Published : 28 Oct 2015 11:22 AM
Last Updated : 28 Oct 2015 11:22 AM

குழந்தைகளுக்காக ஒரு படம் இயக்க வேண்டும்: இயக்குநர் மணிகண்டன் நேர்காணல்

தமிழ் திரையுலகுக்கு இன்னொரு மணிகண்டன் புதிய இயக்குநராகக் கிடைத்திருக்கிறார். ‘மிர்ச்சி’ சிவா, ஓவியா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘144’ படத்தை இயக்கிவரும் அவரைச் சந்தித்தோம்.

‘144’ படம் தடை உத்தரவு சட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளதா?

ஆமாம். அதே நேரத்தில் இது மிகவும் சீரியஸான கதை இல்லை. கொஞ்சம் நகைச்சுவை கலந்து கதையைச் சொல்லியிருக்கிறேன். இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு கதை இருக்கும். அவர்களின் கதாபாத்திரங்கள் படம் பார்க்கும் அனைவருக்கும் பிடிக்கும்.

ஏதாவது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறீர்களா?

உசிலம்பட்டி அருமே உத்தபுரத்தில் இரண்டு சமூகத்துக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அங்கு நடந்த சில விஷயங்களை வைத்துக் கொண்டு நான் சுவாரசியமாக திரைக் கதை அமைத்திருக்கிறேன். மேலும் மதுரைக்கு அருகில் மேல உரப்பனூர், கீழ உரப்பனூர் என இரண்டு ஊர்கள் இருக்கிறது. அங்கு 50 வருடங்களுக் கும் மேலாக கம்மாவில் மீன்பிடிக்கும் பிரச்சினை இருக்கிறது. 15 நாட்களுக் கும் மேலாக 144 தடை உத்தரவு போட்டிருந்தார்கள். 200 காவல்துறை அதிகாரிகள் காவல் காத்தாலும், மக்கள் யாருக்கும் தெரியாமல் வெளியூருக்கு சென்று படம் பார்த்துவிட்டு வருவது, பக்கத்து ஊரில் சென்று காதலிப்பது என்று இருந்திருக்கிறார்கள். இவ் விரண்டு சம்பவங்களையும் வைத்து நான் எழுதிய கதைதான் ‘144’. மற்றபடி இது நிஜக்கதை கிடையாது.

யாரிடமும் பணியாற்றாமல் ஒரு படத் தின் கதை, திரைக்கதையை எழுதுவது சுலபமாக இருந்ததா?

எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஈர்ப்பு அதிகம். பள்ளியில் படிக்கும் போது நாடகங்களை எழுதி நடித்திருக்கிறேன். சண்டிகரில் போய் மல்டிமீடியா படித்துவிட்டு, வந்து சென்னையில் பணியாற்றினேன். அனிமேஷன் கதைகள், நாடகங்கள் என நிறைய பணியாற்றி இருக்கிறேன். அவற்றின் மூலமாக கதை உருவாக்கம் பற்றி தெரிந்து கொண்டேன். இயக்குநர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இருவருமே என் நீண்டகால நண்பர்கள். அவர் களை நான்தான் சி.வி.குமாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். அவரு டைய தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு விளம்பர படம் செய்திருந்தேன். அது அவருக்கு பிடித்திருந்தது.

நானும் சி.வி.குமார் சாரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ‘அட்டகத்தி’, ‘சூது கவ்வும்’, ‘பீட்சா’, ‘வில்லா’ போன்ற படங்களுக்கு நான்தான் கிராபிக்ஸ் காட்சிகளைச் செய்தேன். அப்போது தான் நாமும் ஒரு கதையை எழுதி இயக்கலாமா என்று தோன்றியது. ‘144’ படத்தைத் தொடங்கினேன்.

முதல் படத்தை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

மிகவும் இனிமையாக இருந்தது. இப்படத்தில் நடித்தவர்கள் யாரும் என்னை முதல் பட இயக்குநராக பார்க்கவில்லை. எனக்காக நிறைய விட்டுக் கொடுத்து நடித்தார்கள். அதனால் இந்தப் படத்தை இயக்குவது எனக்கு சுலபமாக இருந்தது.

உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

1:30 மணி நேரம் ஓடும் வகையில், குழந்தைகளுக்காக சர்வதேச அளவில் படம் பண்ணும் ஒரு திட்டமும் இருக் கிறது. வரும் காலத்தில் கண்டிப்பாக பண்ணுவேன்.

தமிழ் திரையுலகில் உங்களைக் கவர்ந்த இயக்குநர் யார்?

தர் சாரை எனக்கு மிகவும் பிடிக் கும். அவர் எடிட்டிங்கில் கட் பண்ண முடியாத அளவுக்கு மிகவும் துல்லிய மாக படம் எடுப்பார் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதேபோல என் சிறுவயதில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைப் பார்க்கும்போது நடிகர், நடிகைகள் எல்லோரையும் மீறி இயக்குநர் தர் என பெயர் வரும் போது உற்சாகமாக கை தட்டுவார்கள். இப்படி பல விஷயங்களில் எனக்கு தர் சாரைப் பிடிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x