Published : 30 Jan 2017 10:37 AM
Last Updated : 30 Jan 2017 10:37 AM
தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது.
தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ரீமேக்கான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மனம்' உள்ளிட்ட பல படங்களில் நாக சைதன்யாவுக்கு நாயகியாக நடித்தவர் சமந்தா. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருமே காதலித்து வருகிறார்கள், விரைவில் திருமணம் என்று செய்திகள் வெளியானது. ஆனால், அச்செய்தி குறித்து இருவருமே தங்களது கருத்துகளை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறித்துவ முறைப்படி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
நாக சைதன்யா - சமந்தா நிச்சயதார்த்தம் குறித்து நாகார்ஜுனா, "எனது அம்மா தற்போது எனது மகளாகிவிட்டார். மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனது சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டார்.
நாகார்ஜுனா புகைப்படங்களை வெளியிட்ட பின்பு, சமூகவலைத்தளத்தில் பல்வேறு பிரபலங்களும் இந்த ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
சமந்தாவுக்கு நிச்சயதார்த்தமாகிவிட்டாலும் தொடர்ச்சியாக படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஷாலுடன் 'இரும்புத்திரை', தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் படம், விஜய் - அட்லீ இணையும் படம், பொன்ராம் - சிவகார்த்திகேயன் இணையும் படம் ஆகிய தமிழ் படங்களிலும், 3 தெலுங்கு படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT