Published : 30 Oct 2013 09:09 AM
Last Updated : 30 Oct 2013 09:09 AM
அப்பா போட்டு வைத்த பாதை, மணிரத்னத்தின் அறிமுகம் என்று அமர்க்களமாக பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் கௌதம் கார்த்திக். ‘கடல்’ படத்துக்குப் பிறகு கைவசம் மூன்று படங்களில் பிஸியாக இருந்தவர் ‘ என்னமோ ஏதோ’ படத்தின் அறிமுக விழாவில் கிடைத்தார்… கேள்விகளுக்கு சிக்கனமாக பதில் சொல்லத் தெரிகிறது கௌதமுக்கு…
எங்கே படிச்சீங்க?
சென்னையில் செட்டிநாடு வித்யாஸ்ரம், பிறகு லேடி ஆண்டாள், அதன்பின் தாத்தா வீடு ஊட்டியில இருந்ததால் அங்கே இருக்கும் ‘ஹெப்ரான் ஸ்கூல்’. கிராஜூவேஷன் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழத்துல.
தாத்தா வீட்டில் வளர்ந்த அனுபவம் எப்படி?
ரொம்ப க்யூட். நீலகிரி மலையில இருக்கிற ‘முத்தோரை’தான் தாத்தா பாட்டியோட ஊர். காலையில எழுந்தா பனித்துளியில முகம் பார்த்துகிட்டே பல் துலக்குவோம் நானும் ரெண்டு தம்பிகளும். நான் இப்போ நல்ல சிரிக்கிறேன்னு சொல்றாங்கன்னா.. வீட்டைச் சுத்தி சுத்தி பூத்து குலுங்குற பூக்கள்தான் காரணம். அப்புறம் தாத்தா கூட முயல் வேட்டைக்கு போயிருக்கேன். காட்ல விளையாடிட்டே தொலைஞ்சு போறதுன்னா ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு பக்கத்துல ஓடுற நீரோடையில் மணிக்கணக்குல குளிப்போம். பசியெடுத்ததும் வீட்டுக்கு வருவோம். குட்டி மாமா ‘ஹோஸ் பைப்’ வெச்சு மாட்டை குளிப்பாட்டுறமாதிரி குளிப்பாட்டின பிறகுதான் எங்களை வீட்டுக்குள்ள விடுவார். அந்த பத்து வருசம் திரும்ப வராது.
யார்கிட்ட நடிப்பு கத்துக்கிட்டீங்க?
அது ரத்தத்துல இருக்குன்னு சொல்றது சுத்த பொய். ஏன்னா நடிப்பு எல்லார்கிட்டயும் இருக்கு. அதை வெளிய கொண்டுவர நாம என்ன பண்றோம்கிறதுலதான் இருக்கு. அப்பா, “ டேய் கூலா போடா .. டென்ஷன் ஆகாத! நடிப்புன்னு ஒண்ணு தனியா இல்ல…!”ன்னு சொன்னார். ஆனா அம்மா “ இவனுக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு பண்ணுங்கன்னு “ சொன்னாங்க. அம்மாவுக்காக என்னை கலைராணி மேடம்கிட்ட அனுப்பினார் அப்பா. அவங்க உணர்ச்சிகளை எப்படி சரியா கட்டுப்படுத்தி நடிக்கிறதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க.
மணிரத்னம்கிட்ட பிடிச்சது?
அவரோட துணிச்சல் பார்த்து ஆடிப்போயிட்டேன். நீலம் புயல் கரையைக் கடக்கப்போகுதுன்னு சொல்லிட்டாங்க. மொத்த யூனிட்டையும் அழைச்சுகிட்டு நீலம் புயலை சூட் பண்ண காசிமேடு வந்துவிட்டார். எப்படியும் காத்தோட வேகம் 100 கிலோமீட்டருக்கு மேலத்தான் இருக்கும். அதுலயே நடிக்க வச்சுட்டார். அப்புறம் கிளிசரின் இல்லாம அழவும் வைச்சிட்டார். கடல் படத்துல ஒரு மீனவப்பெண்ணுக்கு அவங்க குடிசையில துளசி பிரசவம் பார்ப்பாங்க. நானும் அந்த பிரசவத்துல இருப்பேன். குழந்தையை எடுத்து என்னோட கையில கொடுக்குற சீன். குழந்தையை கையில வாங்கினதும் நான் பட்டுன்னு அழுதுட்டேன்.
தாத்தா - அப்பா படங்கள் ரீமேக் ஆனா, எந்தப் படங்கள்ல நடிக்க ஆசை?
தாத்தா படங்கள் அதிகம் பார்க்கல. ஆனா அப்பா படங்கள்ல பிஸ்தா, உள்ளத்தை அள்ளித்தா ரெண்டுலயும் நடிக்கணும். ரெண்டுமே ஊட்டியில எடுத்த படங்கள். அவ்வளோ நல்லா இருக்கும்.
அப்பா திரும்பவும் நடிக்க வந்தாச்சு போல?
ஆமா! கே.வி.ஆனந்த் இயக்கத்துல ‘அநேகன்’ படத்துல. தனுஷ் ஹீரோ. படத்தைப் பத்தி, கேரக்டர் பத்தி மட்டும் என்கிட்ட கேட்காதே. அப்புறம் மீடியாகிட்ட பேசும்போது தானா வெளிய வந்துடும்ன்னு சொல்லிட்டார்.
இப்போ நடிக்கிற படங்கள்?
ரவிதியாகராஜன் இயக்கத்துல ‘என்னமோ ஏதோ’. இதுல லல்வர் பாயா நடிக்கிறேன். ரகுல் ப்ரீத், நிகிஷான்னு ரெண்டு நாயகிகள். ரெண்டுபேருமே ரொம்ப க்யூட். அப்புறம் ‘சிப்பாய்’ல கல்லூரி மாணவனா நடிக்கறேன். சிலம்பாட்டம் சரவணன் இயக்குறார். அப்புறம் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்துல ‘வை ராஜா வை’ இது ஒரு த்ரில்லர். இந்த மூணு படத்தோட கதைகளுமே வேற வேற ரகம். இந்த படங்கள் வெளிய வந்ததும் கௌதம் தேறிட்டான்னு சொல்வீங்க.
கேர்ள் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்களா?
ஐயையோ... எனக்கு பொண்ணுங்கன் னாலே பயம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment