Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM

ஆரம்பம் படத்துக்காக வாங்கிய திட்டு

எந்தமாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கரைந்து விடுவோம் என்று நிரூபிக்கும் தமிழ் நடிகர்களில் ஒருவர் ‘ஆடுகளம்’ நரேன்! பாசமுள்ள அப்பா, பழிவாங்கும் சண்டைக்காரர், குற்றவுணர்ச்சியுள்ள பெரிய மனிதர், எதிரியை மன்னித்து அனுப்பும் தாதா என்று வித்தியாசமான பாத்திரங் களைச் செய்துவரும் நரேனை

‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

‘ஆடுகளம்’ படத்தில் மதுரைத்தமிழ் பேசினீர்கள், ‘பீட்சா’ படத்தில் சென்னைத் தமிழ் பேசினீர்கள், ‘குகன்’ படத்தில் விழுப்புரம் மாவட்டத் தமிழ் பேசுகிறீர்கள்…! உண்மையில் நீங்கள் எந்த மாவட்டத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்?

என் அப்பா கீழத்தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். எங்களுக்கு சொந்த ஊர் திருவாரூர் . அப்பா ஒய்வுபெற்ற ராணுவ வீரர். அவரது வேலைக்காக குடும்பம் சென்னை வந்தது. அப்பா காலமானபிறகு அம்மா வளர்த்தார். நான் முழுக்க முழுக்க சென்னைக்காரன். எனது இயற்பெயர் நாராயணன். சினிமாவுக்காக நரேன் ஆனேன். எனக்கு முன்பு இங்கு ஒரு நரேன் இருக்கிறார். ‘அஞ்சாதே’ படப்பிடிப்பில் அவர் என்னிடம் ‘உங்கள் பெயரை மாற்றக் கூடாதா’ என்று கேட்டார். “உங்கள் நிஜப்பெயர் என்ன” என்று நான் அவரிடம் கேட்டேன். “சுனில்குமார்” என்றார். “என்பெயர் நாராயணன். நான் நரேன் ஆவது நியாயம்.சுனில் குமார், நரேன் ஆவது என்ன நியாயம்” என்று கேட்டேன். சிரித்தார். நல்லவேளை நான் ‘ஆடுகளம்’ நரேன் ஆகிவிட்டேன். குழப்பம் போய்விட்டது!

சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?

சினிமா மீதிருந்த ஆர்வம் காரணமாக நடன இயக்குநர் கலா நடத்தி வந்த நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றேன். பிறகு அங்கேயே நடிப்பு சொல்லிக்கொடுக்கும் வாத்தியார் வேலை. அது பிடித்திருந்ததால் சில ஆண்டுகள் அங்கேயே ஓடிவிட்டது. பிறகு வெற்றிமாறனின் நட்பு கிடைத்தது. அவர் எனக்கு மிகச்சரியானதொரு தொடக்கத்தை கொடுத்துவிட்டார்.

குணசித்திரம் என்பதைத் தாண்டி உங்கள் அடையாளமும் உங்கள் இடமும் எதுவென்று நினைக்கிறீர்கள்?

எது உங்கள் இடம்…, நீங்கள் நல்லவரா கெட்டவரா எதில் நடிக்க ஆசை என்றல்லாம் கேட்டால் தெரியவில்லை என்றுதான் சொல்வேன். நான் இயக்குநரின் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன்!

சினிமாவில் நடிக்கும் அதேநேரம்,தொலைக் காட்சியிலும் நடிக்கிறீர்களே?

தொலைக்காட்சியில் அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதில் தவறே இல்லை! அதுவுமில்லாமல் இன்று வெளியாகும் எல்லா படங்களுமே சில மாதங்களில் தொலைக்காட்சியில்தானே ஒளிபரப்பப்படுகின்றன. நான் ஹீரோவாக இருந்தால்தான் சின்னதிரை பெரியதிரை என்று கவலைப்பட வேண்டும். எனக்கென்று எந்த இமேஜும் கிடையாது! அதனால் நான் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை!

பிரபல நடிகராக ஆனபிறகு எப்படிப்பட்ட விமர்சனங்கள் கிடைக்கின்றன?

‘சிவமயம்’ தொடரில் நடித்தபோது நான் கற்பனையாக எழுதியது நிஜமானது என்றார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். நான் எதை நினைத்து எழுதினேனோ அது போலவே நடித்திருக்கிறீர்கள் என்றார். ‘நண்பன்' படம் பார்த்துவிட்டு டிராபிக்கில் ஓடிவந்து ஒருவர், “எங்க அப்பாவைப் பார்த்த மாதிரியே இருக்கிறது. உங்களைப் போலவே எங்கள் அப்பாவும் கஷ்டப்பட்டார்” என்றார். ‘சுந்தரபாண்டியன்' படம் பார்த்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பலரும் சொன்னது இது மாதிரி அப்பா எங்களுக்கு இல்லையே என்பதுதான். இதை

விட ஒரு நடிகனுக்கு பாராட்டும் விருதுகளும் தேவையில்லை! அதேபோல என் மகள் ‘ஆரம்பம்’ படம் பார்த்துவிட்டு “உன்னை இந்தப் படத்துல எனக்கு பிடிக்கவே இல்லைப்பா. கெட்டவங்களுக்கு எதுக்கு ஹெல்ப் பண்றமாதிரி நடிக்கிற?” என்று கேட்டு திட்டித் தீர்த்துவிட்டாள். அவளிடம் இன்னும் அதிகமாக திட்டு வாங்கப் போகிறேன். ’கலியுகம்’ என்று ஒரு படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதில் மிகமோசமாக ஒர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நடிகன் என்பவன் எந்தமாதிரியான கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும். எந்த பிம்பமும் இல்லாத நடிகனை ரசிகர்கள் கடைசிவரை நம்புவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x