Last Updated : 12 Jun, 2019 11:10 AM

 

Published : 12 Jun 2019 11:10 AM
Last Updated : 12 Jun 2019 11:10 AM

மரியாதை இல்லாமல் பேசியிருப்பது தவறான அணுகுமுறை: வடிவேலுவின் பேச்சுக்கு சுசீந்திரன் காட்டம்

மரியாதை இல்லாமல் பேசியிருப்பது தவறான அணுகுமுறை என்று வடிவேலுவின் பேச்சுக்கு சுசீந்திரன் காட்டமாக பதிலடிக் கொடுத்துள்ளார்.

சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தனர். இதில், 3 வேடங்களில் வடிவேலு நடிப்பதாக இருந்தது.

ஆனால், சில பல பிரச்சினைகள் காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களாக இந்தப் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போகிறது. இதனால், வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தடை போட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

சமீபத்தில், தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த வடிவேலு, இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனை ஒருமையில் பேசினார். இது, சினிமாத்துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பேச்சுக்கு சிலர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடிவேலுவின் பேச்சு தொடர்பாக இயக்குநர் சுசீந்திரன் “வடிவேலு அவர்கள், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கர் சார் பற்றி அவர் பேசிய விதம் கண்டிக்கதக்கது. இயக்குநர் சிம்புதேவன் ’இம்சை அரசன் 23-ம் புலிகேசி' மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தன் முதல் படத்தில் மாபெரும் வெற்றிபடத்தை நமக்கு தந்தார். அதன்பிறகும் பல தரமான திரைப்படங்களை நமக்கு தந்துள்ளார். ஒரு இயக்குநரை இவன், அவன் என்று மரியாதை இல்லாமல் பேசி இருப்பது மிகவும் தவறான அணுகுமுறை.

புலிகேசி-க்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்த 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்', 'எலி', 'தெனாலிராமன்' படங்களின் ரிசல்ட் (அவரோட தலையீடு) தமிழ் திரையுலகம் அனைவருக்கும் தெரியும். ஒரு இயக்குநர் என்ற முறையில் வடிவேலு அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x