Published : 23 Jun 2019 08:01 PM
Last Updated : 23 Jun 2019 08:01 PM
இந்தத் தேர்தல் நடக்காமல் இருந்திருக்கலாம் என்று தேர்தல் முடிந்தவுடன் பாண்டவர் அணியினர் தெரிவித்தனர்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதின.
மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன், பாண்டவர் அணியைச் சேர்ந்த நாசர், விஷால், பூச்சி முருகன், நந்தா உள்ளிட்ட பலரும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசும் போது, “இந்தத் தேர்தல் மிக அழகாக முடிந்தது. எந்தவொரு சலசலப்பும் இல்லாமல் அமைதியாக முடிந்தது. பல தடைகள், மன அழுத்தங்களைத் தாண்டி இந்தத் தேர்தல் நடந்துள்ளது. அனைவரும் வந்து வாக்களிப்பார்களா என்ற பயம் இருந்தது. ஆனால், சட்டரீதியாக தேர்தல் நடந்த வேண்டும் என்று வந்ததால் அறிவித்துவிட்டோம். சுமார் 85% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்கு உதவிகரமாக இருந்த அனைவருக்கும் நன்றி.
இந்தத் தேர்தல் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், எங்களுக்கு எதிராகப் போட்டியிட்டவர்கள் அதை உருவாக்கவில்லை. அது தான் ஒரு சின்ன அழுத்தம். இனிமேல் வாக்குப்பெட்டிகளைப் பாதுகாப்பது தேர்தல் அதிகாரியுடைய வேலை தான்.
எதிரணியினர் தேர்தலில் குளறுபடி என்கிறார்கள். வாக்களிக்க வந்தவர்கள் எங்களிடம் நின்று பேசிவிட்டுச் சென்றார்கள். அதைக் குளறுபடி என்று சொல்ல முடியாது. அதை எங்கள் வேலையின் மீது வைத்திருந்த நம்பிக்கையாகத் தான் பார்க்கிறேன்.
நீதியரசரையோ, நீதிமன்றத்தையோ தவறாகப் பேசக் கூடாது. நாங்கள் இரண்டையுமே கடவுளாகப் பார்க்கிறோம். 3,150 ஓட்டுக்கு இவ்வளவு பெரிய பாதுகாப்பு கொடுத்து நீதிபதி பத்மநாபன் தேர்தல் நடத்தியுள்ளார். இதைக் குளறுபடி என்று சொன்னால், அதற்கு பதில் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்தத் தேர்தலை நிறுத்த எதிரணி 2 நாட்கள் செய்த வேலையே குளறுபடி.
தேர்தலுக்கு முன்பு எதிரணி வைத்த குற்றச்சாட்டுகளும் ஆதாரமில்லாமல் இருந்தது. இப்போது வைக்கும் குற்றச்சாட்டுகளும் ஆதாரமில்லாமல் இருக்கிறது. இருப்பினும், அவர்களை எங்கள் நண்பர்களாக மதிக்கிறோம்.
ஐசரி கணேஷ் நீதிபதியை நிர்பந்தித்தார் என்பது அனைவருக்குமே தெரியும். அந்த வழக்கைச் சந்திக்க வேண்டிய சூழல் இப்போது இருக்கிறது. நடிகர் சங்க சட்ட திட்டங்களிலும் தேர்தல் தொடர்பாக யாரும் தங்களுடைய செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என இருக்கிறது. அனைத்திலுமே சட்டத்தை மீறி, அதை பதிவும் செய்திருக்கிறார். எதிரணியினர் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்குமே ஆதாரம் கிடையாது. நாங்கள் நீதியின் பக்கம் நிற்போம்.
இப்போதும் சொல்கிறோம், இன்னும் 6 மாதங்களில் கட்டிடத்தை முடித்து அதிலிருந்து வருமானத்தை உருவாக்க வேண்டும். இப்போது ஐசரி கணேஷ் சார் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை தரலாம். நான் தான் நடிகர் சங்கம் என்று யாருமே சொல்ல முடியாது. அவர் சொல்லும் அளவுக்கு நன்கொடை வந்தால், பொருளாளர் கார்த்தி சந்தோஷப்படும் அளவுக்கு வேறு யாரும் சந்தோஷப்பட மாட்டார்கள்” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT