Published : 24 Feb 2014 11:44 AM
Last Updated : 24 Feb 2014 11:44 AM
புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில், ஒரு இயக்குநரின் படைப்பில் சசிகுமார் தனி உற்சாகம் காட்டுகிறார். ‘பிரம்மன்’ படம் ரிலீஸாகியுள்ள நிலையில் அவரைச் சந்தித்தோம்.
“முதன் முறையாக சந்தானம் கூட்டணி... வெளிநாட்டில் பாடல்கள்... எப்படி இருந்தது?”
சந்தானத்துடன் முதல் நாள் நடிக்கும் போது எனக்கு சின்ன தயக்கம் இருந்தது. ஆனா, முதல் ஷாட்டிலேயே நண்பர்களாகி விட்டோம். என் படத்தில் முதல் முறையாக சந்தானம், சூரி ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. இந்தக் கூட்டணியை பார்க்கவே சந்தோஷமா இருக்கு. இத்தனை நாட்களாக உள்ளூரிலேயே சுற்றித் திரிந்த நான் முதன்முறையாக இந்த படத்திற்காக வெளிநாடுகளில் பாடல் ஷுட்டிங் போயிருந்தேன். அந்த அனுபவம் புதுசா இருந்தது.”
உடைகள் விஷயத்திலும் கலர்புல்லாக மாறிவிட்டீர்களே?
``எல்லாருமே சசிகுமார்னா கிராமத்து பாத்திரத்திற்குதான் சரியா இருப்பார்னு நினைக்கிறாங்க. `சுப்பிரமணியபுரம்', `நாடோடிகள்', `போராளி', `குட்டிப்புலி' இப்படி நடிச்ச படங்களால் வந்த தாக்கம் அது. என்னை நேர்ல பாக்குறப்போ எப்ப வுமே ஜீன்ஸ், டி-ஷர்ட்ல தான் இருக்கேன்.
அடுத்த படத்தில் குருநாதர் பாலாவோடு இணைகிறீர்களாமே?
சொல்ல முடியாத நெகிழ்விலும் மகிழ்விலும் இருக்கிற நான் அதை மனசுக்குள்ளேயே வைச்சுக்கிறதுதான் நல்லது. அதையும் மீறி நான் பேசினா முந்திரிக்கொட்டைத்தனமா ஆகிடும்
இயக்குநர்கள் நடிகர்களுக்காக காத்திருக்க கூடாதுனு சொல்றீங்களே.. இது சாத்தியமா?
நான் என்னோட விஷயத்தில் மட்டுமே அப்படி கூறினேன். ஏன்னா, நான் ஒரு இயக்குநர். ஒரு இயக்குநர் நடிகர்கிட்ட போய் தேதிகள் கேட்கிறப்போ வெயிட் பண்ணுங்கனு சொன்னா வர்ற வலி என்னவென்று எனக்கு தெரியும். அந்த வலியை நான் கொடுக்க விரும்பவில்லை. இயக்குநர்கள் படைக்கிற அந்த பிரம்மாக்கள். பிரம்மாக்கள் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் காத்திருக்க கூடாது இல்லையா. அதான் சொன்னேன்.
பாலாவின் குருநாதர் பாலுமகேந்திரா கடைசியாக நெருங்கிப் பழகியதும் பணியாற்றியதும் உங்களோடுதான். அவரின் மறைவு குறித்து?
கையில இருந்த அபூர்வ பொருளை சட்டுன்னு தொலைச்ச மாதிரி இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் சார்கிட்ட பேசியிருக்கலாமே... பழகியிருக்கலாமேன்னு தோணுது. அவர் என் தோள் மேல கைபோட்டு நின்ன நினைவு கண்ணீரா முட்டுது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT