Published : 28 Jun 2019 07:38 PM
Last Updated : 28 Jun 2019 07:38 PM
ஒரு வாரக் கெடுவுக்குள் தன் பதவியைக் காப்பாற்றுவதற்காக தீவிரமாகப் போராடும் எமதர்மனின் கதையே 'தர்மபிரபு'.
எமலோகத்தை ஆட்சி செய்யும் எமதர்மன் (ராதாரவி) தனக்கு வயதாகிவிட்டதால் அடுத்து யாரை தன்னுடைய பதவிக்கு நியமிக்கலாம் என்று யோசிக்கிறார். நம் மகனையே நியமிக்கலாம் என்று ராதாரவியிடம் அவரது மனைவி ரேகா சொல்கிறார். வாரிசு அரசியலாகிவிடும் என்று தயங்கும் ராதாரவி, பலத்த யோசனைக்குப் பிறகு சம்மதிக்கிறார். பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க யோகி பாபு தர்மபிரபுவாகப் பதவியேற்கிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சித்ரகுப்தன் (ரமேஷ் திலக்) சூழ்ச்சி செய்கிறார். இதனால் உயிரை எடுக்க வேண்டிய யோகி பாபு சிறுமியின் உயிரைக் காப்பாற்ற, அது அவரின் பதவிக்கே ஆபத்தாக முடிகிறது.
ஏழு நாட்களுக்குள் இதுவரை செய்த அனைத்துத் தவறுகளையும் சரி செய்துவிட்டால் எமதர்மனாகப் பதவியில் நீடிக்கலாம். இல்லாவிட்டால் எமலோகத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு புது உலகத்தைப் படைப்பேன் என்கிறார் சிவபெருமான் (நான் கடவுள் ராஜேந்திரன்). இதனிடையே யோகி பாபு செய்த தவறுக்காக அவரது தந்தை ராதாரவியைத் தண்டிக்கிறார். தந்தையை மீட்கவும், எமலோகத்தைக் காக்கவும், பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும் யோகி பாபு செய்த தவறுகளை சரி செய்ய வேண்டும்.
இந்நிலையில் சித்ரகுப்தனின் சூழ்ச்சி என்ன ஆனது, அதிகம் படிக்காத யோகி பாபு சாமர்த்தியமாகச் செயல்பட்டாரா, பதவியைத் தக்கவைத்துக் கொண்டாரா, சிறுமியின் உயிரைக் காத்தவருக்கு வந்த இக்கட்டான சூழலை எப்படி எதிர்கொள்கிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் அளவுக்கு கதைக்களம் இருந்தும் ரசிகர்களைச் சிரிக்க வைக்க மாட்டேன் என்று அடம்பிடித்திருக்கிறார் இயக்குநர் முத்துக்குமரன்.
யோகி பாபு முதன் முதலாக நாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மனதை அள்ளிய அவர் நாயகனாக நடித்ததற்காக மகிழ்ச்சி அடையலாம். வாழ்த்து சொல்லலாம். ஆனால், இந்தப் படத்தில் நடித்ததற்காக ரசிகர்கள்தான் வருத்தப்படுகின்றனர்.
உரைநடைத் தமிழ், பேச்சு வழக்கு என இரண்டும் கலந்த மாதிரியான பேச்சால் மூச்சு முட்டும் அளவுக்கு முட்டுக் கொடுக்கிறார். ஆனால், திரைக்கதையின் சொதப்பல் பெரிதாக இருப்பதால் அவரது நடிப்பு கைகொடுக்கவில்லை.
ராதாரவி, ரேகா, நான் கடவுள் ராஜேந்திரன், பாஸ்கி ஆகியோர் இருந்தும் படத்தைத் தூக்கி நிறுத்த முடியவில்லை. கணேஷ், திலீபன், முருகானந்தம் உள்ளிட்ட ஐவர் அமைச்சரவையும் படத்தில் சிரிப்புக்குப் பதிலாக சோர்வையே வரவழைக்கிறார்கள்.
அழகம் பெருமாள் மட்டும் கவனிக்க வைக்கிறார். ஜனனி- சாம் ஜோன்ஸ் விவகாரத்தில் புதுமை இல்லை. அவர்களுக்குப் பெரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. யோகி தேவராஜுக்கு இது 50-வது படம். ஒரு காட்சியில் வந்தாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் தொழில்நுட்ப ரீதியில் பலம் சேர்க்கின்றன. கலை இயக்கம், கிராபிக்ஸ் பணிகளும் தரமாக உள்ளன.
படம் முழுக்க ஒவ்வொரு கதாபாத்திரமும் வாய் வலிக்கப் பேசுவது அலுப்பு. படத்தின் நோக்கம் எதுவென்றே தெரியாமல் திசை தெரியாமல் திரைக்கதை தவிக்கிறது. எமதர்மனின் ஆட்சி குறித்துப் பேசும் படத்தில் அரசியல் சட்டயர், விவசாயிகளின் கடன் பிரச்சினை, மாற்றுக் காதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, சாதி ஆணவக் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பிச்சை எடுத்தல், கர்ப்பிணிப் பெண்ணை போலீஸ் எட்டி உதைத்த விவகாரம், பத்திரிகையாளர்கள் படுகொலை, இந்தித் திணிப்பு என்று எல்லாவற்றையும் துண்டு துண்டாகப் பதிவு செய்கிறது. எதற்கு இதையெல்லாம் இட்டு நிரப்பியிருக்கிறார்கள் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
பெரியார், காந்தி, அம்பேத்கர், நேதாஜி போன்ற தலைவர்கள் இக்காலகட்டத்துக்குத் தேவை என்பதை இயக்குநர் உணர்த்தியிருக்கும் விதம் சிறப்பு.
சமகால அரசியல் தலைவர்களையும் சம்பந்தமே இல்லாமல் சட்டயர் என்ற பெயரில் கலாய்த்தும் விமர்சித்தும் காட்சிகள் உள்ளன. ஆனால், அது படத்துக்கு எந்தவிதத்திலும் பொருந்தவில்லை. மொத்தத்தில் 'தர்மபிரபு' நாடகப் பாணியிலான முழு நீள ஒலிச்சித்திரமாகவே உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT