Published : 13 Oct 2013 11:34 AM
Last Updated : 13 Oct 2013 11:34 AM
திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் கஷ்டப்படும் இரண்டு முதிர்கண்ணன்கள் சோகத்துடன் பாடுவதுபோல ஆரம்பிக்கும்போது, ஏதோ தற்போது நடக்கும் சமூகப் பிரச்சினையை இயக்குநர் சற்குணம் காமெடியாகச் சொல்லவருகிறார் என்று எதிர்பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிச்சம்.
அண்ணன்கள் இருவரும் 40 வயதை நெருங்கும் நிலையிலும் கல்யாணமாகாமல் இருக்க, 24 வயது தம்பி தனுஷ் நஸ்ரியாவைக் காதலிக்கிறார். நஸ்ரியாயும் அவரைக் காதலிக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் வீட்டை விட்டு வெளியே வந்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் கல்யாணம் செய்துகொண்டதை வீட்டில் சொல்ல முடியாத நிலை. எனவே நஸ்ரியாவை வேலைக்காரியாக நடிக்கச் சொல்கிறார். இதனால் ஏற்படும் குளறுபடிகள், கலாட்டாக்களைக் கடந்து கடைசியில் எல்லாம் சுபம்.
மனைவியையே வேலைக்காரியாக நடிக்கவைப்பதிலுள்ள ரிஸ்க் என்பது சுவாரஸ்யமான முடிச்சுதான். ஆனால் இதைச் சொல்லும் விதத்தில் சுவாரஸ்யம் இல்லையே.
எந்தக் காட்சியும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் அமையாமல்போனது படத்தின் மிகப் பெரிய பலவீனம். திரைக்கதையும் விறுவிறுப்பாக அமையவில்லை. தனுஷ் நன்றாகத்தான் நடிக்கிறார். ஆனால் பலவீனமான திரைக்கதையில் அது ஓட்டைப் பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீராகிறது.
உள்ளுணர்வு சொல்வது சில சமயங்களில் சரியாக இருக்கும். ஆனால் எல்லாச் சமயங்களிலும் இதையே அடிப்படையாக வைத்து நஸ்ரியா முடிவுசெய்வது ஏதோ சூதாட்டம்போல இருக்கிறது. ஆரம்பத்தில் நஸ்ரியா செய்யும் இந்த உள்ளுணர்வு விளையாட்டு போகப்போக, “போதும் நிறுத்தும்மா” என்று சொல்ல வைக்கிறது.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், படத்தில் அதற்கான சூழ்நிலைகளும், லோகேஷன்களும் பொருந்தவில்லை. உலகச் சுற்றுலா என்பதைத் தவிரப் பாடல்களைப் பற்றிச் சொல்ல எதுவுமில்லை.
சச்சின், சேவாக், கங்குலி என்று பெரிய ஜாம்பவான்கள் இருந்தாலும் சில மேட்ச்களில் இந்தியா சொத்தையாக விளையாடியிருக்கும். அதுபோல நன்றாக நடிக்கும் தனுஷ், அழகான நஸ்ரியா, கண்கவர் ஒளிப்பதிவுக்கு வேல்ராஜ், நல்ல டியூன்களுக்கு ஜிப்ரான், சிரிக்க வைக்க சிங்கம்புலி, பரோட்டா சூரி, எதிர்நீச்சல் சதீஷ்… இத்தனை திறமைகள் மொத்தமாய்க் கிடைத்தும் சொதப்பியிருக்கிறார் சற்குணம்.
இந்து டாக்கீஸ் தீர்ப்பு:
பெருத்த எதிர்பார்ப்போடு பார்வையாளர்களை நய்யாண்டி செய்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT