Published : 22 Sep 2018 10:35 AM
Last Updated : 22 Sep 2018 10:35 AM
‘‘ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒருதன்மை உண்டு. குறிப்பாக ஒவ்வொரு 10 வருஷங்களுக்கும் ஒரு குணம் உண்டு. இந்த படம் 1996-ல் நடக்கிற களம். அப்போது பிளஸ் 2 படிச்ச ரெண்டு பேர் நடப்பு காலகட்டத்துல சந்திக்கும்போது என்ன நடக்குது என்பதுதான் கதை. அதுக்காகத்தான் இந்த படத்துக்கு ‘96’ என்று பெயர்’’ என்கிறார் படத்தை எழுதி இயக்கியுள்ள சி.பிரேம்குமார்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’உள்ளிட்ட சில படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சி.பிரேம்குமார் தனது இயக்குநர் பயணம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்...
பல முக்கிய படங்கள் வெளிவர உள்ள காலநிலை இது. இருந்தாலும் டிரெய்லர் வெளியானதில் இருந்து ‘96’ படத்துக்கான எதிர்பார்ப்பு தனித்து இருக்கிறதே?
எதையும் நாங்கள் திட்டமிட்டு செய்றதில்லை. உண்மையா சொல்லணும்னா ரொம்ப நாட்களுக்கு பிறகு சுத்தமான (ப்யூர்) ஒரு காதல் கதையா இந்த படம் இருக்கும். அதை ஈஸியா மக்களிடம் கடத்திக்கிட்டுப் போக என்ன வழியோ, அதை செய்திருக்கிறோம். பள்ளிப் பருவத்து காதல் பற்றி பேசும்போது எல்லோருக்குமே அதில் ஒரு ஈடுபாடு இருக்கும். அதைத்தான் இதில் தொட்டிருக்கோம்.
பிளாஷ்பேக் பின்னணிக் கதைகள் இங்கு புதிது அல்ல. அதுபோல, நிறைய வந்திருக்கிறதே?
இது டிராவல் படம்னு சிலர் நினைக்கிறாங்க. அதுவும் இல்லை. ஹீரோ ஒரு டிராவல் போட்டோகிராஃபர். பிளஸ் 2 படித்து பிரிந்த ரெண்டு பேர் திரும்பவும் சந்திக்கும்போது, என்ன நடக்குதுன்னு சொல்றது தான் படம். அதுவும் ஒரு இரவில் நடக்குற களம்.
அப்படியென்றால் இது உண்மைக் கதை போல தெரிகிறதே?
இல்லை. உண்மையான ரெண்டு கதாபாத்திரங்களை வெவ்வேறு சூழலில் சந்தித்தேன். அதை அடிப்படையாகக் கொண்டு உருவான கற்பனைக் கதை.
விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரையும் இந்த கதையில் இணைக்கும் எண்ணம் எப்படி வந்தது?
பொதுவாக, கதை எழுதும்போதே முகங்கள் நினைவுக்கு வரும். அப்படி வந்த முகங்கள்தான் இவர்கள் இருவரும். சேது என் பத்தாண்டு கால நண்பன். த்ரிஷா இதுக்கு வருவாங்கன்னு நானும் ஆரம்பத்தில் நம்பவில்லை. இதுதான் வித்தியாசமான கதையாச்சே, எதுக்கும் அவங்ககிட்ட கேட்டுப்பார்ப்போம்னு போனேன். மறுக்காம ஓ.கே. சொன்னாங்க. அப்படித்தான் இருவரும் ஒண்ணு சேர்ந்திருக்காங்க.
டிரெய்லரில் வரும் பின்னணி இசை தனித்து கவனம் ஈர்த்திருக்கிறதே?
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா புதியவர் அல்ல. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தில் கீபோர்டு புரோகிராமரா வேலை பார்த்தவர். சில மலையாள படங்களிலும் வேலை பார்த்தவர். கதையை சொன்னேன். முழுமையாக உள்வாங்கினார். தவிர, அவரும் காதல் திருமணம் செய்தவர் என்பதால், மனப்பூர்வமாக பணியாற்றி இசையில் அசத்தியிருக்கார்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ என்பது உங்களுக்கு நடந்த உண்மைக் கதைதானே. அந்த படத்தை நீங்களே இயக்கியிருக்கலாமே?
நான் திரைப்பட எழுத்தாளர் ஆகணும்னுதான் இங்கு வந்தேன். நான் வந்தபோது, இயக்குநர்களே எழுதிட்டு இருந்தாங்க. அதனால், போட்டோகிராபி பக்கம் தாவினேன். அப்படித்தான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனேன். இப்போதும் எனக்குள் இருக்கும் எழுத் தாளர் எண்ணம்தான் இயக்குநர் ஆக்கி யிருக்கு.
ஒளிப்பதிவாளரே படம் இயக்குவதில் சவால்கள் ஏதும் உண்டா?
எழுத்தாளர் இயக்குநர் ஆகலாம். அதில் ஒரு அர்த்தம் இருக்கு. ஒளிப்பதிவாளர் வேலை அப்படி அல்ல. அது சீரியஸான வேலை. எனவே, ஒளிப்பதிவாளர் புரமோஷனாகி, இயக்குநர் ஆகமுடியாது. எனவே, ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஆகக்கூடாது என்பதே என் கருத்து. அத னால், நான் செய்ததுகூட சரியில்லை. அதே நேரம், எழுத்துதான் என் நோக்கம். சேது விடம் இந்த கதையை சொன்னேன். வேறு ஒருவர் இயக்குவதைவிட நீயே நேரடியாக இறங்கினால்தான் நினைத்த மாதிரி வரும் என்றார். அப்படித்தான் உள்ளே வந்தேன்.
பாலுமகேந்திரா போன்ற பல ஒளிப்பதிவாளர்கள் இங்கு இயக்குநராக சாதித்துள்ளனரே?
பாலுமகேந்திரா போன்ற சில கலைஞர் களுக்கு சினிமா என்பது முழு அத்துபடியாக இருந்தது. ஒட்டுமொத்த சினிமாவும் அவர் களின் கையடக்கமாக இருந்தது. அதனால் அவர்களுக்கு அதெல்லாம் இயல்பாக வந்தது. அந்த புரிதல் நிலை எல்லோருக்கும் வந்துவிடுமா!
உங்கள் அடுத்த பயணம்?
ஒளிப்பதிவாளராக ஓட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், ‘இவர் இயக்குநர் ஆச்சே, ஒளிப்பதிவை மட்டும் பார்க்காமல், இயக்கத்திலும் மூக்கை நுழைப்பாரோ’ என்று கருதி, என்னைத் தவிர்க்கவும் செய்யலாம். எதுவானாலும், எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியை தரக்கூடியது ஒளிப்பதிவு. ஒரு திரைக்கதையை விஷுவலாக்கும் வேலை அழகானது, சுவாரசியமானது.
என் அடுத்த கதையை, ‘96’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எழுதி வருகிறேன். அதில் பாதி வேலை முடிந்துவிட்டது. இயக்கமா, ஒளிப்பதிவா... முதலில் எதை தொடுகிறேன் என்பது விரைவில் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT