Published : 01 Nov 2013 12:28 PM
Last Updated : 01 Nov 2013 12:28 PM
''எல்லோரிடமும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கவிதை மாதிரி அது வெளிப்படும். அந்தக் குழந்தைத்தனம் என் கிட்ட டான்ஸில் இருக்கு. அதுதான் என்னை ஸ்பெஷலா இயக்கிக்கொண்டிருக்கு!'' நடனம் குறித்துப் பேசத் தொடங்கினாலே.. ஒரு குழந்தையைப்போல ஆர்வமாகிவிடுகிறார் பிரபுதேவா. சென்னையை அடிக்கடி ஆசிர்வதித்துக்கொண்டிருக்கும் கனமழைக்கு நடுவே பிரபுதேவாவைச் சென்னையில் பிடிக்க முடிந்தது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸனுடன் பிரத்தியேகமாகப் பேசியதிலிருந்து...
பாப் உலகின் மாபெரும் பாடகர் என்பதைத் தாண்டி முன் மாதிரியான நடன அசைவுகளை உலகுக்குத் தந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவரது பாதிப்பு உங்களிடம் இருக்கிறது. ஆனால், பிரபுதேவாவின் தனித்துவம் என்பது எப்போது வெளிப்பட்டது?
மைக்கேல் ஜாக்ஸன் என்னை ரொம்பவே ஈர்த்தவர். அவரோட நடனம் நவீனத்தின் வெளிப்பாடு. அவரது பாதிப்பு என்னிடம் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம் நான் அவரது தீவிர ரசிகன். ஒப்புக்கொள்கிறேன். நடனம், என் சின்ன வயதுக் கனவு. அளவுகடந்து ஆர்வத்திலும், அது சார்ந்த தேடலிலும் கிடைத்த பொக்கிஷம்தான் என் நடனம். சின்ன வயதிலேயே நடனத்தைத் தொடர்ந்ததாலேயே, அதில் நிறைய புதுமைகளைக் கொடுக்கணும் என்று மனதிற்குத் தோன்றியிருக்கலாம். அப்படித்தான் நான் மைக்கேல் ஜாக்ஸனைக் கண்டடைந்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னையும் அறியாமல் அசைவுகள் பிறப்பதில் என் தனித்துவம் உணர்ந்தேன். அதை எப்போது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. இப்பவும், ஒவ்வொரு ஒத்திகையின் போதும் அவ்வளவு என்ஜாய் பண்ணி மூவ்மெண்ட்ஸ் பண்ணுவோம். அந்தச் சந்தோஷ நேரத்தில் புதுப்புது அசைவுகள் பிறந்துகொண்டே இருக்கும். அந்த அசைவுகளை எல்லாம் கொஞ்ச வருடம் கழித்துப் பார்த்தால் ரொம்பவே க்யூட்டா இருக்கும். அதில் கண்டெம்பரரி தன்மை இருக்கும். இப்படித்தான் என்னுடைய நடனத்தை எடுத்துக்கிறேன்! ஆனால் இது போதாது.
இந்தி சினிமாவை இயக்கும்போது உங்களை ஒரு தமிழ்க் கலைஞனாக உணர்ந்திருக்கிறீர்களா?
நான் என்பதை எப்படி மறந்துவிட முடியும். எந்தநாட்டில் வாழ்ந்தாலும், இந்தியர்கள் தங்களை இந்தியர்களாகத்தானே உணர முடியும். தமிழன் என்பதில்தான் எனக்குப் பெருமையே. இதை நன்றாக உணர்ந்திருக்கிறேன். பாலிவுட்டிலும், அதை உணர்ந்து என்னை நன்றாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அங்குப் பாராட்டும், வெற்றியும் அவ்வளவு மரியாதையோடு கிடைக்கிறது. எல்லோருக்கும் நான் நன்றி சொல்லணும். இந்தப் பயணம் நன்றாகவே இருக்கிறது.
வெற்றிகரமான நாயகனாக இருந்தபோது உங்களுக்கென்று நிறைய ரசிகர் மன்றங்கள் இருந்தன. அவற்றின் நிலை இப்போது?
தமிழில் இப்போது நிறைய படம் இல்லை. எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். ஆனால், பெரிதாகத் தற்போது ஒன்றும் நடக்கவில்லை. தலைமை ரசிகர் மன்றம் இருக்கு. படம் எதுவும் இப்போது இல்லை. அவரவரது வேலைகளைக் கவனிக்கிறார்கள். ரசிகர்களின் அன்பு மாறிக்கொண்டே இருப்பதல்ல. அவர்கள் இதயத்தில் இடம் கொடுத்துவிட்டால், அது சொந்த வீட்டில் குடியிருப்பது மாதிரி. விரைவில் ‘களவாடிய பொழுதுகள்’ வரும். அப்போது பாருங்கள்.
மாஸ் ஹீரோக்களை முழுமூச்சாக இயக்கிவருகிறீர்கள். கல்வி, சிந்தனை எல்லாம் மாறினாலும் மாஸ் ஹீரோக்களை வழிபடும் போக்கு தொடரவே செய்கிறதே?
என்னதான் மாற்றங்கள் இருந்தாலும், டெக்னிக்கல் வளர்ச்சி இருந்தாலும் மக்கள் மக்கள்தான். பைவ் ஸ்டார் உணவகத்தில் சாப்பிட்டாலும், வீட்டில் சாப்பிடும் சுவை, தனிதானே. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட இந்தியப் படங்கள் எதுவாக இருந்தாலும் அந்தப் படத்தில் சண்டை, நடனம், பாட்டு, ரொமான்ஸ் இப்படி எல்லாமும் இங்கு வேணுமே. அது தேவைப்படுதே. மற்ற நாட்டின் படங்கள் பார்த்தாலும், நம்ம படங்கள் என்று வரும்போது அதை நிச்சயம் எதிர்பார்க்கத்தானே செய்கிறோம். நாம் நாம்தான். நட்சத்திரங்களைக் கொண்டாடும் போக்கும் அப்படித்தான். கண்டிப்பா இருக்கணும். அது தனது ஹீரோவுக்காகத் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குச் செல்லக்கூடாது. அது முட்டாள்தனம். காரணம் உங்களுக்காக உங்கள் ஹீரோ சாக முடியாதே. அவருக்குக் குடும்பம் இருக்கிறதல்லவா?? கட் அவுட் வையுங்கள், தோரணம் கட்டுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பாலாபிஷேகம் பண்ணாதீர்கள். அந்தப் பாலை ஏழ்மையில் வாடும் குழந்தைகளுக்குக் கொடுங்கள். வெடிவாங்கும் பணத்தையும்கூட இப்படி உதவுங்கள்.
மாஸ் மசாலா படங்களை மட்டும்தான் இயக்குவீர்களா? மென்மையான, யதார்த்த சினிமாவை உங்களிடம் எப்போது எதிர்பார்க்கலாம்?
நானும் தரணும் என்றுதான் இருக்கிறேன். அதற்குத் தயாரிப்பாளர் வரணும். இப்போது எல்லோரும் என்னை வைத்துப் பெரிய பட்ஜெட் படம் பண்ணனும் என்றுதான் விரும்புறாங்க. நல்ல கதை சொன்னாலும்கூட, ''வாங்க சார், நாம ஆக்ஷன் படம் பண்ணுவோம். அதைத்தான் ஹீரோவும் விரும்புகிறார்!'' என்றுதான் அதிகம் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் நான், தயாரிப்பாளர், ஹீரோ ஆகிய எல்லோரின் ஆர்வமும் முக்கியம். இது எல்லாவற்றையும் கடந்து கண்டிப்பா மிகவும் எளிமையா, சின்ன பட்ஜெட் படம் பண்ணனும். அதுக்கான சூழல் சரியா அமையணும். கண்டிப்பா அமையும்.
உங்களை ஆச்சரியப்படுத்திய மாஸ் ஹீரோ?
சிரஞ்சீவி. என் நடன இயக்குநர் பயணம் அவரிடம் இருந்துதான் தொடங்கியது. அநியாயத்திற்குக் கடினமா உழைக்கிற மனிதர். நடனம், உடை, பிட்னஸ் எல்லாவற்றிலும் அவ்வளவு ஈடுபாட்டுடன் பயணிப்பவர். சூப்பர் ஸ்டாருக்கு என்னென்ன அடையாளங்கள் வேண்டுமோ, அதெல்லாம் அவரிடம் ஒட்டிக்கொண்டிருப்பதை அவர் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.
ரஜினி, கமல், யாரை முதலில் இயக்க விருப்பம்?
இருவருமே பெரிய ஆளுங்க. அவங்க கூட வேலை பார்க்கப் பயமாக இருக்கிறது. அவ்வளவு அறிவு எனக்கு இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
தமிழ்ப் படங்கள் எப்போ?
தொடர்ச்சியாக ஹிந்திப் படங்கள் போய்க்கிட்டிருக்கு. சென்னையை ரொம்பவே மிஸ் பண்றேன். அதுதான் எனக்கும் ஃபீலிங்ஸா இருக்கு. கூடிய விரைவில் வரணும். தமிழ்ப் படம் பண்ணணும்னு அவ்ளோ ஆசையா இருக்கேன்.
பாலிவுட் உலகம் எப்படி?
பயங்கர டிசிப்ளின். ஒவ்வொரு வேலையும் பெரிய அளவில் திட்டமிட்டுச் செய்கிறார்கள். நேரம், உழைப்பு, ஈடுபாடு என்று எல்லாமும் சரியாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கு.
பணம், புகழ், வேலை இவற்றிற்கு இடையே நீங்கள் எதைத் தொலைத்துவிட்டதாக நினைக்கிறீர்கள்?
இக்கரைக்கு அக்கரை பச்சை. ஒன்றை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்றால் இன்னொன்றை இழந்துதான் ஆக வேண்டும். மற்றபடி எல்லாமும் ஓ.கே.தான்.
பிள்ளைகளுக்காவே காதலை உதறினீர்கள் இல்லையா?
வேண்டாம். அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம்.
அப்பா பிரபுதேவா பற்றி?
பையன்கள்கூட நேரம் செலவழிக்கும்போதெல்லாம் ஜாலியான, குழந்தையாக மாறிடுவேன். கல்வி தொடங்கி அவங்க பருவத்தில் என்னன்ன ஆசைகள், தேவைகள் இருக்கோ அதை எல்லாம் தோழனாக உடன் இருந்து பார்த்துக்கொள்கிறேன். என்னோட அப்பா என்னை எப்படிப் பார்த்துக் கொண்டாரோ அப்படி. தீபாவளிக்குப் பசங்ககூட வெடி வெடிப்பதற்காகவே ஐந்து நாட்கள் விடுப்பில் சென்னை வந்திருக்கிறேன். வானம் தீபாவளிக்கு முதல்நாளும் மறுநாளும் ஒத்துழைக்கணும்ன்னு பிரேயர் பண்றேன். இப்போ ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா நேரம் செலவழிக்கணும். அவங்க கண்கள்ல மத்தாப்பு சிதறும் காட்சியைப் பார்க்கணும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT