Published : 04 Jun 2016 11:00 AM
Last Updated : 04 Jun 2016 11:00 AM
‘விசாரணை’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் தினேஷ். ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்து முடித்தவர், தற்போது ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.
அதிகமாக சம்பளம் கேட்பதாக உங்களைப் பற்றி ஒரு சர்ச்சை இருக்கிறதே?
‘அட்டகத்தி’ படம் வெளியான பிறகு பெரிய சம்பளத்துடன் என்னை பலரும் நடிக்க அழைத்தார்கள். ஆனால் நான் மறுத்துவிட் டேன். இதுவரை பெரிய சம்பளத்துடன் வந்த பல படங்களின் வாய்ப்பை நான் நிராகரித்துவிட்டேன். அதேபோல் எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று இதுவரை கேட்டதில்லை. தயாரிப்பு நிறுவனம் கொடுக்கும் சம்பளத்தை வாங்கி நடித்து வருகிறேன் என்பதுதான் உண்மை. அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு சென்னைக்குள் வீடு மற்றும் இடங்களை வாங்கிப் போடும் நடிகன் நான் இல்லை. எனது படங்களின் வியாபாரம் பற்றியும் எனக்குத் தெரியாது.
‘விசாரணை’ படத்தின் பாதிப்பில் இருந்து எப்படி வெளியே வந்தீர்கள்?
அது மிகவும் கஷ்டமாக இருந்தது. பாலு மகேந்திரா சார் இருக்கும்போது அவரிடம் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று போனதில் இருந்து எனக்கு வெற்றிமாறன் சாரைத் தெரியும். பிறகு அவர்கள் சொல்லித்தான் நடிப்பு கற்றுக் கொள்ளச் சென்றேன். எனக்கு வெற்றிமாறன் சார் மீது பெரிய நம்பிக்கை உண்டு. அவர் என்ன சொன்னாலும் மறுவார்த்தை சொல்லாமல் செய்துவிடுவேன். நான் மட்டுமல்ல,
‘விசாரணை'யில் நடித்த அனைவருமே அப்படத்தின் கதை மற்றும் வெற்றிமாறன் சார் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்து உழைத்தோம்.
அப்படத்தின் இறுதிக் காட்சியில் கால்வாயில் இறங்கி நடிக்கும் போது பக்கத்தில் பாம்புகள், பூச்சி கள், முள் செடிகள் எல்லாம் இருக் கும். லுங்கியைக் கட்டிக் கொண்டு 6 நாட்கள் அக்காட்சியில் நடித்தேன். அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் வெற்றிமாறன் சார் அலுவலகத்தில் யோகா சொல்லிக் கொடுத்தார்கள். நான் மட்டுமல்ல மொத்த குழுவுமே யோகா செய்து படத்தின் பாதிப்பில் இருந்து வெளியே வந்தோம்.
‘கபாலி’யில் உங்களுக்கு வசனமே கிடையாது என்கிறார்களே?
‘கபாலி’யில் நான் அறிமுகமா கும் காட்சியிலேயே 2 பக்க வசனம் பேசியிருக்கிறேன். உதவி இயக்குநர் மோசஸ் எனக்கு முன்பே வசனம் கொடுக்க மறந்துவிட்டார். கடைசி நேரத்தில் கொடுத்தார்கள். அந்தக் காட்சியில் ரஜினி சார் திரும்பி நின்றுக் கொண்டிருப்பார், நான் வசனம் பேச வேண்டும். ஷாட் ரெடி என்றவுடன் 5 நிமிடத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே மொத்த வசனத்தையும் மனப்பாடம் செய்து பேசி முடித்தேன். ரஜினி சார் மிகவும் பாராட்டினார்.
‘கபாலி’ படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் பழகிய நாட்களைப் பற்றி சொல்லுங்கள்?
அவர் என்னிடம், “நான் ‘அட்டக்கத்தி’ படத்தை 2 முறை பார்த் தேன்” என்றார். “உனக்கு எத்தனை காதல் தோல்விகள்?” என்று கேட்டார். சொன்னேன். பிறகு அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை கூறி னார். ‘விசாரணை’ படத்தின் டிரெயிலரைக் காண்பித்தவுடன் ஷாக் ஆகி விட்டார். தனுஷ் தயாரிப்பா?, வெற்றிமாறன் இயக்கமா? என்று ஆச் சர்யத்துடன் கேட்டார். என்னுடைய பிறந்த நாளுக்கு சாக்லெட் கொடுத்துவிட்டு, “எப்போ சார் விசாரணை படம் பாக்குறீங்க?” என்று கேட்டேன். .
அடுத்த நாள் படப்பிடிப்புக்கு வரும்போதே “தினேஷ்.. பிலிம் ஹிட்.. இந்திய திரையுலகிலேயே இப்படி ஒரு படம் வந்த தில்லை” என்று பாராட்டினார். “என்னுடைய நண்பர்களுக்கெல்லாம் போட்டுக் காண்பிப்பேன்” என்றார். கோவாவில் படப்பிடிப்பு நடந்த போது பைக்கில் ஒரு ரவுண்ட் போகலாம் என்று திட்டமிட்டோம். அது நடக்காமல் போய்விட்டது. இன்னும் நிறைய இருக்கிறது, அதைப்பற்றி யெல்லாம் படம் வெளியாகும் தருணத்தில் பேசலாமே.
ரஜினியிடம் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?
ரஜினி சாரிடம் பழகிய போது சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு அவர் தகுதியானவர் என தெரிந்து கொண்டேன். வாழ்க்கை அவ்வளவு எளிதாக எதையும் கொடுத்துவிடாது என்பதை கற்றுக் கொண்டேன். அந்த பெயரை வாங்க அவர் எவ்வளவு தியாகங்களைச் செய்திருப்பார் என்று நினைத்தேன்.
‘ஒரு நாள் கூத்து’ படம் எப்படி வந்திருக்கிறது?
நான் முதன் முதலில் தலையை சீவி நடித்த படம் ‘ஒரு நாள் கூத்து’. என் முந்தைய படங்களைப் போல இந்த படம் இருக்காது. ரொம்ப யதார்த்தமான, கலர்ஃபுல்லான படம். ஐடி நிறுவனத்தில் பணியாற்றுபவராக நடித்துள்ளேன். படம் பார்ப்பவர்கள் இது நம்முடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கிறதே என்று எண்ண வைக்கும் வகையில் இப்படம் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT