Published : 26 Mar 2017 06:32 PM
Last Updated : 26 Mar 2017 06:32 PM
ரஜினி ரசிகனுக்கும், கமல் ரசிகனுக்கும் ஏற்படும் தோழமை, மோதல், பிரச்சினைகளே 'எங்கிட்ட மோதாதே'.
ரஜினி ரசிகர் நட்டி நட்ராஜுக்கும், கமல் ரசிகர் ராஜாஜுக்கும் கட்-அவுட் வரைவதுதான் தொழில். ஒரு கட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று பாலாசிங்கிடம் இருந்து பிரிந்து வருகிறார்கள். நட்ராஜ் தன் சொந்த ஊரில் நண்பன் ராஜாஜ் உடன் கட்-அவுட் வரையும் தொழில் தொடங்குகிறார். ஊரில் பிரபலமாகும்போது ஒரு பிரச்சினை எட்டிப் பார்க்கிறது. அதனால் இருவரும் பிரிகிறார்கள். என்ன பிரச்சினை, ஏன் பிரிகிறார்கள், இருவரும் என்ன ஆகிறார்கள் என்பது மீதிக் கதை.
ரசிகர்களை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க முயற்சித்ததற்காக இயக்குநர் ராமு செல்லப்பாவுக்கு வாழ்த்துகள்.
நட்டி நட்ராஜ் ரஜினி ரசிகனா தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ரஜினியின் மேனரிசங்களை பிரதிபலிப்பதும் ரசிக்கும்படி இருக்கிறது. தெனாவட்டான பேச்சு, கச்சிதமான உடல் மொழியில் கவனம் ஈர்க்கும் நட்டி படத்தை ஒட்டுமொத்தமாக தன் தோள்களில் தூக்கி நிறுத்துகிறார். சண்டைக் காட்சிகளில் மட்டும் நட்டி கொஞ்சம் கவனம் செலுத்துவது அவசியம்.
கமல் ரசிகராக நடித்திருக்கும் ராஜாஜ் நடிப்பில் பெரிதாய் எதையும் செய்யவில்லை. அவருக்கான நடிப்புக் களம் இருந்தும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
கிராமத்துப் பெண்களாக சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள். நட்டியுடன் பேசும் தேர்தல்- பட ரிலீஸ் சம்பந்தப்பட்ட அந்த ஒற்றைக் காட்சியில் அனுபவ நடிப்பை வழங்கி அப்ளாஸ் அள்ளுகிறார் ராதாரவி.
வழக்கமும் பழக்கமுமான கதாபாத்திரம் என்றாலும் அதற்கான நடிப்பை உண்மையாக கொடுத்திருக்கிறார் விஜய் முருகன். ஃபெரேரா, முருகானந்தம் ஆகியோர் சரியான தேர்வு.
நட்ராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. பின்னணி இசை சில இடங்களில் மட்டும் பொருத்தமாக உள்ளது. கணேஷ் சந்திராவின் கேமரா 87-88களின் காலத்தை கண்முன் நிறுத்துகிறது.
''ரஜினி, கமலை விட அவங்க ரசிகனுக்குதான் பவர் ஜாஸ்தி'', ''நாங்க வரைஞ்சு வைச்ச கட்-அவுட்ல ஊத்துற பாலபிஷேகமும், வேட்டு சத்தமும்தான் எங்களுக்கு கொண்டாட்டம்'' போன்ற இயக்குநர் ராமு செல்லப்பாவின் வசனங்கள், நெல்லை வட்டார மொழி, கட்-அவுட் உயரம், போக்குவரத்துக் கழகம், பொறி உருண்டை, கலர் சோடா என 80களின் சில நுட்பமான சங்கதிகள் படத்தில் மிகச் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கலை இயக்குநர் ஆறுச்சாமியின் உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது.
ரசிகர்கள் இடையே நடக்கும் மோதலை பின்னணியாகக் கொண்டு கதையை அமைக்காமல், அவர்களின் தொழில், குடும்பம், காதல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே இயக்குநர் அதிகம் முன்னிறுத்துகிறார்.
ரசிகர்களுக்குள் எழும் வாக்குவாதம், பிரச்சினையே ரஜினியா? கமலா? என்று வரும் போட்டிதான். அதனால்தான் உச்சகட்ட மோதல் வெடிக்கும். ஆனால், அதை லேசு பாசாக அணுகிவிட்டு கதையை வேறு பாதையில் நகர்த்துகிறார் இயக்குநர் ராமு செல்லப்பா.
இரண்டாம் பாதியில் உள்ள முக்கியக் காட்சிகள் முதல் பாதியிலேயே வந்திருக்க வேண்டும் என்று யோசிக்க வைக்கிறது. பகை என்ன என்பதை யூகிக்க முடிவதும், அதுவே அடுத்தடுத்து தொடர்வதும், அந்தப் பகையை முடிக்காமல் நீட்டி முழக்குவதும் அலுப்பை வரவழைக்கின்றன.
மொத்தத்தில் 'எங்கிட்ட மோதாதே' படம் ரசிகரின் ஆதிக்கத்தை பதிவு செய்யாமல், விருப்பத்தை மட்டுமே பதிவு செய்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT