Published : 23 Jun 2019 11:07 AM
Last Updated : 23 Jun 2019 11:07 AM
ரஜினி சாருக்கு தபால் வாக்குச்சீட்டு காலம் தாழ்ந்து போய் சேர்ந்துள்ளது. அதற்கு வருத்தப்படுகிறேன் என்று நாசர் தெரிவித்துள்ளார்.
2019-2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் கடும் பாதுகாப்புடன் தொடங்கியது. பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.
இம்முறையும் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நாசர், காலையிலேயே தேர்தல் நடைபெறும் இடத்துக்கு வந்து பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
அப்போது பத்திரிகையாளர் மத்தியில் பேசும் போது நாசர், “2016-ல் இதே இடத்தில் தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நாங்கள் பாண்டவர் அணி என்று தைரியமாக சொல்லிக் கொள்ளலாம். தேர்தலில் ஜெயித்தவுடன் அனைவருக்கும் பொதுவான வேலைகளைத் தான் செய்து கொண்டிருந்தோம்.
முதலில் இப்படியொரு தேர்தல் நடைபெற வேண்டும் என்று கொண்டு வந்ததே பாண்டவர் அணி தான். 3,000 பேர் இருக்கும் சங்கத்தில் எத்தனை முறை தேர்தல் நடந்தது என்று நிறைய பேருக்குத் தெரியாது. அனைவருக்கும் ஒட்டு போடும் உரிமையுள்ளது என்று உசுப்பிவிட்டதே பாண்டவர் அணி தான்.
பாண்டவர் அணி செய்த வேலைகள், நடிகர் சங்கக் கட்டிடத்தின் நிலைமை, உறுப்பினர்களுக்கு பல விஷயங்கள் செய்தது என அனைத்துமே பாண்டவர் அணிக்கு ஆதரவாக இருக்கும் என நினைக்கிறேன். சென்னையைத் தாண்டியுள்ள அனைவருக்குமே தபால் வாக்கு சென்றாக வேண்டும் என்று தேர்தல் அதிகாரி முடிவு செய்தார்.. அதை அனைவரும் ஒப்புக் கொண்டோம்.
நிறையப் பேருக்கு தபால் வாக்குச்சீட்டு போய் சேரவில்லை. ரஜினி சாருக்கு காலம் தாழ்ந்து போய் சேர்ந்துள்ளது. அதற்கு வருத்தப்படுகிறேன். ஆனால், அந்த விவகாரம் தேர்தல் அதிகாரியிடம், தபால் நிலைய அதிகாரிகளிடம் தான் இருக்கிறது.
நிறையப் பேர் வாக்களிக்க முடியாததில் வருத்தம் தான். 3,100 ஒட்டுகளில் ஒவ்வொரு ஓட்டுமே முக்கியம் தான். ஆகையால், தபால் ஓட்டுகளால் யாருக்கும் சாதகம், பாதகம் என்பதைக் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று நாசர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT