Last Updated : 12 Feb, 2017 01:18 PM

 

Published : 12 Feb 2017 01:18 PM
Last Updated : 12 Feb 2017 01:18 PM

நகல் பட நாயகியாக டப்ஸ்மாஷ் மிருணாளினி ஒப்பந்தம்

'நகல்' படத்தின் மூலமாக, தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாக உள்ளார் 'டப்ஸ்மாஷ்' மிருணாளினி.

இயக்குநர் சசி மற்றும் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் சுரேஷ் எஸ். குமார். ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாகவுள்ள இப்படத்துக்கு 'நகல்' என்று பெயரிட்டுள்ளனர்.

'கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ்' தயாரிக்கவுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளர் பிரசன்னா, இசையமைப்பாளர் ஆண்டனி ஜார்ஜ், படத்தொகுப்பாளர் லோகேஷ், கலை இயக்குநர் ரூபெர்ட், ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன் ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

'நகல்' படத்தில் ஒற்றை கதாபாத்திரத்தில் நடிக்க சில முன்னணி நாயகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் இயக்குநர் சுரேஷ் குமார். இறுதியாக இதில் சமூகவலைதளத்தில் 'டப்ஸ்மாஷ்' மூலம் மிகவும் பிரபலமான மிருணாளினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படம் தமிழ் திரையுலகில் நாயகியாக மிருணாளினி நடிக்கவுள்ள முதல் படமாகும்.

இப்படம் குறித்து சுரேஷ் குமார், " ஒரு பெண்ணின் அமானுஷிய அனுபவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் 'நகல்' படத்தின் கதை நகரும். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருப்பதால், கதையை எழுதுவதற்கு சற்று சவாலாகவே இருந்தது. தனித்துவமான முயற்சியில் முழுக்க முழுக்க திகில் அனுபவங்களை கொடுக்கும் ஒரு திரைப்படமாக இருந்தாலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த கூடிய எல்லா சிறப்பம்சங்களையும் இக்கதையில் உள்ளடக்கி இருக்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x