Published : 22 Jun 2016 12:18 PM
Last Updated : 22 Jun 2016 12:18 PM
ஒரு நடிகருக்கு பல்வேறு வித்தியாசமான ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், விஜய்க்கு கேரளாவில் ஒரு ரசிகர் இருக்கிறார். அவரிடம் விஜய்யைப் பற்றி பேச ஆரம்பித்தால் "அவரைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை" என்பதை மட்டும் பலமுறை சொல்லியிருப்பார்.
கேரளாவில் வடகரை அருகிலுள்ள புரமேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ்.தினமும் கோவில் நடை சாத்தும் போது, 3 யானைகள்சூழ உள்பிரகாரத்தில் உலா வரும் ஸ்ரீவேலி நிகழ்ச்சியில் சுருதிப் பெட்டி வாசிப்பார்.
அவரிடம் விஜய்யைப் பற்றி பேசிய போது "எனக்கு என் உயிர் எப்படியோ, அப்படித்தான் விஜய் சார். என்னுடைய கவலைகள் எல்லாம் போக வேண்டும் என்றால் ஒரு விஜய் படம் பார்த்தால் போய்விடும். அவரைப் பற்றி சொல்லுவதற்கு வார்த்தைகளே கிடையாது. தமிழ் மற்றும் மலையாளத்தில் எவ்வளவோ நடிகர்கள் இருக்கிறார்கள், ஆனால் உலகத்திலேயே எனக்கு விஜய் சாரை மட்டும் தான் பிடிக்கும்.
அவருடைய படம் வெளியாகும் போது வெற்றியடைய வேண்டும் என்று குருவாயூர் கோயிலில் அங்கபிரதட்சணம் பண்ணுவேன். 'புலி' படம் சரியாக போகவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனால், 'தெறி' பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன். அந்தப் படத்தில் பிச்சை எடுக்கும் சிறுவனுடன் பேசும் காட்சியைப் பார்க்கும் போது கண் கலங்கிவிட்டேன்.
விஜய் சாரை நேரில் பார்த்து அவருடைய பேச்சைக் கேட்கும் போது இப்படி ஒரு மனிதனா என்று நினைத்தேன். "கேரளாவில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு நீங்கள் தான் உயிர். மலையாள படத்தை விட உங்கள் படங்கள் தான் நிறைய பார்ப்பேன்" என்றேன். "ரொம்ப சந்தோஷம்" என்று தெரிவித்தார் விஜய் சார். அவருடைய மனசு ரொம்ப சுத்தம் என்று தெரிந்து கொண்டேன்.
என்னை அழைத்துச் சென்றவர் இவர் தான் கேரளாவில் இருந்து வந்திருக்கும் கிருஷ்ண தாஸ் என்றவுடன், அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் தனியாக அழைத்து, "ரொம்ப சந்தோஷமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அங்கபிரசதட்சணம் எல்லாம் பண்ணுகிறீர்கள்" என்று சொன்னார்.
கோயம்புத்தூரில் நான் இருக்கும் போதுதான் விஜய் சார் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். என் வீட்டில் நான் மட்டுமல்ல, என் மகனும் விஜய் சார் ரசிகர் தான். எனக்கு முன்பாகவே அவன் விஜய்யை சந்தித்து புகைப்படம் எல்லாம் எடுத்திருக்கிறான். நான் அவனுக்கு அப்புறம் தான் எடுத்தேன். அவருடைய படம் பார்க்கும் போது கவலை எல்லாம் மறந்து போய்விடும். அவருடைய நடை, நடனம் பார்க்கும் போது உற்சாகமாகிவிடுவேன்.
எனக்கு இப்போது 52 வயதாகிறது. 'துள்ளாத மனமும் துள்ளும்' விஜய் படம் தான் முதலில் பார்த்தேன். அதில் இருந்து இப்போது வரை எனக்கு எப்போதுமே விஜய் தான் பிடித்தமான நடிகர்" என்று தெரிவித்தார்.
மேலும், இன்று விஜய் பிறந்த நாள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்ட போது, "என்னுடைய உறவுக்காரர் ஒருவர் இறந்துவிட்டார். 16 நாட்களுக்கு கோயிலுக்கு செல்ல முடியாது. ஆனால், என்னுடைய மனம் முழுக்க விஜய் சாருக்காக கடவுளிடம் பிராத்தனை செய்துக் கொண்டிருக்கிறேன்" என்று வருத்தத்துடன் கூறினார்.
"சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். தற்போது கூட அருண் வைத்தியநாதன் சார் இயக்கும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறேன். எனக்கு ஒரு படத்திலாவது விஜய் சாருக்கு பக்கத்தில் நிற்பது போல ஒரு காட்சியில் நடிக்க வேண்டும். வசனம் எல்லாம் வேண்டாம், நின்றால் போதும்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கிருஷ்ணதாஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT