Published : 05 Jun 2019 04:38 PM
Last Updated : 05 Jun 2019 04:38 PM
நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் என பொன்வண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்தத் தேர்தலை நடத்துகிறார்.
டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.
இந்தத் தேர்தலில் நடிகர்கள் வாக்களிக்க வசதியாக, அன்றைய தினம் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கும்படி சினிமாத்துறையின் மற்ற சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது நடிகர் சங்கம்.
இந்நிலையில், விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யில் யார் யார் போட்டியிடுகின்றனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீமன், ரமணா, பசுபதி, நந்தா, ‘தளபதி’ தினேஷ், சோனியா போஸ், குட்டி பத்மினி, கோவை சரளா, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னாப்பா, பிரகாஷ், அஜய் ரத்னா, பிரசன்னா, ஜூனியர் பாலையா, ஹேமச்சந்திரன், குஷ்பு, லதா, நிதின் சத்யா, ‘பருத்தி வீரன்’ சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த முறை இதே பதவிகளுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த முறை துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்வண்ணன், இந்த முறை தேர்தலில் நிற்கவில்லை. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’இணையதளத்துக்காகப் பொன்வண்ணனிடம் பேசினேன்.
“நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் 3 ஆண்டுகளுக்குள் செய்துவிடலாம் என்றுதான் கடந்த முறை தேர்தலில் நின்று, வெற்றி பெற்றேன். அதில், நிர்வாக ரீதியாகப் பல விஷயங்களைச் செய்திருக்கிறோம்.
கட்டிடம் கட்டும் பணி மட்டும் இன்னும் நிறைவடையவில்லை. கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி பெறுதல், நீதிமன்ற வழக்கு, மழை - வெள்ளம் என கட்டிடப் பணிகளில் பல தாமதங்கள் ஏற்பட்டன. எனவே, நாங்கள் திட்டமிட்ட 3 வருடங்களில் கட்டி முடிக்க முடியவில்லை.
ஆனால், தற்போது உலக வரலாறு ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அது மிகப்பெரிய பணி. நிறைய நூல்களைப் படித்து ஆய்வுசெய்து எழுத வேண்டும். கடந்த முறை நடிகர் சங்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதால், அந்தப் பணியைத் தொடங்க முடியாமல் தள்ளிவைத்து விட்டேன். மறுபடியும் தேர்தலில் நின்று வெற்றிபெற்றால், பெரும்பாலான நேரம் அதற்கே செலவாகிவிடும். மீண்டும் ஒரு 3 ஆண்டுகளுக்கு என்னால் அந்தப் பணியைத் தொடங்க முடியாது.
எனவே, என்னால் நடிகர் சங்க நிர்வாகப் பதவியில் பயணிக்க முடியவில்லை. ‘வருகிற 3 ஆண்டுகளுக்கு என்னால் பொறுப்பில் இருக்க முடியாது’ என நண்பர்களிடமும் விளக்கிவிட்டேன். தேர்தலில் வெற்றிபெற்று எந்த நிர்வாகம் பதவியேற்றுக் கொள்கிறதோ, அவர்களுக்கு என்னுடைய ஆதரவும் உதவியும் தேவையென்றால், கண்டிப்பாக நான் அதைச் செய்வேன்” எனத் தெரிவித்தார் பொன்வண்ணன்.
கடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் வேட்பு மனு தாக்கல் செய்ததால், தன்னுடைய துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பொன்வண்ணன். ஆனால், அவருடைய ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அத்துடன், சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட, ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார் பொன்வண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT