Published : 24 Jun 2019 09:53 AM
Last Updated : 24 Jun 2019 09:53 AM
இதை ஏன் செய்கிறேன் என்று கேள்வி கேட்காதீர்கள் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் போது கமல் தெரிவித்தார்.
விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, கடந்த இரண்டு வருடங்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 2017-ம் ஆண்டு ஆரவ்வும், 2018-ம் ஆண்டு ரித்விகாவும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன் 3-வது சீசன் நேற்று (ஜூன் 23) முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.
டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும்.
இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் கமல் தனது ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து கிளம்பி பிக் பாஸ் வீட்டுக்குச் செல்வது போல வடிவமைத்திருந்தனர். அவரது ரசிகர்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து கமலை அனுப்பி வைத்தனர்.
பிக் பாஸ் செட்டுக்குள் சென்றவுடன் கமல் பேசும் போது, ”இது எனக்கு முக்கியமான ஒரு மேடை. மேடை என்று சொல்வதை விட பாலம் எனச் சொல்லலாம். கடல் போன்ற மக்களைச் சென்றடைய இது ஒரு பாலமாக நினைக்கிறேன். அதான் அரசியலுக்கு போய்விட்டீர்கள், பிறகு ஏன் பிக் பாஸுக்கு மறுபடியும் வருகிறீர்கள் என்று பல கேள்விகள் எழுந்தன.
என்னை நானாக காட்டிய ஒரு அற்புதமான மேடை. இதை ஏன் செய்கிறேன் என்று கேள்வி கேட்காதீர்கள். வயிற்றெரிச்சல் வேண்டுமானால் படுங்கள். கேள்வி கேட்கக் கூடாது. இது போன்றதொரு குடும்பம் யாருக்கு வாய்க்கும். தாமதமாகக் கிடைத்தாலும், கிடைத்ததே என்று பெருமைப்பட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று வீட்டுக்குள் சென்றார். அப்போது பெட்ரூமில் இரண்டு பெண்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தமிழ் தெரியாதோ என்று இந்தியில் கேள்விகள் கேட்டார். இந்தி தெரியாது, தமிழ் என்றவுடன் கமல், “தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை ரொம்ப சந்தோஷம். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு தான். ஆனால், நாங்களும் கொஞ்சம் வாழணுமே. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சென்ட்ரலை இப்படிப் போட்டு தாக்குற என்று சொல்லாதீர்கள். தாக்குகிறேன் என்றால் காரணம், நிலவும் சூழல் தானே தவிர வேறொன்றுமில்லை” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து 'ஒரு தாய் மக்கள் நாம் என்போம்' என்ற பாடலைப் பாடிக் கொண்டே அடுத்த அறைக்குச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT