Last Updated : 09 Jun, 2017 05:43 PM

 

Published : 09 Jun 2017 05:43 PM
Last Updated : 09 Jun 2017 05:43 PM

முதல் பார்வை: ரங்கூன் - கடத்தல் சினிமா!

சென்னை - பர்மா பின்னணியில் நடைபெறும் பணம் மற்றும் தங்கம் தொடர்பான கடத்தல் கதையே 'ரங்கூன்'.

பர்மாவிலிருந்து பிழைப்பு தேடி சென்னை வருகிறது கவுதம் கார்த்திக் குடும்பம். சிறுவயதிலேயே ஒரு விபத்தில் அப்பாவை இழந்து வாடும் கவுதம் கார்த்திக் நண்பனின் உதவியுடன் ஏரியா நகைக்கடை முதலாளியிடம் வேலைக்குச் சேர்கிறார். ஆர்வமும், அக்கறையுமாக இருக்கும் கவுதம் கார்த்திக்கை முதலாளி சித்திக் தட்டிக்கொடுத்து வேலை வாங்குகிறார். பழைய கணக்கு ஒன்றின் நஷ்டத்தை சமாளிக்க முதலாளிக்கு கவுதம் உதவுகிறார். இதனால் பெரிய திட்டம் ஒன்றைத் தீட்டுகிறார்கள். அந்த திட்டத்தில் கவுதம் சிக்கிக் கொள்கிறார். அந்த திட்டம் என்ன, கவுதம் அதிலிருந்து வெளியே வந்தாரா, அவர் குடும்பத்தின் நிலை என்ன, காதல் கைகூடியதா, இழப்புகள் என்ன என்பதே 'ரங்கூன்'.

துடிப்பு, துறுதுறுப்பு, வேலை மீதான கவனம், முதலாளி மீதான விசுவாசம், குடும்பத்தின் மீதான பொறுப்பு, காதல் ஈர்ப்பு என 23 வயது வெங்கடேசனாக கவுதம் கார்த்திக் தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்க முயற்சித்திருக்கிறார். ஆனால், வசன உச்சரிப்பும், உணர்வுகளும் கதாபாத்திரத்துடன் ஒன்ற மறுக்கிறது. முக்கியமான காட்சிகளில் அவரது நடிப்பு எடுபடவில்லை.

அறிமுக நாயகி சனா வழக்கமான கதாநாயகிக்கான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். சில இடங்களில் அவர் காட்டும் ரியாக்‌ஷன்கள் அதீதமாய் இருப்பது நெருடல்.

மலையாள நடிகர் சித்திக் இரு வேறு பரிமாணங்களில் பக்குவமான நடிப்பைத் தந்திருக்கிறார். லல்லுவின் நடிப்பு யதார்த்தம் மீறாமல் உள்ளது. ஸ்ரீகணேஷ் வார்த்தைகளால் எகிறுவதும், பார்வையில் முறைப்பதுமாகவே கடந்து போகிறார். படத்தில் அவருக்குப் பெரிதாக எந்த வேலையும் இல்லை. டேனியல் தன் பாத்திரத்துக்கேற்ப குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

பர்மாவின் நிழல் உலகத்தையும், இதுவரை பார்த்திராத சென்னையின் இன்னொரு முகத்தையும் அனிஷ் தருண் குமார் கேமராவில் அள்ளி வந்திருக்கிறார். விஷால் சந்திரசேகர், விக்ரம் இசையில் பாடல்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்துக்குப் பொருத்தம்.

நட்பு, துரோகம், இழப்பு, வலி ஆகியவற்றை பிரதிபலிக்கும் க்ரைம் த்ரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ஆனால், அது முழுக்க ரசிகர்களுக்கு கடத்தப்படவில்லை. இயக்குநர் 'புல்லட் இன் தி ஹெட்' படத்தின் அடிப்படைக் கதைக் களத்தை தமிழில் சில மாற்றங்களைச் செய்து எடுத்திருக்கிறார்.

கவுதம் கார்த்திக் தோற்றத்தில் தொடர் காட்சிப் பிழைகள் தென்படுகின்றன. கதாநாயகி எந்த வித சுய சிந்தனையும் இல்லாமல் ஆமாம் போடுகிறார். கவுதம் அம்மாவும் எந்த கேள்வியும் கேட்காமல் அடுத்த வசனத்திலேயே தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார்.

பணம் எங்கே போனது என்று கூட திரும்ப யோசிக்காமல் எல்லா இடங்களிலும் மீண்டும் பணத்தைத் தேடுவது, பணம் வாங்கிய இடத்திலேயே போய் சத்தம் போடுவது போன்ற சில காட்சிகள் முதிர்ச்சி இல்லாமல் திரைக்கதையை வலுவிழக்கச் செய்கின்றன. கடைசியில் ஒரு ட்விஸ்ட் மூலம் திரைக்கதையை சரிசெய்ய முயற்சித்திருக்கிறார்கள். வழக்கம் போல வடசென்னை அழுக்கும், குற்றங்களும் நிறைந்த ஒரு பகுதியாகவே இயக்குநர் தவறாக சித்தரித்துள்ளார்.

பதற்றம், பயம், குடும்ப உறவுகளின் இழப்பு குறித்த உணர்வையும் கதாபாத்திரங்கள் கடத்தவோ, உணரவோ செய்யாமல் அடுத்தடுத்து ஓடுவது ஒட்டவில்லை.

''பொறக்குறது ஈஸி, சாகுறது அதைவிட ஈஸி, இது ரெண்டுக்கும் நடுவுல ஒழுங்கா வாழ்றதுதான் கஷ்டம்'', ''பணம் நிஜம் இல்லை, நிஜம் மாதிரி'', ''பலம்ங்கிறது இருக்கப்பட்டவன் இல்லாதனை மிதிச்சு தள்ளுறதுல மட்டும் இல்லை, அதையும் மீறி கீழே இருக்குறவனை எம்பி மேல வரவைக்கிறதுதான்'' போன்ற ராஜ்குமார் பெரியசாமியின் வசனங்கள் மட்டும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

கடத்தல் பின்னணிக்கான நுட்பங்களையும், நுணுக்கங்களையும் விவரித்து இழப்பின் வலியை உணர்த்தி இருந்தால் 'ரங்கூன்' எல்லை கடந்து பேசப்பட்டிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x