Published : 16 Jun 2016 10:51 AM
Last Updated : 16 Jun 2016 10:51 AM
‘ஜென்டில்மேன்’ படத்துல வர்ற ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு’ பாட்டுக்கு ஒரு சில இடத்தில் நான் லெதர் டிரெஸ் போட்டுட்டு ஆடினேன். அதனால ஓவர் ஹீட் ஆகி உடம்புக்கு முடியலை. அடுத்த நாள் எழுந்திருக்கவும் முடியலை. ஆனாலும் அன்னைக்கு ஷூட்டிங் போனேன். ஏன்னா, அந்தப் பாட்டு என்னை எழுந்து போய் ஆட வெச்சுது. அதுக்கு அப்புறம் எங்கேயும் நான் லெதர் டிரெஸ் போடக்கூடாதுன்னு மனசுல வெச்சிக்கிட்டேன்.
அந்தப் பாட்டு டான்ஸ்ல கவுதமி மேடம் இருந்தாங்க. அவங்க பெரிய ஹீரோயின். அந்தப் பாட்டுக்கு அவங்களும் ஒரு பலம். அதில் என்கூட ஏழெட்டு டான்ஸர்ஸ் ஆடினாங்க. அவங்க எல்லாருமே இன்னைக்கு நல்ல மாஸ்டரா இருக்காங்க. அந்தப் பாட்டுல ஒரு பக்கம் ஜீன்ஸ் கிளாத், இன்னொரு பக்கம் நார்மல் கிளாத்னு டிசைன் பண் ணின பேகி பேண்ட் போட்டு ஆடியிருப் பேன். அதை முதல்ல போடும்போது ‘என்ன இது இப்படி இருக்கே'ன்னு நினைச்சுட்டே இருந்தேன். ‘‘பிரபு... இது புதுசா இருக்கு’’ன்னு ரசிச்சு, சிரிச்சுட்டே ஷங்கர் சார் டபுள் ஓ.கே சொன்னார். இப்படி அந்தப் பாட்டுக்கு என்னெல்லாம் தோணுச்சோ அப்படியெல்லாம் பண்ணோம்.
அந்த டைம்ல நான் லூஸா போட்டுட்டு ஆடுற பேகி பேண்ட், டான்ஸ் பண்றப்ப அடிக்கடி ஷூவுக்குக் கீழே போய் மாட்டிக்கும். எப்படி பொண்ணுங்க ஆடுறப்ப முகத்துல வந்து விழுற முடியை அவங்களை அறியாமலேயே பின்னாடி தள்ளிட்டு ஆடுவாங்களோ, அந்த மாதிரி நானும் பேண்ட்டை என்னை அறியாமலே தூக்கிவிட்டு ஆடுவேன். நிறையப் பேர் இதை நோட் பண்ணாங்க. அதற்கு பிறகுதான் நானே அதை கவனிச்சேன். இப்போ பார்த்தீங்கன்னாலும் நிறையப் பாட்டுல அப்படி நான் பண்ணியிருக்கிறதைப் பார்க்கலாம்.
ஷூட்டிங் ஸ்பாட்ல அப்போ மானிட்டர் எல்லாம் கிடையாது. ஒரு விஷயம் பண்ணினா, அது நல்லா இருக்குன்னு அங்கே இருக்கிற டைரக்டர், கேமராமேன் சொல்றதை வெச்சி முடிவு பண்ணிக்கலாம். அது எப்பவுமே வொர்க்-அவுட் ஆகியிருக்கு. ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு’ பாட்டுலேயும் அப்படித்தான்.
இயக்குநர் ஷங்கர் சார் ஒரு படத்துக்கு எடுத்துக்குற உழைப்பை, தன்னோட ஒவ்வொரு பாட்டுக்கும் எடுத்துப்பார். கண்ணால அம்பு விடுறது, கண்ணுல இருந்து தண்ணீர் விழுறதுன்னு அந்த டைம்ல வந்த புது கிராபிக்ஸ் விஷயங்கள் எல்லாமே அவர் ஐடியாதான். அவரோட உழைப்பை பார்க்குறப்ப நம்ம உழைப்பெல்லாம் பத்தாதோன்னு தோணும். ‘ஜென்டில் மேன்’ படத்தில் இருந்து ‘சிவாஜி’, ‘எந்திரன்’ன்னு அவருக்காகவே வொர்க் பண்ணியிருக்கேன். ஸ்பாட்ல சின்ன நெயில் பாலீஷ் வரைக்கும் சரியா இருக்கணும்னு உழைப்பார். ‘‘எப்படி சார் இவ்ளோ உழைக்கிறீங்க?’’ன்னு என்கிட்டே யாராச்சும் கேட்கிறப்ப, அவங்களிடம் நான் ஷங்கர் சார் உழைப்பைப் பத்திதான் சொல்வேன்.
‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு’ பாட்டு ரிலீஸாகி அஞ்சு, ஆறு வருஷத் துக்குப் பிறகு மும்பை போனப்போ, ஒரு விழாவில் ஜாவேத் ஜாஃப்ரியை சந்திச்சேன். ‘‘நீங்க பிரபுதேவா தானே’’ன்னு என்னை கேட்டார். இந்தி யாவுல குறிப்பிட்டு சொல்ற மாதிரி உள்ள மிகப் பெரிய டான்ஸர்ல அவர் ஒருத்தர். என்னோட பேரை சொல்றாரேன்னு அப்போ ஆச்சரியமா இருந்துச்சு. ‘‘துபாய்ல உங்களோட டான்ஸைப் பார்த்தேன்’’ன்னு சொன்னார்.
‘‘அங்கே நான் ஆடுனது இல்லையே சார்’’ன்னு சொன்னேன்.
‘‘இல்லை… இல்லை. அங்கே ஒரு மால்ல நான் ஷாப்பிங் பண்ணிட்டிருந்தப்போ டி.வி-யில நீங்க டான்ஸ் ஆடுன பாட்டு ஓடுச்சு. ஷாப்பிங் பண்றதை நிறுத்திட்டு அந்தப் பாட்டையே பார்த்துட்டிருந்தேன். அது எந்த மொழிப் பாட்டுன்னு எனக்குத் தெரியலை. ஆனா, இந்தியாவுல உருவான பாட்டுன்னு மட்டும் புரிஞ்சுது. ‘யாரு? இப்படி ஒருத்தர் ஆடுறாரே'ன்னு என் மனைவியைக் கூப்பிட்டு காட்டினேன். அதற்குப் பிறகு ரெண்டு, மூணு நாளு உங்களைப் பத்தியே பேசிட்டிருந்தோம். அப்புறம் விசாரிச்சேன். உங்க பேரை சொன்னாங்க’’ன்னார்.
ஒரு சமயம் நான் அப்பாகூட அசிஸ்டென்டா ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்துல வேலை பார்த்துட்டிருந்தப்போ கமல் சார் அப்பாவிடம் ‘‘பாம்பேல ஜாவேத் ஜாஃப்ரின்னு ஒரு புது பையன் வந்திருக்கார். என்னமா ஆடுறார்… சூப்பர்!’’ன்னு பெருமையா சொல்லிட் டிருந்தார். அப்படிப்பட்ட ஜாஃப்ரி என்னைப் பாராட்டுறப்ப ரொம்ப ஜாலியா இருந்துச்சு. இப்போ நானும், அவரும் நல்ல ஃபிரெண்ட்ஸ். சேர்ந்து வேலை பார்த்திருக்கோம். எப்போதாவது மீட் பண்ணிப்போம். நல்ல மனிதர்!
ஒரு பாட்டு மக்களிடம் போய் சேர்ற வரைக்கும் போராட்டம்தான். இன்னைக்கு வரைக்கும் ஒரு பாட்டு பண்ணும்போதோ, படத்தை டைரக்ட் பண்ணும்போதோ, நடிக்கும்போதோ இது நிச்சயமா ஹிட் அடிக்கும்னு என்னால ஜட்ஜ் பண்ணவே முடியறதில்லை. அது ஏன்னு எனக்குத் தெரியலை. அந்தத் திறமை இன்னும் முழுமையா வரலை. ஆனா, பண்ணும்போது தெளிவா இருப்பேன். சாதாரணமா நான் ஆடுனதைப் பார்க்குறப்ப திரும்பவும் அது மாதிரி நம்மால ஆட முடியுமாங்குற டவுட் எனக்கு எப்பவும் ஏற்படும். பக்கத்துல இருக்கிறவங்ககிட்ட, ‘‘நான் ஒழுங்கா ஆடுறேனா’’ன்னு கேட்டுப்பேன். நான் ஆடிய ஸ்டெப்பை மீண்டும் ஸ்க்ரீன்ல பார்க்குறப்ப அது வேற எவனோ ஆடுற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும்.
சில நடிகர்கள் ஒரு பாட்டு இல்லைன்னா, ஒரு படம் பண்ணும்போது கெட்டப் மாத்துவாங்க. நான் அப்படியே வருவேன். அப்படியே ஆடிட்டு, நடிச்சுட்டுப் போய்டுவேன். இப்போதான் முதல் தடவையா ‘தேவி’ங்கிற படத்துல என்னோட கெட்டப்பை மாத்தியிருக்கேன்.
‘ஜென்டில்மேன்' மாதிரி படங்கள்ல இப்படி ஆடிட்டிருந்த நேரத்துலதான் சில தெலுங்குப் பட இயக்குநருங்க, ‘‘பிரபு உன்னை சீக்கிரமே ஹீரோ ஆக்குறேன்’’ன்னு சொன்னாங்க. ஆனா, நான் தமிழ்லதான் ஹீரோவா அறிமுகம் ஆனேன். அதுவும் நம்ம பவித்ரன் சார் இயக்கின ‘இந்து’ படத்துல. அதில் ஃபர்ஸ்ட் டயலாக்கை என்கிட்ட கொடுத்து பேசச் சொன்னாங்க. நானும் பேசினேன். அந்த டயலாக் மாதிரியே என் வாழ்க்கை அமைஞ்சது. என்ன டயலாக் அது?
- இன்னும் சொல்வேன்…
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT