Published : 05 Feb 2017 09:25 AM
Last Updated : 05 Feb 2017 09:25 AM

சூப்பர் ஸ்டார் என்பதைவிட ஆன்மிகவாதி என்பதில் பெருமிதம் அடைகிறேன்: ‘தெய்வீகக் காதல்’ நூல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

‘சூப்பர் ஸ்டார்’ என்பதைவிட ‘ஆன்மிகவாதி’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைவ தாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.

‘யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள் அடங்கிய ஆங்கில நூல் ‘தெய்வீகக் காதல்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நூலின் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் நூலை வெளியிட ‘யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா’ அமைப்பின் பொதுச்செயலாளர் சுவாமி ஸ்மரணானந்த கிரி, பொருளாளர் சுத்தானந்த கிரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது:

மனிதப் பிறவி கிடைப்பதற்கரிய பிறவி. மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் பணம், புகழ், குடும்பம், ஆசை என ஒரு குறுகிய வட்டத்தில் முடங்கி விடுகிறோம்.

ஆனால், இங்கே வந்திருப்பவர்கள் அனைவரும் புண்ணியவான்கள். நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இறந்த பிறகு எங்கே செல்வேன்? ஆத்மா என்பது என்ன? என தேடலில் இறங்கியவர்கள். அதற்கு விடை சொல்லும் குருவையும் பெற்றவர் கள். மிகப்பெரிய நடிகர், சூப்பர் ஸ்டார் என்பதைவிட ஆன்மிகவாதி என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமிதம் அடைகிறேன். ஏனெனில் ஆன்மிகத்துக்கு அவ்வளவு பவர் உள்ளது. பவர் எனக்கு பிடித்தமானது.

ஒரு நாட்டின் அமைச்சராக அரண்மனையில் சகல வசதிகளுடன் வாழ்ந்த ஒருவர் திடீரென துறவியானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சராக இருந்த நாட்டுக்கு திரும்பி அரண்மனைக்கு அருகில் ஒரு குடிசையில் தங்கினார். அவரைப் பார்க்க் வந்த அரசர், அவரது எளிய கோலத்தையும், எவ்வித வசதிகளும் இன்றி குடிசையில் மண் தரையில் இருப்பதையும் பார்த்து, ‘எல்லா இன்பங்களையும் துறந்து எதனை சாதித்தாய்?’ என கேட்டார். அதற்கு பதிலளித்த துறவியாக மாறிய அமைச்சர், ‘‘முன்பெல்லாம் நீங்கள் அமர்ந்திருப்பீர்கள். நான் நின்று கொண்டிருப்பேன். இப்போது அரசரான நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். நான் அமர்ந்திருக்கிறேன். இதைத்தான் நான் சாதித்துள்ளேன்’’ என்றாராம். ஆன்மிகத்தின் சக்தி இது.

ஆன்மிகத்தில் எனது முதல் குரு எனது அண்ணன் சத்யநாராயணா. அவர்தான் என்னை ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சேர்த்துவிட்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர் எனது 2-வது குரு. அவரிடம் நான் ஒழுக்கத்தையும் சம்பிரதாயங்களையும் கற்றுக் கொண்டேன். ராகவேந்திரர் எனது 3-வது குரு. அவரிடம் பக்தியையும், சடங்குகளையும் கற்றுக் கொண்டேன். 4-வது குருவான ரமண மகரிஷியிடம் நான் யார் என்பதை தெரிந்து கொண்டேன். 5-வது குருவான சுவாமி தயானந்த சரஸ்வதியிடம் சமூகப் பிரச்சினைகளையும், வேதம், உபநிடதங்களின் நுணுக் கங்களையும் கற்றுக் கொண்டேன். சுவாமி சச்சிதானந்தர் எனது 6-வது குரு. அவர்தான் எனக்கு மந்திர உபதேசம் செய்தார்.

2008-ம் ஆண்டில் பரமஹம்ச யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுயசரிதை’ என்ற நூலைப் படித் தேன். அது என்னை தன்வயப் படுத்தியது. அந்நூலின் தாக்கத் தால் ‘பாபா’ என்ற படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி நானே தயாரித்து வெளிட்டேன்.

அதன்பிறகு பரமஹம்ச யோகானந்தரின் யோகதா சத்சங்க சொசைட்டின் கிரியா யோகத்தை கற்றுக் கொண்டேன். மனித மனத்தை தூய்மையாக்கி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த கிரியா யோகம் அருமையான கருவி. தெய்வீக ரகசியங்கள் அடங்கிய கிரியா யோகம் என் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

மகாபாரதப் போரின்போது ஒரு கட்டத்தில் துரியோதனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்ய முன்வந்தார். அதனை ஏற்க மறுத்த துரியோதனன், எனக்கு நல்லது எது, கெட்டது எது என தெரியும். ஆனால், அர்ஜுனனுக்கு எதுவும் தெரியாது. எனவே, அவருக்கு உபதேசம் செய்யுங்கள் என்றாராம். நாம் அனைவரும் ஒருவகை யில் துரியோதனர்கள். நமக்கு நல்லது எது, கெட்டது எது, எதனை செய்ய வேண்டும், எதனை செய்யக் கூடாது என அனைத்தும் தெரியும். தெரிந்தே தவறு செய்கிறோம். இனியும் அவ்வாறு இருக்காமல் நாம் அனை வரும் அர்ஜுனர்களாக மாறுவோம். நல்லதை மட்டுமே செய்வோம்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x