Published : 23 Jun 2019 12:20 PM
Last Updated : 23 Jun 2019 12:20 PM
தபால் ஓட்டுகளில் நிகழ்ந்த குளறுபடியைச் சரிசெய்வது தொடர்பாக நடிகர் பொன்வண்ணன் யோசனை தெரிவித்துள்ளார்.
2019-2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் கடும் பாதுகாப்புடன் தொடங்கியது. பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.
கடந்த தேர்தலில் பாண்டவர் அணியில் துணைத் தலைவர் பதவியிலிருந்த பொன்வண்ணன், இம்முறை போட்டியிடவில்லை.
நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் பொன்வண்ணன் பேசும் போது, “3,000 பேர் இருக்கக் கூடிய உறுப்பினர்களில் 30 பேரைத் தேர்ந்தெடுக்கக் கூடிய நிகழ்வு இது. கடந்த முறை நான் 30 பேரில் ஒருவனாக இருந்தேன். இந்த முறை 3,000 பேரில் ஒருவனாக இருந்து, குழுவைத் தேர்ந்தெடுக்கும் ஒருவனாக இருக்கிறேன். என் மனசாட்டிப்படி வாக்களித்திருக்கிறேன்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தேர்தல் நேரத்தை வகுப்பது தான் சட்டத்தில் உள்ளது. அந்த தருணத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு சில நாட்கள் ஒதுக்குவார்கள்.
ஆனால், தபால் ஓட்டு என்பது அதை போஸ்ட் பண்ணி அது போய் சேரும் நேரம் என நிறைய விஷயங்கள் உள்ளன. அந்த விஷயத்தை வெறும் சட்டத்தை மட்டும் வைத்து வகுக்கக் கூடாது. தேர்தல் விதிமுறைகளில் தபால் ஓட்டுகளுக்காக இன்னுமொரு 2 நாட்கள் அதிகமாகக் கொடுக்கப்பட வேண்டும். யாரும் திட்டமிட்டுக் குளறுபடி செய்திருக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார் பொன்வண்ணன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT