Published : 28 Sep 2018 12:44 PM
Last Updated : 28 Sep 2018 12:44 PM
‘பெண்களால் 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு வரமுடியாது’ என நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், இத்தனை வருடங்களாக ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், பக்தியில் பாலினப் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறி, பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பு குறித்து ‘இந்து தமிழ்திசை’க்காக நடிகை கஸ்தூரியிடம் பேசினேன். “காலங்கள் மாற மாற... சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் எல்லாம் தளர்ந்துகொண்டே வருகின்றன. பொதுவாக, 48 நாட்கள் விரதம் இருந்துதான் ஐயப்பன் கோயிலுக்குப் போகவேண்டும் என்பது விதி. ஆனால், இந்த விதிமுறையே இன்று சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்துக்கு எத்தனை நாட்கள் விரதம் இருக்க முடியுமோ, அத்தனை நாட்கள்தான் விரதம் இருக்கின்றனர்.
மாதவிலக்கு என்ற ஒரு விஷயத்தைக் காரணம் காட்டித்தான், சபரிமலைக்குப் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஏனெனில், 48 நாட்கள் விரதம் இருக்கும்போது, இடையில் மாதவிலக்கு ஏற்பட்டால் விரதம் கலைந்துவிடும். அந்தக் காலத்தில், நடைபயணமாகத்தான் சபரிமலைக்குச் செல்வர். அப்படிச் செல்லும்போது மாதவிலக்கு ஏற்பட்டால், அவர்கள் சுத்தம் செய்துகொள்ள வழி இருக்காது. மேலும், ரத்த வாடைக்குக் காட்டு விலங்குகளும் வந்துவிடும்.
ஆனால், இன்றைக்கு மாதவிலக்கு குறித்த புரிதலும், அதை இயல்பான ஒரு விஷயமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வந்துவிட்டது. மேலும், இப்போதெல்லாம் நடைபயணம் என்பதே குறைவாகிவிட்டதே... கார், பஸ்ஸில் சென்று வந்து விடுகிறார்கள். எனவே, மாதவிலக்கை முன்வைத்து கொண்டு வரப்பட்ட இந்த விதி, இப்போது தேவையில்லை என்பதுதானே நியாயம்?
அதை விட்டுவிட்டு, ஆண்களுடைய சுயகட்டுப்பாட்டைப் பெண்கள் குலைத்து விடுவார்கள் என்று சொல்லி, பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பது மிக மிகத் தவறான விஷயம். ஆண்களுக்கு சுயகட்டுப்பாடு குலைவதாக நினைத்தால், நீங்கள் வீட்டிலேயே இருங்கள். பெண்கள் மட்டும் கோயிலுக்குச் சென்று வரட்டும்.
உலகம் முழுவதும் ஐயப்பன் கோயில்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் பெண்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றனர். சபரிமலையில் மட்டும்தான் பெண்களை அனுமதிக்கவில்லை. எல்லா இடங்களிலும் ஐயப்பன் தானே இருக்கிறார்? அப்புறம் ஏன் இந்தப் பாகுபாடு?
உச்ச நீதிமன்றம் மிகச்சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. என்னுடைய கேள்வி, பெண்களால் 48 நாட்கள் விரதம் இருந்து கோயிலுக்கு வரமுடியுமா? நிச்சயம் முடியாது. அப்படியானால், அவர்கள் எத்தனை நாட்களுக்கு விரதம் இருந்தால் போதும் என்ற விதி வகுக்கப்பட வேண்டும்.
அப்புறம், அடுத்ததாக கோயிலுக்கு வரும் பெண்களின் உடை குறித்தும் கலாச்சாரக் காவலர்கள் வருத்தப்படுவார்கள். எனவே, உடை குறித்தும் வரைமுறைகள் வகுக்க வேண்டும். மற்ற ஐயப்பன் கோயில்களுக்குச் செல்வது போல, புடவை, சல்வார் கமீஸ், பேண்ட் - சட்டை அணிந்து வரவும் அனுமதிக்க வேண்டும்” என்றார் கஸ்தூரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT