Published : 21 Jun 2019 08:05 AM
Last Updated : 21 Jun 2019 08:05 AM
கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை, கல்லூரிக் கால நண்பர்கள் சந்திப்புபோல, திரைத்துறை கடந்து பலரும் கொண்டாடி வருகின்றனர். படத்தில் இடம்பெற்ற ‘வாழைப்பழ’ காமெடி தொடங்கி ‘சொப்பன சுந்தரி கார்’ காமெடி வரை இப்போதைய மீம்ஸ் யுகத்திலும் பிரபலமாக வலம்வருகின்றன.
இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் கங்கை அமரன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ‘‘கரகாட்டக்காரன் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு உள்ளது. முதல் பாகத்தில் நடித்த அதே படக்குழுவினர் நடிக்க பேச்சுவார்த்தையும் நடக்கிறது’’ என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ராமராஜனிடம் பேசலாம் என சென்றபோது ‘‘ரெண்டாம் பாகமா.. என்னய ஆள விடுங்கப்பா..’’ என ‘கரகாட்டக்காரன் - முத்தையா’ போலவே சிரிக்கிறார். இனி அவருடன் நேர்காணல்..
தமிழ் திரையுலகில் சாதனை படைத்த படங்களில் ஒன்று ‘கரகாட்டக்காரன்’. அதன் நினைவுகள் பற்றி..
மதுரை நடனா தியேட்டர்ல அன்னைக்கு ரெகுலர் ஷோவாகவே அந்த படம் 375 நாள் ஓடிச்சு. மெட்ராஸ்ல சிஃப்டிங் முறையில 100 நாள் ஓடி சாதனை புரிந்தது. மொத்தமா 485 நாட்கள் வரை ஓடின படம். அப்போகூட நான், ‘‘இன்னும் 15 நாள் ஓடினா 500 நாள்னு ஒரு கணக்கா இருக்குமே’’ன்னு சொல்லிட்டிருந்தேன். அப்படி பெயர் வாங்கின படம் அது.
சரி, அதன் இரண்டாம் பாகத்தை ஏன் தவிர்க்க வேண்டும்?
அந்த காலகட்டம், நடிகர்கள் குழு, அப்போ இருந்த அமைப்பு.. இதெல்லாம் நிச்சயம் திரும்ப வராது.
இன்றைக்கு இரண்டாம் பாகம் படங்கள் நிறைய வருகிறதே..
வரலாம். ஆனா முதல் படம் வாங்கின பேர், புகழை இரண்டாம் பாகம் எடுத்துச்சா? ஹரி - சூர்யா இரண்டு பேரும் திறமைசாலிங்கதான். ஆனா, ‘சிங்கம்’ அளவுக்கு ‘சிங்கம் 2’ பேசப்படலையே. ரஜினி நடிப்பில் வந்த படம் ‘வேலைக்காரன்’. திரும்ப அதே பெயரை வைத்து படம் எடுத்து, முதல் பாகத்துக்கு கெட்ட பெயர் சம்பாதிச்சுக் கொடுத்துரக் கூடாது. அதிமுக கட்சிக்காரனா இருக்குறதால மக்கள்கிட்ட நேரடியாக பேசி, பழகுற வாய்ப்பு எனக்கு இருக்கு. போற இடத்தில எல்லாம் இன்னைக்கும் தாய்மார்கள் என்னை கொண்டாடுறாங்க. அவங்ககிட்ட கெட்ட பெயர் எடுக்க விரும்பல.
அதனால்தான் நடிப்பதையே குறைத்துக் கொண்டீர்களா?
அப்படி எதுவும் இல்லை. எனக்கு என் கதா பாத்திரம் முக்கியம். ‘பார்ட்டி’ படத்துக்காக தம்பி வெங்கட்பிரபு கூப்பிட்டாங்க. ‘அயோக்யா’, ‘என்ஜிகே’ படங்களில் நடிக்க வும் வாய்ப்பு வந்தது. எனக்கு ஹீரோ வேண் டாம். ஆனா என் கதாபாத்திரம் ஹீரோயிஸமா இருக்கணும். என்னய தாதாவா, ரவுடியா பார்க்க யாராச்சும் விரும்புவாங்களா.. அதனாலதான் தவிர்த்துட்டேன். நல்லா அமைந்தால் பார்க்கலாம். இல்லைன்னா இயக்கத்துல கவனம் செலுத்தலாம்னு இருக்கேன். நாலு, அஞ்சு கதைகளும் ரெடி பண்ணியிருக்கேன். மனுஷன் இப்படித்தான் வாழணும்னு ஒரு ரூட் இருக்கு. எப்படியும் வாழலாம்னு ஒரு ரூட் இருக்கு. இதில் நான் முதல் ரகமா இருந்துட்டுப் போறேனே.
கங்கை அமரனுக்கு இதுதான் பதிலா?
நானும், அவரும் அண்ணன் தம்பியா பழகுற ஆளுக. அப்படியே உட்கார்ந்தா ஊர் கதை, உலக கதைன்னு நேரம் போறதே தெரியாது. ‘கரகாட்டக்காரன்’ படம்கூட சாதாரணமா போற போக்குல எடுத்த படம்தான். இந்த ரெண்டாம் பாகம் பற்றி பேச்சு வரும்போதெல்லாம், ‘‘அண்ணே வேணாம்னே.. எனக்கு செட் ஆகாது. நீங்க மத்த ஆளுகளை வேணும்னா வச்சிக்கங்க. என்னய விட்ருங்க’’ன்னு அவர்கிட்ட சொல்லி இருக்கேன். இது அவருக்கும் தெரியும். இப்பவும் அதைத்தான் சொல்றேன்.
நடிகர் சங்க உறுப்பினரான நீங்கள், நடிகர் சங்க செயல்பாடுகள் குறித்து எதுவும் பேசுவதே இல்லையே?
அந்தந்த கோயிலுக்கு அந்தந்த பூசாரின்னு நம்ம ஊர்ல ஒரு வழக்கம் இருக்கு. விஷால் தம்பி நல்லா நடிச் சிட்டிருக்கும்போது எதுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்னு எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கிறார்னு தெரியல. தேர் தலே வேணாம். சிவகுமார் அண்ணன் மாதிரி ஒரு பெரிய மனிதர்கிட்ட நடிகர் சங்க பொறுப்பை கொடுத்துட்டு, தேர்த லுக்கு செலவு பண்ற பணத்தை பேங்க்ல போட்டுட்டு, வர்ற காசை நாடக நடிகர் களுக்கு கொடுக்கலாம்னுகூட சொல்லிப் பார்த்துட்டேன். யாரும் கேட்கிறதா இல்லை. இப்போகூட பாக்யராஜ் சார் போட்டியிடு றாராம். சீனியர் இயக்குநர். நல்ல விஷயம். அவர்கூட பொறுப்புல இருக்கலாம்.
அதிமுக எம்.பி.யாக இருந்தவர் நீங்கள். இப்போது கட்சிப் பணிகளிலும் உங்களை காண முடியவில்லையே..
எம்ஜிஆர் மறைந்தது முதல், கடந்த 30 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். ஜெயலலிதா என்னை எம்.பி.யாக்கி கவுரவம் தந்தார். அவரது காலம் வரை தீவிரமாக கட்சிப் பணி ஆற்றிக்கொண்டுதான் இருந்தேன். பிறகு, கட்சியில் எனக்கென்று ஒரு பொறுப்பு இருந்தால் பிரச்சாரம் செய்வதற்கெல்லாம் கவுரவமாக இருக்கும் என்று முதல்வர், துணை முதல்வரிடம் கூறினேன். என்ன காரணமோ, இதுவரை எனக்கு எந்த பொறுப்பும் வழங்கவில்லை. அதனால்தான், அழைப்பு வந்தும் மக் களவை தேர்தல் பிரச்சாரத்தை நாசூக்காக தவிர்த்துவிட்டேன். ‘ஆர்ஜே’ பாலாஜி நடித்த ‘எல்கேஜி’ படத்தில் துணை முதல்வராக நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் வரும் வசனங்கள் தற்போதைய முதல்வர், துணை முதல்வரை குறிப்பிடக்கூடும் என்பதால், அந்த வாய்ப்பை தவிர்த்தேன். ஆனால், அதே வாய்ப்பை ஏற்று நடித்த மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷுக்கு, படம் வெளியான அடுத்த வாரமே மாநில அளவில் பொறுப்பு தரப்பட்டது. இதில் யாரை நான் குறைகூறுவது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT