Published : 14 Sep 2018 06:01 PM
Last Updated : 14 Sep 2018 06:01 PM

“ட்வீட் குறித்து சந்தோஷ் சிவன் வருத்தம் தெரிவித்தார்”: தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.

தயாரிப்பாளர்கள் குறித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அதுகுறித்து சந்தோஷ் சிவன் வருத்தம் தெரிவித்ததாக தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் கூறியுள்ளார்.

முன்னணி ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், தயாரிப்பாளர்களைக் கிண்டல் செய்யும் வகையில் நேற்றிரவு சர்ச்சைக்குரிய ட்வீட்டைப் பதிவு செய்தார். புகைப்படமாக அவர் பதிவுசெய்த ட்வீட்டில், கோபமான முகபாவனை கொண்ட நாய் ஒன்று குரைப்பது போன்ற புகைப்படம், தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுப்பது என்றும், அதே நாய் சிரிப்புடன் இருக்கும் புகைப்படம் நடிகைகளுக்குத் தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுப்பது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குத் தயாரிப்பாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. ‘கலையை நேசிக்கத் தெரியாத பணவெறி பிடித்த, உன் திமிர் பிடித்த விமர்சனத்திற்கு கண்டனம். நீ யாரைச் சொல்கிறாய்? உனக்கு வாய்ப்பு கொடுத்த விஷாலையா? லிங்குசாமியையா? மன்னிப்பு கேள், இல்லையென்றால் உன்னை கலைத் தாய் உணரச் செய்யும்’ என்று ட்விட்டரில் வெளிப்படையாகவே கொதித்தார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்.

இந்தச் சம்பவம் குறித்து முதன்முதலில் வெளிப்படையாக ஒலித்த குரல் என்பதால், அவரிடம் இதுகுறித்து ‘இந்து தமிழ்திசை’க்காகப் பேசினேன். “நானே சந்தோஷ் சிவனிடம் போனில் பேசினேன். தான் தவறை உணர்ந்து, அந்த ட்வீட்டை நீக்கிவிட்டதாகக் கூறினார். நடந்த தவறுக்காக வருத்தமும் தெரிவித்தார். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட ஒருவரை, மேலும் மேலும் காயப்படுத்துவது நன்றாக இருக்காது. எனவே, அத்துடன் இந்த விஷயத்தை விட்டுவிட்டேன்” என்றார்.

சந்தோஷ் சிவன் சொல்வது போல உண்மையில் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குக் குறைவான ஊதியம்தான் கொடுக்கப்படுகிறதா? என்று கேட்டால், “சந்தோஷ் சிவன், நிரவ் ஷா, பி.சி.ஸ்ரீராம் போன்ற முன்னணி ஒளிப்பதிவாளர்கள் குறைவாகவா சம்பளம் வாங்குகிறார்கள்? அல்லது சிறிய தயாரிப்பாளர்களுக்குத்தான் கால்ஷீட் தருகிறார்களா?

குறைவாகத்தான் சம்பளம் வாங்குகிறார்கள் என்றால், சின்ன பட்ஜெட் படங்களிலும் பணியாற்ற வேண்டுமே? ஒருவேளை சின்ன படங்கள் பண்ணாலும், அதில் அவர்களே தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் ஒளிப்பதிவாளராகவும் இருப்பார்கள். அடுத்தவர்கள் என்றால், பெரிய பட்ஜெட் படங்களை மட்டும்தானே ஒப்புக் கொள்கிறார்கள். நடிகைகளுக்கு மட்டும் நிறைய சம்பளம் தருகிறார்கள் என்று சொல்வது தவறு” என்கிறார் ஜே.சதீஷ் குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x