Last Updated : 07 Sep, 2018 04:37 PM

 

Published : 07 Sep 2018 04:37 PM
Last Updated : 07 Sep 2018 04:37 PM

முதல் பார்வை: வஞ்சகர் உலகம்

ஒரு கொலைப் பின்னணியில் இருக்கும் மர்மத்தைத் தேடும் போலீஸார் அதனோடு சம்பந்தப்பட்ட கேங்ஸ்டரைப் பிடிக்க முயற்சித்தால் அதுவே 'வஞ்சகர் உலகம்'.

திருமணமான இளம்பெண் மைதிலி (சாந்தினி தமிழரசன்) கொலை செய்யப்படுகிறார். அதற்குக் காரணமான குற்றவாளியைப் போலீஸ் தேடுகிறது. எதிர் வீட்டில் இருக்கும் இளைஞர் ஷண்முகத்தை (சிபி புவன சந்திரன்) சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் விசாரிக்கிறது. இதனிடையே மைதிலியின் கணவர் பாலசுப்ரமணியம் (ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்), சாந்தினியின் முன்னாள் காதலர் க்ரிஷ் ஆகியோர் போலீஸ் கட்டுப்பாட்டில் விசாரிக்கப்படுகிறார்கள். நண்பர் பாலசுப்பிரமணியத்தை போலீஸ் கெடுபிடியிலிருந்து சம்பத் (குரு சோமசுந்தரம்) விடுவிக்கிறார். இன்னொரு பக்கம் துரைராஜ் என்ற மிகப்பெரிய கேங்ஸ்டரைத் தேடும் படலத்தில் போலீஸ் தீவிரமாக இயங்குகிறது. உண்மையில் குற்றவாளி யார், சிபி புவன சந்திரன் என்ன செய்தார், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனை ஏன் போலீஸ் பிடியிலிருந்து குரு சோமசுந்தரம் காப்பாற்றுகிறார், கடத்தல் தொழில் செய்யும் துரைராஜ் யார் என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'ஆரண்ய காண்டம்', 'புதுப்பேட்டை' மாதிரி கேங்ஸ்டரை மையமாகக் கொண்டு ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் மனோஜ் பீதா. அந்த முயற்சி கொஞ்சமும் கைகூடவில்லை என்பதுதான் சோகம்.

படத்தை ஒற்றை மனிதராகத் தாங்கி நிற்கிறார் குரு சோமசுந்தரம். தனக்கு நடந்த அவமானத்தை எதிர்கொண்ட விதத்திலும், கேவலமாகப் பார்த்த சூழலை அழுகையுடன் விவரிக்கும் விதத்திலும் வழக்கமான நடிப்பைத் தந்திருக்கிறார். நான் அஞ்சரை மனுஷன்னு நம்ப மாட்டீங்களா என்று செங்கற்கள் மீது ஏறி நின்று ரௌத்திரம் காட்டும் காட்சியில் சிறந்த நடிகனாக தன்னை வெளிப்படுத்துகிறார். கள்ளமில்லாச் சிரிப்பை உதிர்ப்பது, நான் ஒரு மாதிரியில்லா என அதிர்ந்து சத்தமிடுவது, கண் அசைவுகளில் கோபத்தை வெளிப்படுத்துவது என நுண்ணிய அசைவுகளில் கவனிக்க வைக்கிறார். ஆனால், ஒருவர் மட்டுமே நடித்தால் போதுமா?

பத்திரிகையாளராக வரும் விசாகன் நடிப்பதற்கு எந்த பிரயத்தனமும் செய்யவில்லை. அதனால் அவரது காட்சிகள் அந்நியத்தன்மையுடன் நகர்கின்றன.

சாந்தினி தமிழரசனைச் சுற்றியே கதை நகர்கிறது. ஆனாலும், அவருக்கு நடிக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

சிபி புவன சந்திரனும், வாசு விக்ரமும் பேசும் சில வசனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. அதுவும் இயல்பான சிரிப்பில்லை. வறட்சி நிலையைக் கருத்தில்கொண்டு தட்டையான சில வசனங்களுக்கும் சிரிக்க வேண்டியதாகிவிடுகிறது.

அழகம்பெருமாள், ஹரீஷ் பெராடி, அனிஷா அம்ப்ரோஸ் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு சரியாகப் பொருந்துகிறார்கள். ஜான் விஜய் ஜஸ்ட் லைக் தட் நடிக்கிறேன் பேர் வழி என்று ஒட்டாமலேயே வந்து போகிறார். 'பிச்சைக்காரன்' மூர்த்தி சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக நடித்திருக்கிறார்.

ரோட்ரிகோ டெல் ரியோ ஹெரெரா, சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவில் படத்துக்கான டோன் கச்சிதம். ஃபோகஸ் தான் தேடினாலும் தென்படவில்லை. சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் ரசிக்கும் படி இல்லை. பின்னணி இசை சில இடங்களில் உறுத்தல். விநாயக் வசனம் ஒரே மாதிரியாகவும், சொன்னதை திரும்பச் சொல்வதாகவும் அமைத்திருப்பது அலுப்பூட்டுகிறது. ஆண்டனி எடிட்டிங்கில் புதுமை செய்கிறேன் என்று நினைத்திருக்கிறார். ஆனால், அது படத்துக்குப் பாதகமாகமான அம்சமாகவே உள்ளது.

படம் ஆரம்பத்தில் இருந்தே செயற்கையான காட்சிகளோடு நகர்கிறது. போலீஸ் எல்லாம் முட்டாள் மாதிரியே காட்சிகள் கட்டமைப்பட்டிருப்பது நம்பும்படியாக இல்லை. சில விஷயங்கள் காரணமே இல்லாமல் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சிபி புவன சந்திரனை எப்படி போலீஸ் ஏன் சரியாக விசாரிக்கவில்லை, ஜான் விஜய் ஏன் அழகம்பெருமாள், அனிஷா அம்ப்ரோஸைக் கடத்துகிறார், எந்தப் பின்னணியில் அவர் தப்பிக்கிறார், துரைராஜ் யார் என்பதே தெரியாமல் காவல் துறை தேடுகிறதா என கேள்விகள் நீள்கின்றன. அதற்குக் கிடைக்கும் பதில்களும் பொருந்தாமல் வேறு திசையில் பயணிப்பதால் திரைக்கதை பலவீனம் அடைகிறது. சுருக்கமாகச் சொன்னால் வஞ்சகர் உலகத்தில் வலு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x