Last Updated : 03 Feb, 2017 05:42 PM

 

Published : 03 Feb 2017 05:42 PM
Last Updated : 03 Feb 2017 05:42 PM

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக ரேடியோ பெட்டி தேர்வு - ரூ. 1 லட்சம் பரிசு

புதுச்சேரி அரசின் 2016ம் ஆண்டு சிறந்த திரைப்படமாக ரேடியோ பெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ. 1 லட்சம் பரிசினை முதல்வர் நாராயணசாமி வரும் 6ம் தேதி அளிக்கிறார்.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2016-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக ’ரேடியோ பெட்டி’ எனும் படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்துள்ளது.

இப்படத்துக்கு சங்கரதாஸ்சுவாமிகள் விருது மற்றும் ரூ. 1 லட்சம் பரிசினை வரும் 6-ம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் முதல்வர் நாராயணசாமி வழங்க உள்ளார். இவ்விருதினை படத்தின் இயக்குனர் ஹரி விஸ்வநாத் பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

’ரேடியோபெட்டி’ திரைப்படம் அருணாசலம் என்ற முதியவரை பற்றிய கதையாகும். அருணாசலம் தனது கடந்தகாலம் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருப்பவர். குறிப்பாக தனது அப்பா அளித்த ரேடியோவில் இளமைக்கால மெல்லிசை பாடல்களை கேட்பதில் மகிழ்பவர். தனது குடும்பம், மெல்லிசை ஆகிய இரண்டில் ஒன்றை அவர் தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இரண்டில் ஒன்றை வாழ்நாள் முழுக்க இழக்க வேண்டும். அவர் எதை தேர்வு செய்வார் என்ற கதை களத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படமே ’ரேடியோ பெட்டி’.

இத்திரைப்பட இயக்குநர் ஹரிவிஸ்வநாத் எழுதி இயக்கிய முதல் குறும்படமான ’இடுக்கன்’ கடந்த 2013ம் ஆண்டு நார்வே தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதை பெற்றுள்ளது.

'ரேடியோபெட்டி' திரைப்படத்துக்கான விருது வரும் 6ம் தேதி வழங்கப்பட்டவுடன், ஜீவா திரையரங்கில் இலவசமாக திரையிடப்படும். இதர நாட்களில் 7ம் தேதி மாலை 6 மணிக்கு ஒட்டாள் (மலையாளம்), 8ம் தேதி மதியம் 3 மணிக்கு நானு அவனல்ல அவளு (கன்னடம்), மாலை 6 மணிக்கு அன்வர் கா அஜப் கிஸ்ஸா (இந்தி) ஆகிய திரைப்படங்கள் இத்திரையரங்கில் திரையிடப்படும். அனுமதி இலவசம். .

தேர்தலால் தாமதம்:

திரைப்பட விருதுகள் விழா கடந்தாண்டு இடைத்தேர்தல் காரணமாக நடைபெறவில்லை. அதனால் 2016ம் ஆண்டு விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x