Published : 04 Oct 2013 05:44 PM
Last Updated : 04 Oct 2013 05:44 PM

ரஜினிக்கு 2,500 கமலுக்கு 27,000 !

1977ல் தமிழக மக்கள் மனங்களைக் கொள்ளைக் கொண்ட '16 வயதினிலே' படத்தின் டிஜிட்டல் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ரஜின், கமல், இயக்குநர் பாரதிராஜா, சத்யஜித், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு என நாயகி ஸ்ரீதேவி, இசையமைப்பாளர் இளையராஜாவை தவிர மற்ற '16 வயதினிலே' படக்குழுவினர் கலந்து கொண்டனர். சுமார் 5 லட்ச ரூபாய் செலவில், 28 ரோல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் '16 வயதினிலே'. இப்படத்தில் ரஜினிக்கு 2500 ரூபாயும், கமலுக்கு 27000 ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்பட்டது.

இவ்விழாவில் பேசிய ரஜினி “36 வருஷத்துக்குப் பிறகு இந்த ’16 வயதினிலே’ விழாவுல கலந்துக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்த படத்தோட தயாரிப்பாளர் கமல்கிட்ட ரொம்ப நெருக்கமா இருப்பாங்க, அது என்னமோ தெரியல என்கிட்ட அவ்ளோ நெருக்கமா இருக்கமாட்டாங்க. என்கிட்ட அவர் படம் தயாரிக்கணும்னு வந்து கால்ஷீட் கேட்டதே கிடையாது.

திடீர்னு ஒரு 15 நாளைக்கு முன்னால ராஜ்கண்ணு சார் எனக்கு போன் பண்ணினாருன்னு சொன்னாங்க., உடனே அவரை வரச்சொல்லுங்க, முதல்ல நான் அவரப் பார்க்கணும்னு சொல்லி மீட் பண்ணினேன்.

அவர் எப்படிப்பட்ட மனிதர்ங்கிறதுக்கு ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்றேன். எல்லாரும் தெரிஞ்சிக்கணும்.

கமலோட ‘விஸ்வரூபம்’ படத்துக்கு ரிலீஸ் பிரச்சினை வந்தப்போ அவர், “நான் 16 வயதினிலே படத்தை CINEMASCOPEல ரிலீஸ் பண்ணப்போறேன். அதுல வர்ற பணத்தையெல்லாம் கமலுக்கு கொடுக்கப்போறேன்”னு சொன்னார். அவரே க‌ஷ்டத்துல்ல இருக்கிறப்போ கமலுக்கு பிரச்சினை வந்தவுடனே உதவி செய்ய முன் வந்த அந்த நல்ல குணத்தைப் பார்த்து அப்பவே நான் அவரை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்.

ஆனா அடுத்தடுத்து வேலைகள் வந்ததால அது முடியாமப்போச்சு. அப்படிப்பட்டவரை மீட் பண்ணும் போதே முதல் வார்த்தை "சார்.. நான் என்ன பண்ணனும்?"னு கேட்டேன்.

உடனே இந்த ’16 வயதினிலே’ டிரெய்லர் வெளியீட்டு விழாவுல நீங்க கலந்துக்கணும்னு சொன்னார். பெரிய பணக்கார குடும்பத்துலேந்து பணத்தோட சினிமாவுக்குள்ள வந்து ரொம்ப சுயமரியாதையோட படம் எடுக்க வந்தவர். ஒருத்தர்கிட்ட பணம் எவ்ளோ இருந்தாலும், சுயமரியாதை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா அவங்க சினிமாவுல இருக்கிறது ரொம்ப கஷ்டம்.. அப்படிப்பட்டவர் தான் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு.

அவர்கிட்ட கஷ்டப்பட்டு ஒரு படத்தை ரிலீஸ் பண்றீங்க.. இந்தப்பணம் உங்களுக்குத்தான் முழுசா வருதா?ன்னு கேட்டேன்.

அவர் ஆமாம்னு சொன்னார். அப்போ நான் கண்டிப்பா இந்த விழாவுக்கு நான் வர்றேன்னு சொன்னேன். எல்லோருக்கும் கஷ்டகாலம் வரும், போகும். அதேமாதிரி இப்படத்தோட உங்களோட கஷ்டகாலமெல்லாம் முடிஞ்சுப் போச்சு, படம் மிகப்பெரிய வெற்றியடையணும், ரசிகர்கள் இப்படத்தை வெற்றியடைய வைக்கணும்.” என்றார்.

கமல் பேசியது “16 வயதினிலே படத்தில் பணியாற்றிய அத்தனை பேரின் தன்னம்பிக்கைக்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். இப்படம் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு, படத்தின் பிஆர்ஓ சித்ரா லட்சுமணன் மாதிரி, நானும் ஒரு பிஆர்ஓ போல ஒவ்வொருவருக்கும் படத்தின் ஸ்டில்களைக் காட்டி நல்ல படம் பெரிய அளவில் போகும் என விளம்பரப்படுத்தினேன். ஆனால் ஒருவரும் அதை நம்பவில்லை.

அன்றைக்கு பாக்ஸ் ஆபீஸ் பண்டிதர் எனப்பட்ட ஒருவர், இந்தப் படம் ஓடாது என்றார். படம் வெளியானது. அன்று இதே கோடம்பாக்கம் சாலையில் நான் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த பண்டிதர் ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். காரை நான்தான் ஓட்டிக்கொண்டிருந்தேன். என்னைப் பார்த்ததும் கார் பக்கமாக வந்த அவர், படம் அவுட் என்று கூறிவிட்டுப் போனார். நான் காரை வேகமாக்கி, அவரை மறித்து என்ன அவுட் என்றேன். அவர் கோவணத்தை உருவிட்டோம்ல என்றார். அந்தப் படத்தில் நான் கோவணம் கட்டி நடித்திருந்தேன். சரி, என் கோவணம் போனாலும் பரவால்ல, தயாரிப்பாளர் கோவணத்தை காப்பாத்தியாகணுமே என கவலைப்பட்டேன். ஆனால் ரசிகர்கள் கோவணமல்ல… தங்கக் கிரீடத்தையே தலையில் வைத்து காப்பாற்றினர்” என்றார்.

'16 வயதினிலே' டிஜிட்டல் முறையில் விரைவில் வெளியாகவிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x