Published : 11 Apr 2017 10:16 AM
Last Updated : 11 Apr 2017 10:16 AM

கதை ஜெயிக்கணும்.. கருத்து இருக்கணும்- ‘பவர் பாண்டி’ ராஜ்கிரண் நேர்காணல்

படங்களை மிக கவனமாக, பொறுமையாகத் தேர்வு செய்து நடிப்பவர் ராஜ்கிரண். நாயகனாக அறிமுகமான கடந்த 27 ஆண்டுகளில் 23 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். தற்போது தனுஷ் இயக்குநராக அறிமுகமாகும் ‘பவர் பாண்டி’யில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் பேசியதில் இருந்து..

‘புதுமுக இயக்குநர்’ தனுஷ் மீது எப்படி நம்பிக்கை வந்தது?

‘வேங்கை’ படத்தில் அப்பா - மகனாக நடித்துள்ளோம். சிறுபிள்ளையாக 4 வயதில் இருந்து அவரைப் பார்த்து வருகிறேன். எங்கள் இருவர் குடும்பத்துக்கும் நல்ல உறவு இருக் கிறது. அதனால் தனுஷின் திறமை என்ன வென்று எனக்குத் தெரியும். நான் எதிர்பார்த் ததற்கு மேலாகவே, மிக சிறப்பாக இயக்கியுள் ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் களது வயதுக்குத் தகுந்ததுபோல சொல்லிக் கொடுத்து, அவருக்குத் தேவையானதைக் காட்சிப்படுத்தியுள்ளார். இது அனைத்து இயக்குநர்களுக்கும் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி. சில இயக்குநர்கள் திறமை சாலியாக இருப்பார்கள். ஆனால், தனக்குத் தேவையானதை எப்படி நடிகர்களிடம் சொல்லி வேலை வாங்க வேண்டும் என்பது தெரி யாது. அதையும் சிறப்பாக செய்திருக்கிறார் தனுஷ்.

‘பவர் பாண்டி’யில் நடிக்க ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன?

முதலில் சுப்பிரமணிய சிவாதான் என்னைப் பார்க்க வந்தார். ‘ஸ்டன்ட் மாஸ்டர் பற்றிய கதை. பெரியவர்களின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்க வேண்டும் என்பது அவரது குறிக் கோள். இதுதான் திரைக்கதை’ என்றார். இதைக் கேட்டதுமே பிடித்திருந்தது. நான் செய்வதாக தயாரிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள் என் றேன். அடுத்தநாள் மறுபடியும் வந்து, ‘அண்ணே, இதை நான் இயக்கவில்லை. தம்பி தனுஷுடைய கதை. அவர்தான் இயக்கப் போறார்’ என்றார். பிறகு, தனுஷ் என்னைச் சந்தித்தார். ‘கண்டிப்பாக செய்யலாம்’ என்றேன்.

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் சிறப்பாக நடித்து தடம் பதித்துவருகிறார் தனுஷ். ஹாலிவுட்டிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவ்வளவு பெரிய நாயகன், முதன்முதலில் படம் இயக்கப் போகிறார் என்றால் ரஜினி சாரிடம் தேதி வாங்குவார் என்றுதானே நினைப் பார்கள். ஆனால், என்னிடம் வந்து, ‘நீங்கள்தான் சார் நாயகன்’ என்று தனுஷ் சொன்னது எவ்வளவு பெரிய விஷயம்! முழு கதையும் கேட்காமலே ஒப்புக்கொண்டுவிட்டேன்.

மிகவும் தேர்ந்தெடுத்து, யோசித்து நடிக்கிறீர் களே, என்ன காரணம்?

நான் ரொம்ப கஷ்டப்பட்டவன். அந்த நிலைமையில இருந்து இப்போது இப்படி ஆகியிருக்கிறேன். ஒரு நாளுக்கு 4 ரூபாய் 50 பைசாவுக்காக ஃபிலிம் ரெப்ரசன்டேடிவ் ஆக என் பணியைத் தொடங்கினேன். கஷ்டப் பட்டு வந்ததால், என்னால் அனைவருடைய கஷ்டத்தையும் உணர முடியும். பெரிய சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதற்காக நான் ஒப்புக்கொள்வதில்லை.

நான் நடிக்கும் கதை ஜெயிக்க வேண்டும். அந்தப் படம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், விநியோகஸ் தர், திரையரங்க உரிமையாளர் என அனை வருமே ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலை யில்தான் கதை கேட்பேன். கமர்ஷியல் வெற்றி மட்டுமல்லாது; கதையில் சமூகப் பிரச்சினையோடு ஒரு நல்ல கருத்து இருக்கிறதா என்றும் பார்ப்பேன்.

இன்று முன்னணி நாயகர்கள், இயக்குநர் களைவிட புதுமுகங்களின் படங்கள் பெரும் வெற்றியடைகிறதே?

எல்லா காலத்திலும் இந்த மாற்றம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. புதிது புதிதாகச் சொல்லக்கூடிய விஷயங்கள் எம்ஜிஆர் அய்யா, சிவாஜி அய்யா காலத்தில் இருந்தே ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அப்போது போட்டி அதிகம் இல்லாததால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களை லாப, நஷ்டங்கள் பெரிதாக பாதிக்காது. ஒரு படம் தோல்வி அடைந்தால், அடுத்த படத்தில் சரிசெய்து கொடுத்துவிடுவார்கள். இப்போது அப்படியில்லை. தரமான படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் என 10 பேர் கூட கிடையாது. 1,000 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் புதிதாகச் சொல்லும் விஷயங்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

பெரிய நடிகர்களுக்கு என தனி இமேஜ் இருக்கிறது. அந்த இமேஜுக்குள் அவர்கள் நடித்தால்தான் கமர்ஷியலாக வெற்றிபெற முடியும். அதே இமேஜுக்குள் கொஞ்சம் புதிதாகச் சொன்னால் படம் பிரம்மாண்ட வெற்றியடையும். அது கதையைத் தேர்ந் தெடுப்பதில் இருக்கிறது.

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவிடுகிறீர்கள். ஆனால், அங்கும் தவறான விஷயங்கள் நடக்கிறதே?

சமூக வலைதளங்கள் நமக்கு ஒரு வரப்பிரசாதம். முன்பு நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால், பத்திரிகை நண்பர்களை அழைத்துதான் சொல்ல வேண்டும். இப்போது அப்படியல்ல. நான் நினைப்பதை ஃபேஸ்புக், ட்விட்டரில் எழுத முடியும். சமூக வலைதளங்களை பயன்படுத்த தெரியாதவர்கள் மூலமாகதான் தவறும் நடக்கிறது. நல்லது இருந்தால் கெட்டதும் இருக்கும். அதே சமூக வலைதளங்கள் வாயிலாகத்தானே மெரினாவில் ஜல்லிக்கட்டு புரட்சி உருவானது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x