Last Updated : 27 Sep, 2018 05:49 PM

 

Published : 27 Sep 2018 05:49 PM
Last Updated : 27 Sep 2018 05:49 PM

முதல் பார்வை: செக்கச்சிவந்த வானம்

கேங்ஸ்டர் மரணத்துக்குப் பிறகு அவரது இடத்துக்கு வரத்துடிக்கும் மூன்று மகன்களின் கதையே 'செக்கச்சிவந்த வானம்'.

மிகப்பெரிய கேங்ஸ்டராக வலம் வருகிறார் சேனாபதி (பிரகாஷ்ராஜ்). அவரின் திருமண நாளன்று இருவர் திடீர் தாக்குதல் நடத்த, பிரகாஷ்ராஜும் அவரது மனைவி ஜெயசுதாவும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஊரிலேயே இருக்கும் அரவிந்த்சாமி அப்பாவைப் பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ள, துபாயிலிருந்து அருண் விஜய்யும், செர்பியாவிலிருந்து சிம்புவும் வருகிறார்கள். அப்போதே ஆரம்பித்து விடுகிறது அப்பாவுக்குப் பிறகு யார் அந்த இடத்தை அடைவது, அவரின் வேலைகளைத் தொடர்வது என்று. இந்தப் பிரச்சினை வலுவாக எழுவதற்கு முன்பே பிரகாஷ்ராஜ் இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகு நடப்பது என்ன, யார் ராஜா ஆகிறார், அதற்காக கொடுக்கும் விலை என்ன, இவ்வளவு சேதங்களை, வன்முறைகளை எப்படி போலீஸ் வேடிக்கை பார்க்கிறது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

இன்றைய வெகுஜன ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு படம் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். சினிமாவில் 35 ஆண்டுகளாகத் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் வித்தை தெரிந்தவர், 2.23 மணி நேரப் படத்தை சுவாரஸ்யம் குறையாமல் ரசிகர்களைப் பார்க்க வைத்திருக்கிறார்.

கேங்ஸ்டர் கதாபாத்திரத்துக்கு பிரகாஷ்ராஜை விட்டால் வேறு ஆளில்லை என்பதைப் போல அனாயசமாக நடித்திருக்கிறார். எந்த மிகைத்தன்மையும் அலட்டலும் இல்லாமல் நடித்திருக்கும் விதம் அழகு.

அரவிந்த்சாமிக்கு வழக்கமும் பழக்கமுமான கதாபாத்திரம்தான். அதை இம்மி பிசகாமல் செய்திருக்கிறார். கடைசிவரை நான் பார்த்துக்கிறேன் பார்த்துக்கிறேன் என்று கண்முன் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

கதாபாத்திரத்தின் ஓடு பாதையில் தனித்துத் தெரிகிறார் அருண் விஜய். அப்பா இடத்துக்கு வர ஆசைப்படும் அவர் அந்த இருக்கையில் அமர்ந்தபடி தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதும், மரியாதை நிமித்தமாக அண்ணன்கிட்ட சொல்லாதீங்க என்று சொல்வதும், பின் அதே வீட்டில் அதே இருக்கையில் துள்ளிக்குதித்து கம்பீரமாக அமர்வதுமாக அசத்தி இருக்கிறார்.

அலட்டிக்கொள்ளாத கேஷுவலான நடிப்பை சிம்பு தந்திருக்கிறார். தன் இயல்பான குணாதிசயத்துடன் ஒத்துப்போகும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டிருப்பதால், தனி கெத்துடன் லாவகமான நடிப்பில் பின்னி எடுக்கிறார்.

படத்தின் பெரிய சர்ப்ரைஸ் விஜய் சேதுபதிதான். ஸ்கோர் பண்ணுகிறேன் பேர்வழி என்று மூன்று பேரும் அதிரடிக்க, எல்லோரையும் நடிப்பால் தூக்கிச் சாப்பிடுகிறார். வசனங்களும் நகைச்சுவையும் விஜய் சேதுபதியை மட்டும் தனி ஒருவனாய்க் காட்டுகிறது.

படத்தில் உள்ள பெண் கதாபாத்திரங்களில், ஜோதிகாவுக்கு மட்டும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து கணவனைக் காப்பாற்றப் போராடும் கதாபாத்திரம் என்றாலும் அதில் எந்த ஆழமும் அர்த்தமும் இல்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் சில காட்சிகளில் வந்துபோகிறார். அதுவும் அழ முடியாமல் கோபித்துக்கொள்ளும் இடத்தில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார். அதிதி ராவ் தாராளம் காட்டியிருக்கிறார். ஜெயசுதா கதாபாத்திரம் வலுவாக இல்லை.

தியாகராஜன் கதாபாத்திரம் பில்டப் செய்யப்பட்டது. ஆனால், அதற்கான நியாயத்தை அவர் செய்யவே இல்லை. மன்சூர் அலிகான், டயானா எரப்பா, கவுதம் சுந்தர்ராஜன், சிவா அனந்த் ஆகியோர் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் போட்டிபோட்டு படத்துடன் ஒத்திசைவாகப் பயணிக்கிறது. பின்னணி இசையில் ரஹ்மான் ரகளை செய்திருக்கிறார். முதல் பாதியின் அலுப்பு தெரியாமல் விறுவிறு வேகம் காட்டிய விதத்தில் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் நேர்த்தி.

கேங்ஸ்டர் படம் எடுப்பது மணிரத்னத்துக்குப் புதிதில்லை. அதனால் அடுத்த கட்டமாக, கேங்ஸ்டரின் மகன்கள் பற்றிப் படம் எடுத்திருக்கிறார். கமர்ஷியல் சினிமாவுக்கான கச்சிதங்களை வெகுஜன ரசிகர்கள் விரும்பும் வண்ணம் கொடுத்திருக்கும் மணிரத்னம், கதை என்ற வஸ்துவுக்கு அதிகம் மெனக்கெடவில்லை. ஆனால், திரைக்கதைக்கும் அதே பாணியைப் பின்பற்றியது சரிவரவில்லை. இதனால் ஏகப்பட்ட இடங்களில் லாஜிக் எட்டிப்பார்த்து கேள்விகளாக நீள்கின்றன.

யார் இந்த சேனாபதி? தொழிலதிபரா, கல்வித்தந்தையா, மணல் மாஃபியாவா, அரசியல்வாதிகளின் பினாமியா, எல்லாமா? என்ற கேள்விக்குப் பதில் இல்லை. என்ன முறையற்ற தொழில் செய்கிறார் என்பதையும் சொல்லவில்லை. போலீஸ் தரப்பில் இரு வரிகளில் சேனாபதி குறித்துச் சொல்லப்படுகிறது. அது போதுமானதாக இல்லை. அந்த இடத்துக்கு ஏன் மூன்று மகன்கள் வர ஆசைப்படுகிறார்கள்? அந்த அளவுக்கு அந்த இடத்துக்கு உள்ள சொத்து மதிப்பு, மகத்துவம், மரியாதை அல்லது வேறு என்ன இருக்கிறது என்பதை தெளிவாகச் சொல்லவில்லை.

அரவிந்த்சாமி தன் தவறுகளுக்குச் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் ஒட்டாமல் இருக்கிறது. அருண் விஜய், சிம்புவின் பின்புலமும் தெளிவாக இல்லை. கதாபாத்திரக் கட்டமைப்பில் இயக்குநர் மணிரத்னம் கவனம் செலுத்தவேயில்லை.

தன் மகன்களில் ஒருவர்தான் தன்னைக் கொல்ல முயற்சி செய்தது என்பது பிரகாஷ்ராஜுக்குத் தெரியும். ஆனால், ஏன் அவர் எதையும் செய்யாமல் வெறுமனே நின்று வேடிக்கை பார்க்கிறார்? தப்பிக்க முடியாமல் சுற்றிவளைத்த கும்பலுக்கிடையில் அரவிந்த்சாமி எப்படி தன் மனைவியுடன் தப்பிக்கிறார் போன்ற லாஜிக் கேள்விகளுக்குப் பதில் இல்லை. சில காட்சிகள் யூகித்த மாதிரி அப்படியே நடக்கின்றன.

இந்த லாஜிக் என்பதே வேண்டாம், மணிரத்னம் படம் பார்த்தால் போதும் என்று நினைத்தால், தொழில்நுட்ப அம்சங்களுடன் 'செக்கச்சிவந்த வானம்' ரசிக்க வைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x