Last Updated : 08 Nov, 2013 12:06 PM

 

Published : 08 Nov 2013 12:06 PM
Last Updated : 08 Nov 2013 12:06 PM

சிம்பு கூட பாடப்போறேன்! - ரம்யா நம்பீசன்

பீட்சா படத்தின் மூலம் கவனம் பெற்ற ரம்யா நம்பீசன் தற்போது சூடான பின்னணிப் பாடகி. மம்தா, ஸ்ருதி, ஆன்ட்ரியா வரிசையில் பிஸியாக நடித்துக்கொண்டே பாடவும் செய்யும் இந்தக் கொச்சின் கிளியின் குரலுக்குக் கோலிவுட்டில் மவுசு கூடியிருக்கிறது. ஷங்கரின் உதவியாளர் இயக்கிவரும் ‘டமால் டுமீல்’ படத்தில், அனுபவ் ஜோடியாக நடித்துவரும் ரம்யாவைப் படப்பிடிப்பில் பிடித்தோம்.

பீட்சா படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஆனால் விஜய் சேதுபதிக்குக் குவிந்த அளவுக்கு உங்களுக்கு வாய்ப்புகள் வரவில்லையே?

எனக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்குப் பிடித்த மாதிரிப் பல படங்கள் இல்லை. அதுவுமில்லாமல் தொடர்ந்து புதுமுக ஹீரோக்களோடு நடியுங்கள் என்றால் எப்படி நடிப்பது, அதுதான் மறுத்துவிட்டேன்.

ராமன் தேடிய சீதை படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் அறிமுகமானீர்கள். ஆனால் அந்தப் படத்தைப் பற்றி வாய்திறப்பதில்லையே?

ஒருநாள் ஒரு கனவு படத்தில் கூடத்தான் ஒரு சின்ன ரோலில் நடித்தேன். ஆனால் ரசிகர்கள் நம்மை எந்தப் படத்தின் மூலம் நினைவு வைத்துக் கொள்கிறார்களோ, அந்தப்படத்தை அடிக்கடி குறிப்பிடுவது ஒன்றும் தவறில்லையே. ஆட்டநாயகன், இளைஞன், ஆகிய படங்களில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் அந்தப் படங்களில் நான் நடித்ததாக யாருக்கும் நினைவில்லை. குள்ளநரிக்கூட்டம் வெற்றிப்படம்தான், ஆனால் என்னைப் பிட்சா பட ஹீரோயினாகத்தான் எல்லோருக்கும் பிடிக்கிறது. விரைவில் வெளியாக இருக்கும் ‘ரெண்டாவது படம்’ எனக்கும் இன்னும் ஒரு பரிமாணம் கொடுக்கும் கண்டிப்பாக.

பாண்டிய நாடு படத்தில் லட்சுமி மேனனுக்கு நீங்கள் பாடிய குத்தாட்டப் பாடல்தான் தற்போது பெரிய ஹிட் ! கேள்விப்பட்டீர்களா?

இசையமைப்பாளர் இமானுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்னை ரம்மி படத்தில் பாட வரும்படி முதலில் இமான் அழைத்தார். ஆனால் அந்த நேரத்தில் என்னால் முடியாமல் போய்விட்டது. இந்தமுறை உங்கள் குரலுக்குச் சரியான ஒரு ட்யூன் சிக்கியிருக்கிறது வாருங்கள் என்றார். அப்படித்தான் “பை பை பை கலாச்சிபை’’ பாடலைப் பாடினேன்.

லட்சுமி மேனன் உங்கள் ஊர்ப் பெண்தானே அவருக்காகப் பாடிய உங்களுக்கு நன்றி சொன்னாரா?

லட்சுமி மேனனை எனக்குப் பிடிக்கும். அவரும் பிஸி. நானும் பிஸியாக இருக்கிறேன். அவர் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரும் எனக்குச் சொல்லவில்லை.

நடித்துக்கொண்டே பாடுவதை எப்போது தொடங்கினீர்கள்?

மலையாளப் பட உலகில் எனக்குப் பாடும் வாய்ப்பு அமைந்தது. நான் நடிக்கும் படங்களிலேயே பாடும் வாய்ப்பை அவர்களே முன்வந்து கொடுக்கத் தொடங்கினார்கள். நான் நடிக்காத படங்களிலும் பாடும் வாய்ப்பு வந்தது. இப்படி அங்கே ஆறு பாடல்களுக்கு மேல் பாடிவிட்டேன். என் தம்பி ராகுல் உன்னியும் தற்போது ஒர் இசையமைப்பாளர். அவர் இசையிலும் பாடியிருக்கிறேன். தற்போது நடித்துவரும் டமால் டுமீல் படத்துக்காகத் தமன் இசையில், சிம்பு அல்லது யுவனோடு பாடப்போகிறேன். எனக்காக நானே பாடுவதும் பிடித்திருக்கிறது.

கேள்வி ஞானம் வழியாகத்தான் பாடத் தொடங்கினீர்களா?

இல்லை. எனது அப்பா சுப்ரமணியன் ஒரு நவீன நாடகக் கலைஞர். சிறுமியாக என்னையும் பல நாடகங்களில் நடிக்க வைத்திருக்கிறார். திரிச்சூரில் உள்ள ஆர்.கே.வி. இசைப்பள்ளியில் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டேன். அந்த அடித்தளம்தான் இப்போது கைகொடுக்கிறது.

நடிகை, பாடகி- எப்படி உணர்கிறீர்கள்?

நடிகை என்றால் ஒரு அலட்சியப் பார்வையும், நக்கலும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அதுவே எனக்குப் பாடகி என்ற அடையாளமும் சேர்ந்துகொள்ளும்போது நம்மை ரொம்பவே மரியாதையாகப் பார்க்கிறார்கள். இனிப் பாடத் தெரிந்த பெண்கள் நடிக்க வந்தால், அதை மறைத்து வைத்துக்கொள்ள வேண்டாம்.

பாடிக்கொண்டே நடிக்கும் கருப்பு வெள்ளை கதாநாயகிகளில் யாரையாவது அறிவீர்களா?

யாரைப் பிடிக்கும் என்று கேளுங்கள். எனக்குப் பானுமதி அம்மா ரொம்பப்பிடிக்கும். எனது அம்மா ஜெய பானுமதியின் ரசிகை. அவரது பாடல்களை இப்போதும் அற்புதமாகப் பாடுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x