Published : 21 Jun 2019 03:35 PM
Last Updated : 21 Jun 2019 03:35 PM
தமிழ்சினிமாவில், மறக்க முடியாத படங்கள் என்றொரு பட்டியல் உண்டு. மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்கள் என்றும் பட்டியல் இருக்கிறது. வசூலில் சாதனை புரிந்த படம் என்கிற பட்டியலையும் தனியே பார்க்கலாம். மறக்க முடியாத, மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட, வசூலை வாரிக்குவித்த பட்டியல்கள் அனைத்திலும் உள்ளது ‘வசந்த மாளிகை’. சிவாஜியின் ஆகச்சிறந்த நடிப்பில் இன்றைக்கும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது இந்த மாளிகை.
இதோ... இன்றைய தினம் ஜூன் 21ம் தேதி வெள்ளிக்கிழமையன்று, புதுப்பட ரேஞ்சுக்கு டிஜிட்டல் செய்யப்பட்டு, ரிலீஸ் செய்திருக்கிறார்கள், ‘வசந்தமாளிகை’ திரைப்படத்தை! கட் அவுட், மேளதாளம், ஆட்டம்பாட்டம், பலூன் ஆர்ச் என அதே வீரியத்துடனும் குதூகலத்துடனும் வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள் சிவாஜி ரசிகர்கள்.
எழுபதுகளில் கமலும் ரஜினியும் வந்துவிட்டார்கள் என்றாலும் கூட, எழுபதுகளின் ஆரம்ப வருடங்களில், எம்ஜிஆர், சிவாஜி படங்கள் ஏகத்துக்கும் ரிலீசாகின. 1972ம் ஆண்டு, சிவாஜி ரசிகர்களுக்கு மறக்க முடியாத வருடம். எம்ஜிஆர் ரசிகர்களுக்கும்தான்! ஏனென்றால், இதன் பின்னர், படிப்படியாக எம்ஜிஆர் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். கட்சி தொடங்கினார். பின்னர் ஆட்சியமைத்தார்.
72ம் ஆண்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த ‘அன்னமிட்ட கை’ வெளியானது. மஞ்சுளாவுடன் ஜோடி சேர்ந்த ‘இதயவீணை’, ஜெயலலிதா, லட்சுமி ஆகியோருடன் நடித்த ‘சங்கே முழங்கு’, ஜெயலலிதாவுடன் நடித்த ‘ராமன் தேடிய சீதை’, கே.ஆர்.விஜயாவுடன் நடித்த ‘நல்லநேரம்’, ‘நான் ஏன் பிறந்தேன்’ ஆகிய ஆறு படங்களில் நடித்தார். எம்ஜிஆரின் மெகா ஹிட் லிஸ்ட் வரிசைகளில் இந்தப் படங்கள் இல்லை என்பது வருத்தம்தான். என்றாலும் கூட, எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இவை விருந்துதான்!
அதேசமயம், இதே 72ம் வருடம் சிவாஜிக்கு அமர்க்களமான வருடமாகத்தான் அமைந்தது. சிவாஜி நடித்த ஏழு படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகின. இதில் பெரும்பாலும் எல்லாப் படங்களும் வெற்றி அடைந்தன என்றுதான் சொல்லவேண்டும்.
சிவாஜி - கே.பாலாஜி காம்பினேஷன் எப்போதுமே வெற்றிக் கூட்டணி என்பார்கள். பாலாஜியின் தயாரிப்பில், ஜெயலலிதாவுடன் சிவாஜி நடித்த ‘ராஜா’ பாலாஜியின் சென்டிமென்ட்படி, ஜனவரி 26ம் தேதி ரிலீசானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதையடுத்து, அதே 72ம் வருடத்தில், மே மாதம் 6ம் தேதி, வியட்நாம் வீடு சுந்தரம் கதை வசனத்தில், பி.மாதவன் இயக்கத்தில், ‘ஞான ஒளி’ வெளியானது. இந்தப் படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அதே மாதவன், அதே சிவாஜி, ஜெயலலிதாவுடன் நடித்த ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தை யாரால்தான் மறக்கமுடியும்? சோழவந்தான் மூக்கையா தேவர் கேரக்டரும், ‘என்னடி ராக்கம்மா’ பாடலும் ரசிகர் மனங்களில் அப்படியே தங்கிவிட்டன. சக்கைப்போடுபோட்டது.
பிறகு ஜூலை 15ம் தேதி, ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில், ‘தர்மம் எங்கே’ என்கிற ஆக்ஷன் படத்தை எடுத்தார். இதில் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். அடுத்து, முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா சீனிவாசன் இயக்கத்தில், ‘தவப்புதல்வன்’ படத்தில் நடித்தார் சிவாஜி. கே.ஆர்.விஜயா நடித்த இந்தப் படம் 72ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி வெளியானது.
