Last Updated : 23 Jun, 2019 09:23 AM

 

Published : 23 Jun 2019 09:23 AM
Last Updated : 23 Jun 2019 09:23 AM

நடிகர் சங்க கட்டிடத்துக்காகத்தான் இவ்வளவு பெரிய போராட்டம்’’: விஷால்

நடிகர் சங்க கட்டிடத்துக்காகத்தான் இவ்வளவு பெரிய போராட்டம் என்று விஷால் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

2019-2022ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் கடும் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. பாண்டவர் அணி மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் அணி என இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.

காலையில் தொடங்கிய வாக்குப்பதிவில் இதுவரை 198 வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் நடைபெறும் செயிண்ட் எப்பாஸ் பள்ளிக்கு பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால் வந்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷால் பேசும் போது, “ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுவது சந்தோஷமாக இருக்கிறது. முந்தைய தேர்தல் நடைபெற்ற இடம் என்பதால், அனைவருக்கும் தெரியும். எதிரணிக்கு என் வாழ்த்துகள்.

நடிகர் சங்க கட்டிடத்துக்காகத்தான் இவ்வளவு பெரிய போராட்டம். இந்தக் கட்டிடத்துக்காக நீதிபதியைத் தனியாக சென்று அணுகியதெல்லாம் நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படியெல்லாம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடக்கிறது. அது நேர்மையாக நடக்காது என்று கூறுவது மிகத் தவறானது.நீதியரசர்கள் என்ன சொல்கிறார்களோ, அதைப் பின்பற்ற வேண்டும். ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என்ற தீர்ப்புக்கு ரொம்பவே சந்தோஷப்படுகிறோம்” என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து "உங்களால் தான் பிரச்சினை என்கிறார்களே" என்ற கேள்விக்கு, “ஒருத்தரால்தான் பிரச்சினை என்ற கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட பதவி பொதுச் செயலாளர். அந்தப் பதவி சாதாரணமானது அல்ல என்பது அனைவருக்குமே தெரியும். அனைவரையும் குஷிப்படுத்த வேண்டுமென்றால் ஐஸ்கிரீம்தான் விற்க வேண்டும்” என்று பேசினார் விஷால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x