக்கொண்டிருக்கிறார். முடிச்சு அவிழும்வரை மர்மத்தைத் தக்கவைப்பது தனித்திறமை. அது மிஷ்கினுக்குக் கூடியிருக்கிறது. படத்தின் பல காட்சிகளில் மஞ்சளும் கருப்பும் கலந்த அசையும் ஓவியங்களாகச் செதுக்கியிருக்கிறார்கள் படக்குழுவினர். அத்தனை காட்சிகளையும் உள்வாங்கி அமைதியான கணங்களில் மவுனம் காத்து, தேவையான காட்சிகளில் மட்டும் உணர்வை மீட்டும் இசையை இழையோட விட்டிருக்கிறார் ராஜா. பார்வையற்ற குழந்தையிடம் மிஷ்கின் கதை சொல்லும் காட்சியில் வயலினை வலிந்து அறுத்துக் கண்ணீரை வரவழைக்க முயலவில்லை. மாறாக அவ்வப்போது விம்மி, கடைசியில் தாளாமல் பீறிடும் துக்கத்தை இசையால் மொழிபெயர்த்திருக்கிறார் ராஜா.

படத்தின் பின்னணி இசைக் கோவையைத் தனது இணையதளத்தில் இலவசமாகவே பதிவேற்றம் செய்திருக்கிறார் மிஷ்கின். படத்தின் பெயர்ப் பட்டியலில் நடிகர்கள் விலங்குகளாகவே குறிக்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் வனத்தின் இலைகளாக. கானகத்தின் உயிர் சந்தேகமில்லாமல் இளையராஜாதான்.

தமிழ் சினிமாவுக்கும் இளையராஜாவுக்கும் இது போன்ற சந்தர்ப்பங்கள் அடிக்கடி அமைய வேண்டும்.

படத்தின் பின்னணி இசை ட்ராக்குகளை ஒரு சி.டி.யாகவே வெளியிட்டிருக்கிறார் மிஷ்கின். அதுவும் இலவசமாக. படத்தின் கதையை எழுதியவுடன் அதை இசையால் மொழிபெயர்க்க இந்தியாவில் ஒருவர்தான் உண்டு என்ற முடிவுடன் ராஜாவை சந்திக்கச் சென்றதாகவும், தன் மேல் கோபமாக இருந்த இளையராஜா முதலில் படத்துக்கு இசையமைக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார் மிஷ்கின்.கதையைக் கேட்டவுடன் இசையமைக்க சம்மதித்தாராம் இளையராஜா. மிகச் சிறப்பாக உருவாகியுள்ள பின்னணி இசை அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே 10,000 சி.டி.களைத் தயாரித்திருக்கிறார். வேண்டும் என்று கேட்கும் இசை ரசிகர்களுக்கு சி.டி. இலவசமாகவே அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இது வரவேற்கத்தக்க நல்ல முயற்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x