Published : 12 Jun 2019 11:11 AM
Last Updated : 12 Jun 2019 11:11 AM
இயக்குநர் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் தொடர்பான வடிவேலுவின் பேச்சை, இயக்குநர் வெங்கட்பிரபு மறைமுகமாக சாடியுள்ளார்.
சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தனர். இதில், 3 வேடங்களில் வடிவேலு நடிப்பதாக இருந்தது.
ஆனால், படக்குழுவினருக்கும் வடிவேலுவுக்கு ஏற்பட்ட பிரச்சினையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்பு வடிவேலுவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் எட்டவில்லை. மேலும், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகே மற்ற படங்களில் நடிக்கத் தடை போட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
'நேசமணி' உலகளவில் ட்ரெண்ட்டானப் பிறகு தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த வடிவேலு, இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனை ஒருமையில் பேசினார். இது, சினிமாத்துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பேச்சுக்கு சிலர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வடிவேலுவின் பேச்சு தொடர்பாக இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பதிவில் “எப்போதுமே இயக்குநர் தான் கப்பலின் கேப்டன்! ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு, அதுவே நஷ்டம் என்றால், ’டைரக்டர் சொதப்பிட்டான்பா’ இது தான் பரவலாகப் பேசப்படும் ஒன்று. என்ன கொடுமை சார் இது!
ஒரு ஆகச் சிறந்த கலைஞன், தன்னை கதாநாயகனாக வைத்து மிகப்பெரிய வெற்றியைத் தந்த ஒரே தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை தரக்குறைவாகப் பேசியது என்னை மனமுடையச் செய்தது.
இயக்குநர் சிம்புத்தேவனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவர் அருமையான படைப்பாளி மட்டுமில்லை மிகச் சிறந்த மனிதர்! ஷங்கர் அவர்களைப் பற்றி யாரும் சொல்ல அவசியமே இல்லை. அவர் என்றுமே கொண்டாடப்பட வேண்டியவர். எல்லோருமே இங்கு மக்களை மகிழ்விக்கத்தான் இருக்கின்றோம். இதில் வன்மம் வேண்டாமே. அன்பை மட்டும் வளர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சிம்புதேவன் இயக்கி வரும் 'கசட தபற' படத்தை தயாரித்து வருவது இயக்குநர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT