Published : 02 Jan 2015 09:49 AM
Last Updated : 02 Jan 2015 09:49 AM
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு, ஜப்ருன்னிஸாருக்கும் இஸ்லாம் முறைப்படி கீழக்கரையில் புத்தாண்டு அன்று இரவு திருமணம் நடைபெற்றது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2008-ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
அதற்கு பிறகு, ஷில்பா மோகன் என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் யுவன். ஷில்பாவுடனும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து யுவனை விட்டு ஷில்பா பிரிந்து சென்றுவிட்டார்.
தனது தாயின் மறைவிற்கு பிறகு மனமுடைந்த யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தைத் தழுவினார். தினமும் 5 நேரம் தவறாமல் தொழுது வருவதாக யுவன் தெரிவித்தார்.
அக்டோபர் மாதம் யுவனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஜப்ருன்னிஸாருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை யுவனின் தரப்பில் இருந்து யாருமே உறுதிசெய்யவில்லை. திருமணம் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துபாயில் நடக்கவுள்ளது என்றும், ஜப்ருன்னிஸார் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் யுவன், ஜப்ருன்னிஸார் திருமணம் புத்தாண்டு அன்று இரவு கீழக்கரையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து யுவன் தரப்பில் விசாரித்த போது இத்தகவலை உறுதி செய்தார்கள்.
கீழக்கரையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள செங்கழுநீர் ஒடை என்னும் கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடற்கரையோர தென்னந்தோப்பில் இரவு 9 மணி இத்திருமணம் நடைபெற்றது. அவசர கோலத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் மிக முக்கியமான பிரமுகர்கள், ஜமாத் நிர்வாகிகள் மற்றுமே பங்கேற்றனர். யுவன் குடும்பத்தில் இருந்து அவரது தங்கை பவதாரணி மற்றும் அவரது கணவர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இளையராஜா, கார்த்திக்ராஜா என யாருமே கலந்து கொள்ளவில்லை.
இஸ்லாம் மதத்தை தழுவிய யுவன் சங்கர் ராஜா, தனது பெயரை அப்துல் ஹாலிக் எனது பெயர் மாற்றம் செய்திருப்பதும், 'மாஸ்' படத்தில் இருந்து தனது பெயர் மாற்றம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT