Published : 04 Jun 2019 01:02 PM
Last Updated : 04 Jun 2019 01:02 PM
ஜூன் 23-ல் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, இதர சங்கங்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2015 - 2018 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினத்தில் டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இம்முறையும் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ் ஆகியோர் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரபூர்வமாக இன்னும் தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் நடிகர் சங்கத்திலிருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அதில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019-2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் , சத்யா ஸ்டுடியோ ( டாக்டர் MGR ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்து திரையுலகுக்கு விடுமுறை அளிக்குமாறு நடிகர் சங்கம் சார்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் நடிகர் சங்கம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT