Published : 13 Feb 2014 01:58 PM
Last Updated : 13 Feb 2014 01:58 PM
தமிழ் சினிமா மறக்க முடியாத படைப்பாளி இயக்குநர் பாலுமகேந்திரா இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74.
அவர் 1939ம் ஆண்டு இலங்கையில் பிறந்து வளர்ந்தார். புகைப்படம் எடுப்பதில் இளவயது முதலே ஆர்வம் மிகுதியாக இருந்ததால், அவரது தந்தை ஒரு கேமிரா பரிசாக அளித்தார். அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து வந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து விட்டு, பூனேவில் ஒளிப்பதிவாளர் பிரிவில் படித்து, அதில் தங்கப் பதக்கம் வென்றார்.
திரைத்துறையில் நுழைந்த பின், ஒளிப்பதிவில் பாலுமகேந்திரா காலம் ஆரம்பித்தது. மலையாளத் திரையுலகில் 'நெல்லு', 'ராஜஹம்சம்', 'மக்கள்', 'ராகம்' என தொடர்ச்சியாக இவரது ஒளிப்பதிவு பேசப்பட்டது. 'நெல்லு' படத்தில் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவிற்காக தேசிய விருது மற்றும் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை வென்றார்.
ஒளிப்பதிவினைத் தொடர்ந்து பாலுமகேந்திரா தன்னை இயக்குநராக வெளிப்படுத்திய கன்னடப் படம் 'கோகிலா'. தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகி இங்கும் வெள்ளி விழா கண்டது.
தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம் 'அழியாத கோலங்கள்'. அதனைத் தொடர்ந்து இயக்குநராக தமிழில் பல படங்களை இயக்கினார். 'மூடுபனி', 'மூன்றாம் பிறை', 'நீங்கள் கேட்டவை', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்', 'ரெட்டை வால் குருவி', 'வீடு', 'சந்தியா ராகம்', 'வண்ண வண்ண பூக்கள்', 'மறுபடியும்', 'சதிலீலாவதி', 'ராமன் அப்துல்லா', 'ஜுலி கணபதி', 'அது ஒரு கனா காலம்' மற்றும் 'தலைமுறைகள்' ஆகிய படங்கள் தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய படங்கள். இவர் இயக்கத்தில் கமல் நடித்த 'மூன்றாம் பிறை' படம் தான் கமலுக்கு சிறந்த நடிகராக முதல் தேசிய விருதினை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் படங்கள் இயக்கியது மட்டுமன்றி மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கிறார். படங்கள் இயக்குவது மட்டுமன்றி, பல்வேறு இயக்குநர்கள் படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்து வந்தார்.
எப்போதுமே படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் போது, விளக்குகள் உபயோகிக்கவே மாட்டார் பாலுமகேந்திரா. என்ன வெளிச்சம் இருக்கிறதோ அதை வைத்தே காட்சிப்படுத்துவார். இவரின் இந்த திறமையை பார்த்து பல்வேறு இயக்குநர்கள் இவரிடம் பணியாற்ற முன்வந்தனர். இவரது படங்களில் கறுப்பு நிற நாயகிகள் தான் இருப்பார்கள். கறுப்பு தான்பா நம்ம ஊர் கலரு என்பார் செல்லமாக.பல்வேறு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதே கருத்தை கூறியிருக்கிறார்.
பாலுமகேந்திரா இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் 'தலைமுறைகள்'. அத்திரைப்படத்தின் மூலமாக இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா தன்னை ஒரு நடிகராகவும் முன்னிருத்திக் கொண்டார். அது மட்டுமன்றி, முதன் முறையாக பாலுமகேந்திரா டிஜிட்டல் கேமிராவில் ஒளிப்பதிவு செய்த படம் 'தலைமுறைகள்'. தன்னுடைய இறுதி காலத்திலும் படத்தில் நடித்து, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, எடிட்டிங் என தனது பட வேலைகள் அனைத்தையும் தானே செய்தார்.
'தலைமுறைகள்' படத்தின் மூலமாக யாரும் தமிழை மறக்காதீர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். அப்படத்தில் மரணம் அடையும் போது பேரனை அழைத்து “தமிழை மறந்துடாதீங்கப்பா...! இந்த தாத்தாவையும் மறந்துடாதீங்கப்பா...!” என்பார். அதுவே அவர் தமிழ் திரையுலகிற்கு கூற விரும்பியது எனலாம்.
படத்தின் பத்திரிக்கையாளர் காட்சிக்கு வந்திருந்த பாலு மகேந்திரா, "உண்மையில் கிராமத்தில் தான் தமிழ் இருக்கிறது. தமிழை யாரும் மறக்க கூடாது" என்று கண் கலங்கினார். காட்சி முடிந்தவுடன் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்பினார்கள். சில நேரம் கழித்து, "ஏம்பா.. நான் சாக மாட்டேன். கவலைப்படாதீங்க.. இன்னும் 5 கதைகள் வைச்சிருக்கேன் இயக்குவதற்கு. " என்றார். அவர் இயக்குவதாக வைத்திருந்த கதைகள் அனைத்துமே கண்டிப்பாக தமிழுக்காக மட்டுமே இருந்திருக்கும்.
நேற்று தன்னுடைய உதவியாளர்களை அழைத்து அனைவருடனும் புகைப்படம் எடுத்திருக்கிறார்.
இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி என தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இவரது பட்டறையில் தொழில் கற்றவர்கள் தான். இது வரை பாலாவின் எல்லா படங்களின் இசையையும் வெளியிட்டது பாலு மகேந்திரா தான்.
இன்று பாலுமகேந்திரா மறைந்தாலும், ஒளிப்பதிவில் அவர் செய்த சாதனைகள் தமிழ் சினிமா சரித்திரத்தில் மறையாது. பல்வேறு ஒளிப்பதிவாளர்கள் தற்போது இருந்தாலும், இருக்கிற வெளிச்சத்தை வைத்து சிறப்பாக ஒளிப்பதிவு செய்ய தெரிந்த ஒரே ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா.
பாலு மகேந்திரா என்னும் திரைச்சிற்பி இருந்த இடம் இன்று வெறுமையாகியிருக்கிறது. அந்த இடத்தை நிரப்ப நிறைய இயக்குநர்கள் முன்வருவது தான் பாலுமகேந்திராவுக்கு நாம் கொடுக்கும் சிறந்த வழியனுப்புதலாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT