Published : 23 Jun 2019 03:35 PM
Last Updated : 23 Jun 2019 03:35 PM
நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை என்று கமல் தெரிவித்துள்ளார்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை முதல் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வரும் இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், ஓட்டு போட்ட பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய கமல், “3,000 ஒட்டுகள் கொண்ட தேர்தலுக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருப்பது சந்தோஷமாகவும், பதட்டமாகவும் இருக்கிறது. இங்கு அனைவரும் ஒரு குடும்பம். அதில் ஒரு சிலருக்கு தபால் ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. அதில் யாரும் எந்தவொரு சூழ்ச்சியையும் பார்க்க வேண்டாம்.
அது தபால் துறையின் பிழையும், தாமதமும் என்று சொல்லலாம். அடுத்த முறை அது நிகழாமல் பார்க்க வேண்டும். நண்பர் ரஜினியின் ஓட்டு அனைத்து உறுப்பினர்களின் ஓட்டைப் போல மிகவும் முக்கியமான ஒரு ஓட்டு. அது விழுந்திருக்க வேண்டும். அவரும் மிக ஆர்வமாக இருந்தார். அது நடக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது தான். அடுத்த முறை இது போன்று நிகழாமல் தடுக்க வேண்டும்.
வெற்றியாளர்களுக்கு என் வாழ்த்துகள். நடிகர் சங்கப் பெயர் மாற்றம் என்பது பெரும்பான்மையானவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து பார்த்துக் கொள்ளலாம். இந்தத் தேர்தலில் அரசியல் தலையீடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியிருந்தால் இருக்கக்கூடாது என்பது என் வேண்டுகோள்” என்று தெரிவித்தார் கமல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT