Published : 31 Mar 2017 08:33 PM
Last Updated : 31 Mar 2017 08:33 PM
உண்மையை உரக்கச் சொல்ல நினைக்கும் இளைஞனின் மீடியா சார்ந்த போராட்டமே 'கவண்'.
ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் முதல் நாள் பணிக்குச் செல்லும்போதே பெரிய கலவரத்தைக் காட்சிப்படுத்தி, நல்ல பெயர் வாங்குகிறார் விஜய் சேதுபதி. ஆனால், அதைத் தொலைக்காட்சியில் வேறு விதமாக சித்தரிக்கின்றனர். மீடியாவில் தனி நபராக எதையும் மாற்ற முடியாது என உணரும் தருணத்திலும், நேரடி ஒளிபரப்பில் புகுந்து புறப்பட்டு ஓர் அரசியல்வாதியின் நிஜ முகத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். இதனால் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகிறது. அதற்குப் பிறகு விஜய் சேதுபதி என்ன ஆகிறார், வாய்மையையும், நேர்மையையும் பயன்படுத்த முடிந்ததா, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது மீதிக் கதை.
மீடியாவின் இன்னொரு முகத்தை காட்டத் துணிந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் முயற்சி வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்கான பிரயத்தனங்கள் இல்லாமல் வெறுமனே ஒரு சினிமாவை படைக்க கே.வி.ஆனந்த் முற்பட்டிருப்பது சறுக்கல்.
செய்தியாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான கடமை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. காதல் கைகூட தொடர்ந்து முயற்சிப்பது, ஆண்களின் சபலத்தை சொல்வது, உண்மைக்காக கோபப்படுவது, நேர்மைக்காக மிதிப்பது, தூக்கத்திலும் செய்தி குறித்த தீவிரத்தில் உளறுவது, சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு சந்திப்போம் என சமாளிப்பது என கிடைத்த எல்லா இடங்களில் குறையில்லாமல் ஸ்கோர் செய்கிறார்.
மடோனா செபாஸ்டியன் நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார்.
டி.ராஜேந்தர் சில இடங்களில் எதுகை, மோனையோடு பேசுவது வழக்கமான பாணியாக இருந்தாலும், அதற்குப் பிறகு கதாபாத்திரத்தின் தேவை உணர்ந்து நடித்திருக்கிறார்.
பாண்டியராஜன், ஜெகன், விக்ராந்த், பவர் ஸ்டார் சீனிவாசன், நாசர், போஸ் வெங்கட், தர்ஷனா ராஜேந்திரன், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
ஆகாஷ் தீப் சாய்கல் நடிப்பில் கூடுதல் அக்கறை செலுத்தியிருக்கலாம். வசன உச்சரிப்பு, ஹேர் ஸ்டைல் என எதுவும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.
அபிநந்தன் ராமானுஜத்தின் கேமரா தொலைக்காட்சி உலகத்தினை நம் கண்முன் நிறுத்துகிறது. ஹிப் ஹாப் தமிழா இசையில் கண்ணம்மா ராக் பாடல் மட்டும் கவன ஈர்ப்பு. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. ஆண்டனி எடிட்டிங்கில் இன்னும் சில இடங்களில் கண்டிப்பு காட்டியிருக்கலாம்.
''சோஷியல் மீடியாவுல உக்காந்துகிட்டு பக்கம் பக்கமா கருத்து சொல்றதால பத்து பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது, ரத்தமும் சதையுமா ரோட்டுல இறங்கிப் போராடணும்'', ''நீ எதையாவது மாத்தணும்னு நினைச்சா மாத்த முடிஞ்ச உயரத்துக்கு நீ போகணும்'', ''நம்ம ஜனங்க கொஞ்சம் அதிகமாவே தூங்குவாங்க, ஆனா முழிச்சுக்க வேண்டிய நேரத்துல கரெக்டா முழிச்சிப்பாங்க, அப்படி முழிச்சிக்கிட்டா நீ எல்லாம் காணாமப் போயிடுவ'', ''கக்கூஸ் கப்படிச்சா பாலூத்தியா கழுவுறீங்க, அதுக்காக ஆசிட்டை வெச்சு காலைக் கழுவ முடியாது'' போன்ற சுபா - கபிலன் வைரமுத்துவின் வசனங்கள் படத்துக்கு வலிமை சேர்க்கின்றன.
பிரேக்கிங் நியூஸ், பரபரப்புப் பசி, முந்தித் தரும் பிரத்யேக செய்திகள் என தொலைக்காட்சிகள் அணுகும் விதத்தை இயக்குநர் கே.வி.ஆனந்த் சரியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். அதற்காக பாண்டே, அர்னாப், கோபிநாத் போன்றோரின் பெயர்களைக் கூட ரெஃபரன்ஸ் எடுத்து பதிவு செய்திருக்கிறார்.
ஒரு குழுவை வெளியேற்றும் போது பரிதாப உணர்வைத் தூண்ட வைப்பது, அதற்காக அடித்து அழ வைப்பது, வெறுமனே வாய்ப்பந்தலில் வம்பிழுப்பது என ரியாலிட்டி ஷோவில் நடக்கும் டிராமாவை அச்சு பிசகாமல் அள்ளி வந்திருக்கிறார்.
எதிர்பாராத சமயத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் சொல்லும் திறமை மீதான கருத்து, விஜய் சேதுபதியின் டயலாக் டெலிவரியை நக்கல் செய்வது, விளம்பர நிறுவனத்தின் பிரதிநிதியிடம் நிதானம் கடைபிடிக்கும் விஜய் சேதுபதியின் அணுகுமுறை, நாசரின் வருகை, ஜெகன் உள்ளிட்ட குழுவினரின் திடீர் பல்டி ஆகியவை ரசனை அத்தியாயங்கள்.
ஆனால், செய்தியை ஒரு தொலைக்காட்சி எப்படிப் பார்க்கிறது, எந்த கோணத்தில் அணுகி, ஒளிபரப்புகிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஊடக அரசியல் பேசாமல் ஊடகத்தை நிர்வகிக்கும் முதலாளியின் திட்டமிடப்பட்ட சதிகளை, பித்தலாட்டங்களை, தப்பாட்டங்களை பதிவு செய்கிறது.
சாயக்கழிவு நீர் பிரச்சினை, ஊடக அறம் தொடர்பான பிரச்சினை, இந்து- முஸ்லிம் மதப் பிரச்சினை என பல பிரச்சினைகளை ஒரே படத்தில் சொல்லிவிடும் இயக்குநரின் அவசரம் படத்திலும் தெறிக்கிறது. அதனாலேயே என்னவோ லாஜிக் பற்றி இயக்குநர் கொஞ்சமும் கவலைப்படவில்லை.
தூரத்தில் இருந்து விஜய் சேதுபதியால் கேமராவில் எடுக்கப்படும் காட்சிகள் எப்படி அவ்வளவு துல்லியமாக தொலைக்காட்சியில் தெரிகிறது, ஜீப்பே கவிழ்ந்த பிறகும் எந்த சேதாரமும் இல்லாமல் ஃபுட்டேஜ் கிடைப்பது எப்படி என்பன போன்ற சில கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
அதீத கற்பனையோடும், நம்பகத்தன்மை இல்லாத விதத்திலும் படம் இருந்தாலும், ரசிகர்களை மறக்கச் செய்து, காட்சிக்குள் ஈடுபடுத்துவதின் மூலம் 'கவண்' ஊடக விளையாட்டாக நிற்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT