Last Updated : 12 Jun, 2019 01:03 PM

 

Published : 12 Jun 2019 01:03 PM
Last Updated : 12 Jun 2019 01:03 PM

கிரேசி மோகனுக்கு எந்த நோயும் இல்லை; ஜூன் 10 அன்று நடந்தது என்ன? - மாது பாலாஜி விளக்கம்

கிரேசி மோகனுக்கு எந்த நோயும் இல்லை என்றும், ஜூன் 10 அன்று நடந்தது என்ன என்பது குறித்தும் மாது பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் ஜூன் 10-ம் தேதி மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் பலர் நேரிலும், சமூக வலைதளத்திலும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்தனர்.

கிரேசி மோகன் மறைவைத் தொடர்ந்து, பலரும் அவருக்கு சர்க்கரை வியாதி, பிபி, மருத்துவர்கள் அஜாக்கிரதை என்றெல்லாம் தகவலைப் பரப்பினார்கள். இது பெருமளவில் விவாதப் பொருளானது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிரேசி மோகனின் இளைய சகோதரர் மாது பாலாஜி ஃபேஸ்புக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என்னோட அண்ணன் கிரேசி மோகன் ஜூன் 10-ம் தேதி அன்று மதியம் 2 மணிக்கு காலமானார். இதற்காக உலகமெங்கிலும் பலர் மெசேஜ் அனுப்பிச்சிருக்காங்க. நிறையப் பேர் இரங்கல் தெரிவிச்சிருக்காங்க. அவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பதிவு இப்போது போடுவதற்கு காரணம் என்னவென்றால், நாங்கள் அனைவருமே மிகவும் சோகத்தில் இருக்கிறோம். அவர் வியாதி வந்தோ, கஷ்டப்பட்டோ மரணிக்கவில்லை. திடீரென்ற மரணத்தால் எங்களுக்கே ஷாக் தான்.

ஜூன் 10-ம் தேதி காலையில் வாக்கிங் போயிட்டு வந்து, மோகனைச் சந்தித்தேன். வழக்கம் போல் சந்தோஷமாகத் தான் இருந்தார். அவருக்கு பிபி, சுகர் போன்ற எந்தவொரு வியாதியுமே கிடையாது. தவறான தகவல்களைப் போடுகிறார்கள். மூன்று மாதத்துக்கு முன்பு கூட செக் பண்ணிப் பார்த்தோம். அதில் கூட எவ்வித பிரச்சினையுமே இல்லை.

காலை 9.15 மணிக்கு அவர் சாப்பிடும் நேரம். அன்று காலை வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு, 9:45 மணிக்கு என்னை அவர் அழைத்தார். 'பாலாஜி கொஞ்சம் மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. அடிவயிறு வலிக்குது. கொஞ்சம் வர முடியுமா' என்று கேட்டார். உடனடியாக வீட்டுக்குச் சென்றேன். அவரால் மூச்சு விட முடியவில்லை. உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு காவேரி மருத்துவமனைக்குச் சென்றோம்.

அங்குள்ள மருத்துவர்கள் அவரை மிகப் பிரமாதமாக கவனித்தார்கள். அவர்களுடைய பணி சிறப்பானது.  காலை 10 மணி தொடங்கி மதியம் 2 மணி வரை அவர்களால் என்னவெல்லாம் முடியுமோ செய்து அவரை மீட்டெடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் தீவிரமான அட்டாக் என்பதால் அவர் காலமாகி விட்டார்.

மோகனுக்கு சுகர், பிபி, மருத்துவர்கள் கவனிக்கவில்லை போன்ற தகவல்களைப் பரப்பாதீர்கள். அனைத்துமே தவறான செய்தி. அவருடைய இறுதி நாள் வரை நல்லபடியாகத்தான் இருந்தார். முந்தைய நாள் இரவு கூட பெருமாள் பெயரில் 12 கவிதை எழுதி வைச்சுட்டுத் தான் போயிருக்கார். அவருக்கு எவ்விதமான வியாதியுமே கிடையாது. நம்மை சோகத்தில் ஆழ்த்த வேண்டும் என்று சந்தோஷமாகப் போய்விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x