டிசம்பர் 7ம் தேதி, கே.பாலாஜியின் தயாரிப்பில், மீண்டும் ஜெயலிதா ஜோடி. சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் ‘நீதி’ திரைப்படத்தில் நடித்தார் சிவாஜி. முன்னதாக செப்டம்பர் மாதம் 26ம் தேதி ’வசந்த மாளிகை’ ரிலீசாகி, எல்லா சென்டர்களிலும், எல்லா மக்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
ஆக மொத்தம் 72ம் ஆண்டில், சிவாஜி நடித்த 7 படங்கள் ரிலீசாகின. இதில் ’ஞானஒளி’யும் ‘பட்டிக்காடா பட்டணமா’வும், ’தவப்புதல்வன்’ மற்றும் ‘ராஜா’வும் வெற்றிகரமாக ஓடின. 100 நாட்களைக் கடந்து வெற்றி வாகை சூடின. இவற்றுக்கு முத்தாய்ப்பு வைத்தது போல், ’வசந்த மாளிகை’ திரைப்படம், வெள்ளிவிழாப் படமாக சூப்பர்டூப்பர் ஹிட்டடித்தது. சிவாஜியின் நடிப்பிலும் வாணிஸ்ரீயின் நடிப்பிலும் கண்கள் குளமாகின. அழுதுகொண்டே நடிப்பில் மிரண்டு கைத்தட்டினார்கள். வசனங்களுக்கு விசில் பறந்தன. புகழ்பெற்ற பாலமுருகன் வசனம் எழுதியிருந்தார்.
கண்ணதாசனின் எல்லாப் பாடல்களுமே நெஞ்சைத் தொட்டன. ‘ஓ மானிட ஜாதி’, ‘ஏன் ஏன் ஏன்... ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’, ‘குடிமகனே... பெருங்குடிமகனே...’, ’கலைமகள் கைப்பொருளே’, ‘மயக்கமென்ன...’, ‘இரண்டு மனம் வேண்டும்’ ‘யாருக்காக...’ என்று எல்லாப் பாடல்களுமே கொண்டாடப்பட்டது. இவை தவிர, இந்தப் படத்துக்காக கம்போஸ் செய்யப்பட்டு, பாடப்பட்ட பாடலொன்று படத்தில் இடம்பெறவில்லை. ஆனாலும் அந்தப் பாடலும் மிகப்பெரிய ஹிட்டைச் சந்தித்தது. அந்தப் பாடல்... ‘அடியம்மா ராசாத்தி சங்கதியென்ன’ என்ற பாடல்!
இயக்குநர் ஸ்ரீதர் படங்களுக்கு தொடர்ந்து ஒளிப்பதிவு செய்து வந்த வின்சென்ட், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். கே.வி.மகாதேவனின் இசை கிறங்கடித்தது. வண்ணப்படம் வேறு. எனவே அந்தக் காலத்தில் கொண்டாடிக் கூத்தாடினார்கள். இலங்கையில் இந்தப் படம் ஒரு வருடத்தைக் கடந்து ஓடி, வசூல் சாதனை செய்ததாகச் சொல்லுவார்கள்.
சிவாஜிக்கு இணையாக வாணிஸ்ரீ நடிப்பு பேசப்பட்டது. வறட்டுக் கெளரவம், காதல், ஆனால் காதல் தாண்டியும் ஓர் பிடிவாதம், பிடிவாதம் தருகிற பிரிவு, பிரிவால் வருகிற துயரம், துயரத்தால் விளைகிற முடிவு... என சோக காதல் காவியத்தை, தங்களின் காதலாகவே, காதல் தோல்வியாகவே, காதல் வலியாகவே பார்த்தார்கள். அதனால்தான் காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் இன்றைக்கும் தனியிடம் பிடித்து நிற்கிறது ‘வசந்த மாளிகை’.
72ம் ஆண்டு வெளியான ‘வசந்தமாளிகை’ கிட்டத்தட்ட 47 வருடங்களுக்குப் பிறகு, இன்றைக்கு (ஜூன் 21ம் தேதி) டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு, சிவாஜியின் நடிப்பில், பந்துலுவின் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’ இப்படித்தான் ரிலீசானது. மீண்டுமொரு வசூல் மழையைப் பொழிந்தது.
இப்போது வந்திருக்கும் ‘வசந்தமாளிகை’யின் மூலம், மீண்டும் சக்கரவர்த்தி என நிரூபிக்கப் போகிறார் நடிகர் திலகம் சிவாஜி என்று மேளதாளம் முழங்க, ஆட்டம்பாட்டம் என துள்ளலுடன், ஏகப்பட்ட பேனர்களை தியேட்டரில் கட்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இது சிவாஜி எனும் கலைஞனுக்குக் கிடைத்த இன்னொரு கிரீடம். நல்ல, தரமான படங்களை எப்போதுமே ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கான சோறுபதம்!
நடிகர் திலகம் வாழ்க! வசந்தமாளிகை வாழ்க! ரசிகர்கள் நீடூழி வாழ்க!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT