Published : 23 May 2017 10:02 AM
Last Updated : 23 May 2017 10:02 AM

ஓவியங்களுக்கு உயிர் இருந்தால் எப்படி இருக்கும்?- ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் நேர்காணல்

“சாய்பாபா, சார்லி சாப்ளின், அன்னை தெரசா சிலைகளை நேரில் பார்ப்பது போல இருக்கிறது எனப் பலர் சொல்கிறபோது சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு சிலை உருவாக்கத்தையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அதற்குப் பின்னால் அவ்வளவு உழைப்பு இருக்கிறது எனப் பேசத் தொடங்கினார் ஏ.பி.ஸ்ரீதர்.

தற்போது க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகம், கேமரா அருங்காட்சியகத்தைத் தொடர்ந்து சிலிக்கான் அருங்காட்சியகத்தைத் தொடங்கியுள்ளார் ஏ.பி.ஸ்ரீ தர். அவருடன் ஓர் உரையாடல்…

சிலிக்கான் அருங்காட்சியகம் உருவாக்கும் எண்ணம் எங்கிருந்து தொடங்கியது?

லண்டன் ‘மேடம் துஸாட்ஸ்’ அருங்காட்சி யகத்தில் 250 ஆண்டுகளாக மெழுகுச் சிலைகள் செய்து வருகிறார்கள். சிங்கப்பூர், பாங்காக், ஹாங்காங் உள்ளிட்ட இடங்களில் உள்ள அருங்காட்சியகத்தையும் பார்த் தேன். அங்குள்ள சிலைகளைப் பார்த் தாலே இது சிலை என்பது புரியும். அதைத் தாண்டி என்ன செய்யமுடியும் என்று யோசித்தேன். கூகுளில் தேடியபோது, சிலிக் கானை வைத்துச் சிலை வடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததை அறிந்தேன்.

அப்போது ரவி என்ற சிற்பத் துறையில் அனுபவம்வாய்ந்த ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் சிலிக்கானைப் பற்றி பேசும்போது, தன்னுடைய அனுபவங்களைப் பற்றியெல் லாம் சொன்னார். “நீங்கள் யாரைச் சிலை யாக வடிக்க வேண்டும் என நினைக்கிறீர் களோ, அவர்களை ஓவியமாக வரைந்து கொடுங்கள் என்று ரவி அண்ணா கேட்டார். முதற்கட்டமாக 15 பேரை வரைந்து கொடுத் தேன். சிலிக்கான் சிலைக்குத் தாக்‌ஷா தயா என்பவரை ஆடை வடிவமைக்க ஒப்பந்தம் செய்தேன். ஏனென்றால் இதற்கு உடனே ஆடை வடிவமைக்க முடியாது. தனித்தனியாகத் தைத்து ஒட்ட வைக்க வேண்டும். சரியாகப் பொருந்தவில்லை என்றால் சிலையின் உண்மைத்தன்மை போய்விடும்.

ஏன், தமிழ்நாட்டு பெரியவர்களை விடுத்து, வெளிநாட்டு கலைஞர்களை அதிகமாக வடிவமைத்துள்ளீர்கள்?

ஜாக்கி சானை தமிழகம் ஒருமுறைதான் பார்த்துள்ளது. சார்லி சாப்ளினை நாம் பார்த்ததே இல்லை. இப்படித் தமிழகம் பார்க்காதவர் சிலைகளை முதலில் உரு வாக்கவேண்டும் என விரும்பினேன். மோன லிசாவை 498 வருடமாகக் கழுத்துக்குக் கொஞ்சம் கீழே வரைதான் ஓவியமாகப் பார்த்து வருகிறோம். ஆனால், நாங்கள் முழுமையாக உருவாக்கினோம். வெளி நாட்டு ஆட்களைப் பற்றி தகவல்கள் சேகரிக்கும்போது நிறைய கிடைக்கிறது.

நம்ம ஆட்களைப் பற்றிய தகவல்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை. ஓர் உருவத்தை 3டி வடிவில் முழுமையாகக் கழுத்து, முதுகு எனச் சிலையாக வடிவமைப் பது மிகவும் கடினம். தமிழகத்தின் பெருமை வாய்ந்த அனைவரையும் சிலையாகச் செய்வேன். வள்ளுவர், பாரதி, கே.பால சந்தர் சார், நாகேஷ் சார் என பலரையும் வடிவமைக்கும் எண்ணம் உள்ளது.

யாருடைய சிலையை வடிவமைக்கும்போது மிகவும் கடினமாக உணர்ந்தீர்கள்?

முதல் சிலையே அப்பு கமல் சாரைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். குறைந்த அளவு புகைப்படங்கள் இருந் ததை வைத்து வேலையைத் தொடங்கி னோம். இதில் நிறைய சிலைகளை முடித்து விட்டோம், ஆனால், கமல் சாரின் சிலை மட்டும் இன்னும் முழுமையடையவில்லை. ’யாரும் கமல் சாரின் நடிப்பைக் காப்பியடிக் காதீர்கள். அது முடியாது’ என மோகன்லால் சார் அடிக்கடி சொல்வார். ஆனால், படத்தில் உள்ளது போல அவருடைய சிலையைக் கூட செய்ய முடியாது என்பதைச் சிலையை வடிவமைக்கும்போதுதான் தெரிந்துகொண்டோம்.

இப்போது 'விஸ்வரூபம்' கமல் சாரைச் செய்துகொண்டிருக்கிறோம். அந்தச் சிலை நினைத்தது போலவே அற்புதமாக வந்து கொண்டிருக்கிறது. முதலில் 'விஸ்வரூபம்' கமல் சாரைச் செய்துவிட்டு, அடுத்துத் தொடர்ச்சியாக அவருடைய பல்வேறு கதாபாத்திரங்களை வடிவமைத்து ஒரு தனி அருங்காட்சியகமே செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளேன். சிலையைக் காணும்போது அதிர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லாமல் செய்துகொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு சிலைக்குப் பின்னும், நீங்கள் பார்க்கும் அந்த மனிதர் எவ்வளவு பெரிய ஆள் என்பதை இப்போது உள்ள தலைமுறை தெரிந்துகொள்ளும் வகையில் வீடியோவாகத் திரையிடும் எண்ணமும் உள்ளது. அடுத்தகட்ட விரிவாக்கத்தில் இதெல்லாம் சேர்ந்து இருக்கும்.

இந்த அருங்காட்சியகத்தை விரிவாக்கம் செய்யும் எண்ணம் இருக்கிறதா?

கண்டிப்பாக... இந்தியாவில் 3 இடங் களிலும், அதனைத் தொடர்ந்து உலகளவி லும் எடுத்துச் செல்லும் எண்ணம் இருக் கிறது. ஆனால், ஓவியங்கள் போல உடனடியாக நிறையச் செய்துவிட முடி யாது. ஒரு சிலை செய்யும் நேரத்தில் 15 ஓவியங்கள் வரைந்துவிடலாம். இனி மேல், அடுத்த ஆண்டுதான் அடுத்த அருங் காட்சியகம் கொண்டுவர முடியும். ஆனால், எவ்வளவு வேகமாக முடியுமோ அதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

க்ளிக் ஆர்ட், கேமரா மற்றும் சிலிக்கான் அருங்காட்சியகம் தொடங்கியுள்ள உங்களு டைய அடுத்த திட்டம் என்ன?

ஓவியம் பேச வேண்டும். அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல் பேசும் ஓவிய அருங்காட்சியகத்தை சிங்கப்பூரில் தொடங்கவுள்ளேன். தற்போது அனைத்து ஓவியங்களுமே உயிரற்றுள்ளது. அதற்கு உயிர் இருந்தால் எப்படியிருக்கும்? அதுதான் எண்ணம். அதற்கான ஆராய்ச்சி எல்லாம் முடிந்துவிட்டது.

3 ஓவியங்கள் முயற்சிசெய்து முடித்துவிட்டேன். அந்த ஓவியத்துக்கான முதற்கட்ட ஓவியம் மட்டுமே என்னால் வரையமுடியும். பின்னால் ஓர் அணி வேலை செய்ய வேண்டியுள்ளது. அந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டால், உலகளவில் நாம் நமது சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். ஓவியம் பேசுவது என்பது மொத்த அருங்காட்சியகத்துக்கான சவால் ஆகும்.

அதே போன்று ’Around the World in 1 Minute’ என்ற பெயரில் ஒரு திட்டமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உலகத்தை உங்களால் ஒரு நிமிடத்தில் சுற்றி வர முடியாது. ஆனால், அந்த அனுபவத்தை அளிக்கும் அற்புதமான முயற்சியை வீடியோ வடிவில் செய்து கொண்டிருக்கிறேன். எனது அருங்காட்சியகத்துக்குள் 10 நிமிடங்கள் வந்தீர்கள் என்றால், அடுத்த 11-வது நிமிடத்தில் உலகத்தையே சுற்றியதற்கான வீடியோ உங்களுடைய தொலைபேசியில் இருக்கும்.

படங்கள். க.ஸ்ரீபரத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x