Last Updated : 26 Sep, 2018 04:49 PM

 

Published : 26 Sep 2018 04:49 PM
Last Updated : 26 Sep 2018 04:49 PM

டூ லெட் திரைப்படம் டிசம்பரில் வெளியாகும்: இயக்குநர் செழியன்

 

டூலெட் மக்கள் பார்வைக்காக வரும் டிசம்பரில் வெளியாகும் என்று இயக்குநர் செழியன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் இன்று (புதன்கிழமை) தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவில் முதலாவதாக தேசிய விருது வென்ற டூ லெட் தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டது. அந்நிகழ்வில் இத்திரைப்பட இயக்குநர் செழியன் பங்கேற்றார்.

புதுச்சேரியில் டூ லெட் திரைப்படம் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து இயக்குநர் செழியன் கூறுகையில், “புதுச்சேரியில் முதல்முறையாக சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. முதல் படமாக நான் முதலாவதாக இயக்கிய டூலெட் திரையிடப்பட்டுள்ளது. பரதேசி, தென்மேற்கு பருவக்காற்று, கல்லூரி , ஜோக்கர் என பத்து படங்கள் வரை ஒளிப்பதிவாளராக இருந்துள்ளேன். பல படங்கள் தேசிய விருது வென்றுள்ளன. முதல்முதலாக இயக்குநராக டூ லெட் எடுத்து அதவும் தேசிய விருது கிடைத்தது. 25-க்கும் மேற்பட்ட சர்வதேச விருது கிடைத்துள்ளது. 70 நாடுகளுக்கு மேல் திரையிடப்பட்டிருந்தாலும் நம்ம ஊரான புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழாவில் முதல் படமாக திரையிடப்படுவது மகிழ்ச்சி” என்றார்.

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறிய அனுபவம் எப்படியுள்ளது?

நான் ஒளிப்பதிவாளர், இயக்குநர் என பிரித்து பார்ப்பதில்லை. இரண்டும் ஒரே வேலைதான். ஒளிப்பதிவாளர் பேப்பரில் இருப்பதை ஸ்கீரினுக்கு மாற்றுகிறார். இயக்குநர் உணர்ச்சிவசத்தை கவனமாக பார்த்துக் கொள்கிறார். ஒரு ஒளிப்பதிவளாருக்கு இயக்கமும் தெரியும்போது சினிமாவை நுட்பமாக எடுப்பதற்கு வழியாக அமைகிறது.

டூலெட் எப்போது திரையில் வெளியாகும்?

டூ லெட் திரைப்பட விழாவுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம். சில இடங்களில் சில கட்டுப்பாடுகள் உள்ளதால் என்பதால் விழாக்களுக்கு அனுப்பி வைக்கிறோம். இவ்விழா சுற்றுக்கள் முடிந்த பிறகு கண்டிப்பாக மக்கள் பார்வைக்கு வரும். குறிப்பாக, இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும். யதார்த்தமான படங்களை மக்கள் எந்த அளவுக்கு வரவேற்கிறார்களோ, அதையொட்டியே இதுமாதிரியான படங்கள் வரும். இப்படத்தின் வெற்றி இதுபோல் இன்னும் 10, 20 படங்கள் வெளிவர வழி வகுக்கும்.

அடுத்து இயக்கமா? ஒளிப்பதிவா?

தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளேன். அடுத்து மற்றொரு திரைப்படத்தை இயக்க உள்ளேன். டூ லெட் திரைப்படத்தை தயாரிக்க பெரிய நிறுவனங்களை அணுகிய போது யாரும் முன்வரவில்லை. மாற்றுத்திரைப்படம் என்பதால் என் மனைவி தயாரிப்பாளரானார். அடுத்த படத்தை பெரிய நிறுவனத்துடன் சேர்ந்து செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். என்னை பொறுத்தவரை நல்ல சினிமாக்கள் எடுக்க வேண்டும் என்பதே நோக்கம். அதன்படி படங்களை எடுப்பேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x