Published : 06 Feb 2017 12:15 PM
Last Updated : 06 Feb 2017 12:15 PM
'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் வெளிவர, தனது மொத்த சம்பளத்தையும் கொடுத்துள்ளார் லாரன்ஸ். இதனால் படக்குழு நெகிழ்ச்சியடைந்துள்ளது.
சாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், நிக்கி கல்ரானி, சதீஷ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. அம்ரீஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வேந்தர் மூவிஸ் மதன் உலகமெங்கும் வெளியிட, தமிழக உரிமையை மட்டும் சிவபாலன் பிக்சர்ஸ் வெளியிடவுள்ளது.
மதன் பிரச்சினையில் சிக்கியதால், இப்படமும் வெளியிட முடியாமல் போனது. பலமுறை உட்கார்ந்து பேசிய பின்னர், இறுதியாக பிப்ரவரி 17ம் தேதி படத்தை வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளார்கள்.
சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் சிவா, "'மொட்ட சிவா கெட்ட சிவா' இசை வெளியீட்டு விழா வரை வந்துள்ளது என்றால், அதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் அதை சார்ந்த நிர்வாகிகளும் தான். அவர்கள் அனைவருமே யாரிடமும் எந்தொரு உதவிக்காவும் செல்ல அவசியமில்லாதவர்கள். திரையுலகில் ஒரு பிரச்சினை வரும் போது, சொந்த செலவில் வந்து பல நாட்கள் உட்கார்ந்து பேசுவார்கள்.
முதன் முறையாக 42% பணத்தை வெளியீட்டுக்குப் பிறகு தருகிறோம் என்று சொன்னதை பைனான்சியர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். விரைவில் அப்பணத்தை மதன் தருவதாக சொல்லியுள்ளார். அந்த நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.
இப்படத்தில் உலகத்தில் மிகச்சிறந்த மனிதரான லாரன்ஸ் உடன் 2 வருடங்கள் பழக வாய்ப்பு கிடைத்தது. தனக்கு வரும் பணம் அனைத்துமே, யாருக்காவது உதவி செய்யத்தான் கடவுள் கொடுக்கிறார் என அவர் நினைக்கிறார். இப்படம் வெளியாக நிறைய பேர் ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர். அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் லாரன்ஸ் தான்.
இப்படப் பிரச்சினைகளைப் பேச ஆரம்பித்தவுடன், என்ன பிரச்சினை எனக் கேட்டார். அனைத்தையும் கேட்டுவிட்டு, நான் வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்றார். அதை யாருமே எதிர்பார்க்கவில்லை. 'என் படம் வெளியாக வேண்டும் அவ்வளவுதான்' என்றார். மறுபடியும் கணக்குப் பார்த்து வரும் போது, ஒரு தொகை வித்தியாசம் வந்தது. அந்த தொகையையும் நானே கொடுத்துவிடுகிறேன் என்று கூறி மீண்டும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
படத்தின் நாயகனே இவ்வளவு தூரத்துக்கு இறங்கும் போது, நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தான் பைனான்சியர்களிலிருந்து பலரும் இறங்கி வந்தார்கள். அவர் மட்டும் இறங்கி வரவில்லை என்றால் இப்படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகியிருக்கலாம்." என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT