Published : 06 Sep 2018 07:02 PM
Last Updated : 06 Sep 2018 07:02 PM
‘நடிகர் விஷாலின் கார் ஓட்டுநராக இருந்த பாண்டியராஜன், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர், கடந்த சில மாதங்களாக வேலைக்கு வராமல், சிகிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், உயர் சிகிச்சைக்குப் போதிய பணவசதி இல்லாமல் அவதிப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாண்டியராஜன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்துப் பேசிய பாண்டியராஜனின் தந்தை, ‘விஷால் நினைத்திருந்தால் என் மகனைக் காப்பாற்றியிருக்கலாம். அவரிடம் இருந்து உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் பாண்டியராஜன் உயிருடன் இருந்திருப்பார்’ எனத் தெரிவித்தார்’ என்று கடந்த இரண்டு நாட்களாக செய்தி பரவி வருகிறது.
இதுகுறித்து விஷால் தரப்பு ‘இந்து தமிழ்திசை’யிடம் பேசியபோது, “அவரை வேலையில் இருந்து நீக்கி ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது. முதலில் ஆபீஸ் பாயாக இருந்த அவர், பின்னர் கார் டிரைவரானார். அதன்பிறகு, விஷாலின் மேனேஜராக இருந்த முருகராஜுக்கு கார் டிரைவராக இருந்தார். முருகராஜை வேலையில் இருந்து நீக்கியபோதே, அவரையும் வேலையில் இருந்து நீக்கிவிட்டனர்.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷிடம் சொல்லி விஷால்தான் மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவச் செலவுகளையும் விஷால் தான் பார்த்துக் கொண்டார். அவரிடம் ‘மது அருந்தக்கூடாது’ என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனால், அதையும் மீறி அவர் மது அருந்தியிருப்பார் போலிருக்கிறது.
மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையைத்தான் பார்த்துக்கொள்ள முடியுமே தவிர, அவரை 24 மணி நேரம் கண்காணித்துக் கொண்டேவா இருக்க முடியும்? வேலையில் இருந்து நீக்கி ஒருவருக்கு மருத்துச் செலவு பார்த்தும், அவர்மீது குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்?” என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT